காலங்கடத்தல்


அவ்வளவு நளினம் 
இல்லை உன் உரு! 
அவ்வளவு கெட்டி 
இல்லை உன் மை! 

அவ்வளவு ஓட்டமாய் 
இல்லை உன் எழுத்து! 
அவ்வளவு அழகாக 
இல்லை உன் தோற்றம்! 

நீயும் 
பூமியின் மென்னியைப் பிடிக்கும்
அதே மூணாந்தர பிளாஸ்டிக்தான்!

பத்து ரூபா பெறும் உன்னை 
பத்து மடங்கிற்கு வாங்கிய என்னை
நீயே பைத்தியக்காரன் என்று 
திட்டக்கூட செய்யலாம்!

ஆனால்,
இன்று நான் பெற்றதிலேயே 
விலையுயர்ந்தது நீதான்! 

உனக்கான தொகையைப் 
பெற்றவள் கைகள்
இன்றவள் பிள்ளைக்கு 
இன்னும் 
இரண்டுவேளைச் சோற்றை
இதயக் குளிர்வுடன் ஊட்டும்! 

அதை உணரும் மகிழ்ச்சியிலேயே 
காலங்கடக்க நினைக்கும் கவிதைகளை
உன்னைக் கொண்டு 
எழுதி எழுதித் தீர்க்கிறேன்! 

விலை உயர்ந்ததெல்லாம் 
தீர்ந்துபோக வேண்டாம் என்பார்!
நான் மட்டும் 
நீ தீர்ந்துபோகவே வேண்டுகிறேன்... 
உன்னோடு 
உனை விற்றவள்கை வறுமையும்!

காலங்கடப்பது என்பது
கடத்தலா? கடத்துதல்தானே!! 

-விவேக்பாரதி
08.03.2023

Comments

Popular Posts