தனியான நதிச்சுவை

~Souls and stories பக்கத்துக்காக எழுதிய சிறுகுறிப்பு~

மலை முகட்டில் சிறு ஓடையாய்த் தொடக்கும் ஒரு நதி, கடலாகும் கதைதான் மனித வாழ்க்கையும். அதில், நதியின் உருவத்தில் ஓட தொடங்கியிருக்கும் சிறு ஆன்மா, நட்பென்னும் மர நிழலில் சற்றே இளைப்பாறும்போது சில சொற்களை இங்கே எழுதிப் பார்க்கிறது. 

சொல்வதற்கும் பேசுவதற்கும் ஆயிரம் விஷயங்கள், எழுதுவதற்கு என்று எனக்குள்ளில் சிறகடிக்கும் கோடி சொற்கள், இவற்றுக்கு மத்தியில் எழுதித்தான் வாழ வேண்டும் என்ற வைராக்கியம் என்னை ஒரு ஊடகவியலாளன் ஆக்கிவிட்டிருக்கிறது. 

இந்த எழுத்தை நான் பிடித்துக்கொண்டது (அல்லது எழுத்து என்னைப் பிடித்துக் கொண்டது) என்னவோ தற்செயலாக நடந்ததே. ஆனால், இன்றோடு 13 ஆண்டுகள் அந்த தற்செயல் தன் செயலாக என்னை இழுத்துக்கொண்டு வாழ்க்கையின் தீரத்தில் பயணிக்க வைக்கிறது. 

உங்களில் யாரேனும், ஒரு கவிதை உதயமாகும் கணத்தை கவிஞனுக்கு அருகில் இருந்து பார்த்திருக்கிறீர்களா? அவன் அடையும் தவிப்பையும், ஒரு காகிதத்துடன் பேனாவால் அவன் கொள்ளும் கூடலில் உள்ள லாவகத்தையும் உணர்ந்திருக்கிறீர்களா? இதெல்லாம் நடந்திருந்தால் என் வாழ்க்கையின் வடிவமைப்பு என்னை எப்படி நடத்திக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குப் புலப்படலாம். 

கவிதை எழுதுபவன் கவிஞன் அல்ல, கவிதையே வாழ்க்கையாகவும் வாழ்க்கையே கவிதையாகவும் உள்ளவனே கவிஞன் என்று ஒரு வரையறையை அநாயாசமாக விட்டுச் சென்ற மகாகவி  பாரதி, அதை எனக்குத்தான் சொல்லி இருக்கிறான் என நிறைய நினைத்ததுண்டு. அப்படி பார்ப்பதெல்லாம் கவிதையாகவும், கவிதையில் எல்லாம் என் வாழ்க்கையையும் இரண்டு என்பதே இல்லாமல் இழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.. 

எங்கே கூட்டிச் செல்லும் என்று அறியாமல் ஒரு காட்டு நதியின் பயணத்தில், எனக்குள் நானே கல் எறிந்து, அதில் உண்டாகும் சுழல்களின் நடுவே,  தனித்து திரளும் சுய ஞானத்தையும் தரிசிக்கிறேன். அந்தக் கற்களை என் கையில் சேர்ப்பவர்கள், உடன் பயணம் போகும் சக நீர்த்துளிகளான என் நண்பர்கள். 

நெடுங்காட்டில் இயற்கையால் வெட்டப்பட்டு பல இடங்களில் துளைகளுடன் காத்திருக்கும் மூங்கில் எனக்குள், அவ்வப்போது தென்றல் நுழைந்து திரும்புகையில் இசை (கவிதை) பிறக்கிறது. அடுத்தது எப்போது என்ற காத்திருப்புடனேயே நான் என் நாட்களைக் கடத்தி வருகிறேன். சரி, இதையெல்லாம் பேசும் எனக்கு என்ன வயதாகிறது? நீங்கள் இருக்கும் அதே இருபதுகள்தான் நானும். எனக்கு இப்போது 23. ஆனால், முதிர்ச்சி எனக்கு கூடவே பிறந்து எனக்கு முன்னரே வளர்ந்த ஒரு சுகசாபம். 

இந்த முதிர்ச்சியின் இருப்பு என்னை பல நேரங்களில் இளைய கூட்டத்துடன் சேர அனுமதிக்காமல் தனித்து வைத்தாலும், சில நேரங்களில் உணர்ச்சிகளின் தீவிரத்தில் நான் கொள்ளை போகாமல் என்னை ஒரு சீசாவின் நடுவில் நிறுத்த வைக்கிறது. 

அடிப்படைக் கவிஞன் என்பதாலும், தொழில்முறை ஊடகவியலாளன் என்பதாலும் எனக்கு அரசியல் பிடிக்கும். அதைப் பார்வையிட, விமர்சிக்க, பாராட்ட அவ்வளவு ஆசை. ஆனால் ஆசை இருக்கும் அளவு அதை வெளிப்படையாக செய்தது கிடையாது. ஏனெனில் கடலில் நீந்துவதை விட கிணற்றில் நீந்த பயிற்சி அவசியம். அதன் ஆழம் நம்மை விரைவில் மூச்சடைக்கச் செய்துவிடும். 

இந்த நதியான வாழ்க்கையில் எனக்கு மிகவும் பிடித்தது, வழியில் என் மேல் விழும் பூக்களை வர்ணித்து சிலிர்க்க வைப்பது. அப்படி நிறைய பேர்களிடம் வழிந்தும் வழியாமல் சிறு கவிதைகளால் அவர்களை புன்னகைக்க வைக்க பிடிக்கும்.. இசை - நான் வாழ்வதற்கான ஆதாரம். இசை இல்லாத நாளில் உயிர்வாழேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஏனெனில் சங்கீத வறட்சி ஏற்பட்டு சுத்த மௌனத்தில் என்னை விட்டாலும், இயற்கை என் உதடு வழி ஏதேனும் இசையை உண்டாக்கி விடுகிறது. 

எத்தனை பெருங்கூட்டம் இருந்தாலும் பிடித்த பாடலைக் கேட்டால் சத்தமாக பாடப் பிடிக்கும். காற்றுக்கு ஏது வெட்கம் கூச்சம் எல்லாம்?

கோயில் சன்னிதிகளில் என்னை மறந்து இறைவன் மேல் நான் எழுதும் கவிதைகளைப் பாடுவது எனக்கான பூஜை. அவ்வளவுதான் என் பூஜையே! திருநீறு கூட இரண்டாம்பட்சம் தான். ஆனால் புருவங்களுக்கு இடையில் தனலும் சின்ன அகலாய் குங்குமக் கீற்று ஜொலிக்க வைக்க பிடிக்கும். 

முறுக்கு மீசை பிடிக்கும். அப்போது என் மீசையைத் தடவி ரசிக்கும் என் கைகளே பெண்மை தரிக்கும். ஓருடலுக்குள் ஆண் பெண் இருவரும் சரி விகிதத்தில் குடிகொண்டு சண்டையிட்டு துடிக்கும் உளவியல் சிக்கல், இரண்டையும் வாய்விட்டுப் பாடுவதிலும் எழுதுவதில் சுக வேதனை ஆக கண்டு கொண்டிருக்கிறேன். 

மேற்கத்திய உணவுகள் அதிகம் பிடிக்கும். ஒரு பாஸ்தா கடையில் அமர்ந்து பாரதியார் கவிதைகளை அதன் சுவையுடன் மென்று பார்ப்பது எத்தனை ஆனந்தகரம் என்பது என்னுடன் வெளியே வருபவர்களுக்குத் தெரியும். வள்ளுவன், கொஞ்சூண்டு கம்பன், புகழேந்தி, சில சிட்டிகை இளங்கோவின் கவிதை, கை நிறைய சங்க இலக்கியம் பேசுவேன். நவீன கவிதைகள் பக்கம் இப்போதுதான் நதி திரும்பி இருக்கிறது. 

அனைத்தையும் வாரி எடுத்துக் கொண்டு போய் கடைசியில் எப்படியும் கடல்தான் என்றாலும், காவிரியின் மென் இனிப்பும், தாமிர பரணியின் வன் இனிப்பும் வெவ்வேறாவதுபோல், இந்த நதியின் சுவை தனி. வேறென்ன சொல்ல இனி..? 

விவேக்பாரதி
30.05.2022

Comments

Popular Posts