உன்னை நனைத்த மழை


உன்னை நனைத்திட வந்த மழையிடம் 
    என்னையும் நனைக்கச் சொல்லிவிடேன் 
உள்ளம் மிகமிக வறண்டு கிடக்குது 
    உயிர்வர ஒருமழை தந்துவிடேன்!
சின்னஞ் சிறுமழை என்ற நிலையிலும் 
    சீக்கிரமே வரச் சொல்லிவிடேன்! 
ஜீவன் குளிர்பெற சில்லென்(று) இசைபெற 
    சேர்ந்து நனைந்திட வந்துவிடேன்

பக்கம் தொலைவெனப் பார்த்துக் கணித்துப் 
    பழக்கமில்லை ஆனால் ஓடுகிறேன்
பாடல் வரிகளை எண்ணி நிற்காமலே 
    பல்லவியை மட்டும் பாடுகிறேன்
துக்கம் கழுத்தினைக் கவ்விப் பிடிக்கையில் 
    தொன்றும் சிரிப்புடன் சுற்றுகிறேன்
துணையாய்ச் சிறுமழை வந்து நனைத்தெனைச் 
    தூய்மையில் சேர்த்திட தத்துகிறேன்

மானிடர் ஆக்கிய இன்னிசை போதுமே 
    மழையின் இசைவர வேண்டுகிறேன் 
மண்மணம் மொத்தமும் என்னிடம் வீசிட 
    வீழ்ந்து கலந்திட எண்ணுகிறேன்
வானிடம் யாசகக் கைகளை நீட்டியே 
    வாழ்க்கையைத் தந்திட ஏங்குகிறேன் 
வார்த்தையில் சொல்வது பாதிதான் மீதியை 
    மனதொடு பொத்தியே தூங்குகிறேன்

சிந்திடும் பொன்மழை என்னை நனைத்திட 
    சிரித்துக் குதித்துநான் ஆடிடுவேன் 
செல்லரித்துப் போய் கிடக்கும் மனத்தினில் 
    சில்லெனப் பூந்தென்றல் கண்டிடுவேன்
வந்திடும் இம்மழை என்னுடைத் தென்கிற 
    வாஞ்சையிலே நான் வாழ்ந்திருப்பேன் 
வருகிற அடுத்ததும் எனக்கென எனக்கென 
    வந்தனை செய்தே காத்திருப்பேன்

மின்னல்கள் கண்களை எட்டிப் பிடிப்பினும் 
    மிரட்டும் இடிகள் நெருங்கிடும் 
வீழ்த்திடும் ஆயிரம் சூறா வளியெனை 
    விளையாட்டைப் போலவே சுற்றிடினும் 
என்னை மறந்திந்த இயற்கை வெளியினில் 
    ஏகாந்தமாய் ஒரு தூசினைப்போல்
ஏற நினைக்கிறேன் கூவி அழைக்கிறேன் 
    எழுதிப் பறக்கிறேன் வாமழையே!!

-விவேக்பாரதி
20-05-2022


Comments

Popular Posts