வாராயோ ரயிலே


(அமெரிக்காவில் தொடங்கி தற்போது இணையத்தில் 'தேசிய கவிதை எழுதும் மாதம்' என்ற பொருண்மையுள்ள 'National Poetry Writing Month' எனும் இயக்கம் பிரபலமாகி வருகிறது. இது இளம் கவிஞர்களை தொடர்ந்து எழுதும் consistency ஐ நோக்கி நகர்த்துவதாக சொல்லப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் தோழி ஒருத்தியின் தூண்டுதலில் நானும் இம்மாதம் முழுவதும் #NaWriPoMo வில் எழுதலாம் என்றிருக்கிறேன். 

முதல் கவிதைக்கான உந்துதல் #kizhinjakaagidham அமைப்பு கொடுத்தது! - ரயில்)

மௌன இருட்டுக்குள்ளே - நான் 
   மூழ்கித் தவித்தபடி 
வானை மறந்துவிட்டேன் - அருகே 
   வாராயோ ரயிலே? 

என்னை இருட்சுரங்கம் - விட்டு 
   எங்கோ ஒருதொலைவில் 
கொண்டே உயிர்ப்பிக்க - உனைக் 
   கோருகிறேன் ரயிலே 

பயணச் சீட்டெனவே - என் 
   பாடல் தருகிறேன்நான் 
முயன்று நடந்துவிட்டேன் - அதிலே
   மூர்ச்சையும் கண்டுவிட்டேன்

சைக்கிள் மிதித்துவிட்டேன் - அதிலும்
   சலிப்பே மிஞ்சியது 
மக்கள் தொகையதிகம் - சாலை 
   மார்க்கம் பிடிக்கவில்லை 

பேருந்தில் இஷ்டமில்லை - வான் 
   பெருவழி தேவையில்லை 
பேரழகே ரயிலே - உன் 
   பெட்டிகள் நேசிக்கிறேன்!

அருகினில் வாரயிலே - என் 
   ஆசையுன் எரிபொருளாம் 
பருகிப் பறந்திடுநீ - கனவுப் 
   பாதையுன் தண்டவாளம்

ஓஹோ மனிதர்களே - உமை 
   உதறி நகர்கின்றேன்!
ஆஹா அன்பர்களே - எனை
   அதிர்ந்து தேடாதீர் 

இரவில் தொலைந்துவிட்டேன் - என 
    இறப்பைப் பேசாதீர் 
இரவல் பெற்றதுதான் - ஓர்நாள் 
    இரவில்தான் தொலைவேன் 

கூக்கூ கேட்கிறது - ரயில் 
    கூவி அழைக்கிறது 
பார்ப்போம் தோழர்களே - உங்கள் 
    பயணமும் சீக்கிரமே!! 

-விவேக்பாரதி
01.04.2023 | 12.00 AM

Comments

Popular Posts