ஒரு பிடி சுயபார்வை


தாவிக் கொண்டே இருக்கின்றேன் நான்
தங்கும் பீடம் எங்குவரும்?
தத்தித் தத்திப் போகும் வாழ்வில் 
தரைவிட் டுயர்தல் என்றுவரும்?
கூவிக் கூவிக் கேட்கின்றேன் எனைக்
கூட்டிச் செல்லும் கைகளெது?
கூட்டம் நடுவில் தொலைந்திடாமல்
கூடித் தொடரும் கால்களெது?

முடியும் புள்ளி தெரியாமல் நான் 
முயன்று போகும் பயணமிதில்
முள்குத்தாமை கேட்டிடவில்லை 
முதுகில் தட்டும் கைவேண்டும் 
விடியும் என்றே எதிர்பார்த்து நான் 
விழித்துக் கடக்கும் பொழுதுகளில்
விளக்கைக் கூட கேட்டிடவில்லை 
வியப்புக் கனவின் சுவைவேண்டும்

தூரம் தெரியத் தேவை இல்லை
துணைக்கென் றொருவர் கரம்வேண்டும்
துவளும் போதில் சிரித்தாலும் எனைத்
தோளில் சாய்க்கும் மனம்வேண்டும் 
பாரம் போன்ற எதிர்பார்ப்பும்சிறு 
பாசம் என்ற கைவிலங்கும் 
பற்றாமல் ஒரு மெய்யுறவு தினம்
பக்கம் இருக்கும் வரம்வேண்டும்!!

-விவேக்பாரதி
01-05-2022

Comments

  1. கவிதை மிகச் சிறப்பு.. வாழ்த்துகள்# congratulations on your new Assignment

    ReplyDelete
  2. அருமை.. மிக அருமை.. வேண்டுவன யாவும் கைக்கூடும்

    ReplyDelete
  3. சிறப்பு

    ReplyDelete
  4. ஆகா🤍🤍👏👏 அருமை

    ReplyDelete
  5. அருமை. மிக அருமை. தொடர்ந்து. வாழ்த்துக்கள் விவேக். தூரம் தெரிய தேவை இல்லை...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் துணைக்கு வரும் கைகள் இருந்தால் தூரம் தெரிய தேவை இல்லைதான்

      Delete

Post a Comment

Popular Posts