நெஞ்சில் கடல்



என் 
நெஞ்சில் கடலொன் றிருக்கிறது - நீ 
நிலவாய் வருவாயா? - அது
கொஞ்சம் பதறி அலைபாய - உன்
குளிரைத் தருவாயா? 

என் 
கண்ணில் பூவொன் றிருக்கிறது - நீ
கதிராய் வருவாயா? - அது
வண்ணம் கொண்டு ஒளிசெய்ய - உன் 
வருடல் தருவாயா? 

என் 
முகத்தில் வானம் இருக்கிறது - நீ
முகிலாய் வருவாயா? - உனை
அகத்தில் ஏந்தி நடைபயில - நீ
அடைமழை தருவாயா? 

என் 
உதட்டில் தேனும் இருக்கிறது - நீ
ஈயாய் வருவாயா? - இதழ்க்
கதவைத் திறக்க உன்னிதழால் - நீ
கன்னம் இடுவாயா?

நீ
தொடுவாய் என்றே என்நெஞ்சம் - சிறு
தொலைவில் கிடக்கிறது - உயிர்
நடுவாய் என்ற நினைப்பினிலே - அது
நிலம்போல் இருக்கிறது,

உன் 
மனதால் முத்தம் பதிப்பாயா? - அதில்
விதையை விதைப்பாயா? - இல்லை
தினமும் வரும்போல் ஏமாற்றும் - மழைத்
திரள்போல் வதைப்பாயா? எனை
திரும்ப நனைப்பாயா??

(கவிதைக்கு காரணமான சிப்பிச் சங்கிலியைக் கொடுத்த தோழி மதிக்கு நன்றி!) 

-விவேக்பாரதி
06.03.2023
காலை 4.20

Comments

Popular Posts