உங்க சொல்! என் குறள் - 1


(இன்ஸ்டாகிராமில் அன்பர்கள் கொடுத்த சொற்களுக்குத் தொடுத்த குறள்கள்)

ஆறுபோல் அழுவது

ஆறாய் அழும்கண்கள் ஆழ்கடலாய் ஆகும்முன்
தீராதோ இத்தனிமைத் தீ

விரகதாபம்

பரவுமோ னத்தில் பளபளக்கத் தேக
விரகதா பத்தை விடு

குழந்தை

குழைந்து கரம்சேரும் குட்டிதெய் வத்தைக் 
குழந்தையெனக் கொஞ்சிக் குதி!

கதவு

ஒவ்வோர் கதவும் வெளித்தள்ளும் உள்ளிழுக்கும்
எவ்வொன்று நீயென்(று) இயம்பு

விட்டில்பூச்சி 

விட்டில்பூச் சிக்கு விளக்கொன்று தான்தெரியும்
தொட்டபின்னால் தானுணரும் தீ! 

விடியல்

வண்ணங்கள் சூழ்விடியல் வந்தவிழக் கும்மிருட்டை
எண்ணத்தில் நீக்கி எழு!

வெறுமை

வெறுமை எனிலென்ன? வீணெண்ணம் சூழந்த 
வறுமைக்குள் நேரும் வழக்கு!

பாதக்காதல் 

பேரழகின் பாரமெலாம் பாதமே தாங்குவதால் 
காரணமாய் நான்தொழுவேன் கால்!

மதி

பயணங்கள் அத்தனைக்கும் பாதைத் துணையாகி 
மையமிடும் தோழி மதி

நீயாரோ! நான்யாரோ!

நீயாரோ! நான்யாரோ! நீளவினா தீர்த்திணைந்தோம்
தீயார் திரிதான் யார்?

குழல்

குழலிசைத்தாள் ராதா குழலளைந்தான் கண்ணன்
குழலினங்கள் நாணும் குழைந்து

பிரிவு

சரிவினும் தாளாத் துயர்செய்யும் நெஞ்சப் 
பிரிவெனும் கொள்ளைப் பிணி! 

நகக்கண் கேட்கும் சோறு

நயஞ்சுவைத்(து) உண்ணும் நகக்கண்!என் சொல்வேன்?
வயிற்றுக்கும் அவ்வளவே என்று?

சோகம் 

சோகத்தின் கொம்பைச் சுறுசுறுப்பால் நாமுடைத்தால் 
சோகமும் ஆகும் சொகம்!

காஜி

காஜிருக்க வேண்டும் கடுகாய்! கடப்பாறை 
ஊசியென்றால் ஏற்கும் உடல்?

புன்னகை

தாய்சோறு கண்ட தளிர்முகப் புன்னகை 
வாய்சொல்லி மாளா தது! 

விவே

நிவேதனமாய்ச் சக்திக்கு நேர்ந்தேன், படைத்தாள்
விவேக்பா ரதியாய் விழைந்து!

கம்பன் 

சந்தமத யானைத் தலைமேல் அரசிருக்கும் 
கம்பனொரு ராஜ கவி!

ஏக்கம் 

தனித்த மலரேக்கம் தானறியாக் காற்று 
தினம்வருடிச் செய்யும் தீ! 

விதி 

தொல்விதியை வெல்லும் தொழிலுண்(டு) அகம்கற்கும் 
கல்விதான் அந்தக் கலை!

உண்மை 

உன்னுண்மை என்பொய்யாம் என்னுண்மை உன்பொய்யாம் 
என்னுங்கால் ஏதுண்மை பொய்?

மரக்கா

பலமரக்கால் சேர்த்துப் படியளந்தால் கூட 
உளமளக்கா அன்பே உலகு! 

பெண்ணப்பன்

என்னப்பன் நீறணிந்த பொன்னப்பன் பாதியுடல்
பெண்ணப்பன் மேலானேன் பித்து

கள்வரே

கள்வரே உங்கள் கதகதப்பு மார்தழுவ 
உள்வரை பூத்தேன் உயிர்த்து!

நாம்

நாமென்(று) இதழொட்டி நாட்கள் கழித்திருப்போம் 
நாமென்(று) அழிகட்டும் நாண்!

வெட்கம்

ஆற்றோர நாணல் அளவாம் அவள்வெட்கம் 
கூற்றோடு கூட்டும் கலன்! 

காதல் காமமாதல்

வெண்முகில்கள் காற்றுபட மாறுதல்போல் காதலெனும்
உண்மையினில் காமமெழும் ஊர்ந்து!

அடையாளம்

அடைகின்ற ஆழத்தின் ஆணிவேர் காணல்
அடையாளம் என்றே அறி! 

கடல்

அலையடிக்கும் சீற்றம் அமைதிவரும் உள்ளம் 
கலைகுடி கொண்ட கடல்!

மையல்

மையல் நெருப்பில் வளரும் குளிருக்கு 
நெய்யா வதுநம் நினைப்பு! 

பாரதி 

பாரதி நட்ட பகல்தான் புரட்சியின் 
வேரடி தொட்ட ஒளி! 

துளி

துளிமழை சிப்பி, துளியொளி காலை, 
துளியன்பு காதல் தொடர்! 

துறவு

துறவை அணியத் துணிவேஷம் வேண்டா 
அறிவை மனத்தை அகல்! 

காழ்ப்புணர்ச்சி 

காழ்ப்புணர்ச்சி கோபம் கவலை இவைமூன்றும் 
வாழ்வுணர்ச்சி கொல்லும் வலை! 

அறம் 

அறமென்று கொள்மனமே ஆற்றும் பணியில்
சிறந்து விளங்கி விடல்!

ஏமாற்றத்தின் வலி

ஏமாறும் நெஞ்சில் எரியும் வலிபுரிந்தால் 
நாமாற்ற மாட்டோமே நாம்! 

அவளின் வரித்தழும்பு

வலித்தழும்(பு) இல்லை வலியுண்டு, காயம் 
மலர்த்தினோர் எல்லாம் உறவு!

சரக்கு 

மறக்கடிக்க வேணுமா வெற்றுடலைக்? கொஞ்சம் 
சரக்கடித்துச் சாய்ந்து விடு! 

தாமரை 

சூரியனைப் பார்த்திருக்கும் தாமரையைக் கீழிருந்து 
நீரலையில் தூக்குமிலை நீ!

ஜெரோம் ஆசீர்வாதம்

தரோமெனத் தந்தையருள் தந்தார் இயேசு
ஜெரோமாசீர் வாதச் சிறப்பு! 

கண்மை

கண்மை அழகினைக் கண்கள் பெறுதற்குப் 
பெண்மையென்ன ஆண்மையென் ன?

மென்சோகம் 

மெல்லிசையாய் உள்ளிருக்கும் மென்சோகப் பூக்கிள்ளி 
சொல்லிசையாய்க் கோப்பேன் சுவைத்து!

மகிழ்ச்சி 

மகிழ்ச்சி எனப்படுவ யாதெனின் சார்ந்தார்
அகத்தில் மலர்ச்சி எழல்! 

உந்துதல் 

முந்துவதோ பிந்துவதோ முட்டும் முயற்சியின் 
உந்துதல் சேர்க்கும் உயர்வு! 

மனநிலை

மனநிலை என்னும் மதிப்பீ(டு) உயர்த்தல் 
மனிதனாய் ஓங்கும் வழி

குழல்வாய்மொழி

குழல்வாய் மொழியாள் குவிக்கவொன் றானான் 
தழல்வாய் பிறந்த தமிழ்

குழல்வாய் மொழியில் குழைந்தனள் ராதை
எழில்வாய் இதம்தான் பெற!

பிரிவுழல்தல்

சிரித்துருள்கி றேன்வாழ்வில் ஆனால் நினைப்பில் 
பிரிவுழல்கி றேன்யார் பிழை?

புடவை 

புடவை புனையும் பொழுதாவேன் நாணம் 
நடவை நடத்தும் நிலம்! 

வெங்காயம்

வெங்காயம் போலாகும் வேதனைக்கு ஏனப்பா
நம்காயம் வாட விடல்?

மிளிர்கல்

மிளிர்கற் சிலையோ விளையும் கதிரோ?
ஒளிகொளும் ஏதுன்றன் கண்?

-விவேக்பாரதி

Comments

Popular Posts