வன்கொடுமையை நிறுத்துங்கள் - உலகிற்கு உக்ரேனிய குரல்


பளிச்சிடும் விளக்குகள் சூழ்ந்திருக்க - அதைப் 
    படமெடுப்பவர்களும் பார்த்திருக்க 
பார்த்திட ஈர்த்திடும் உடையணிந்தே - செம்
    பாதையில் திரையினர் நடைநடக்க 
கிளிக்கிளிக் கிளிக்கெனப் படமெடுக்க - அதில் 
    கிளர்த்திடும் காணொலி மிகக்கிடைக்க 
கிழித்திடும் குரலொலி கேட்டதம்மா - அந்த 
    கேன்ஸ்நகர் அமைதியில் வேர்த்ததம்மா!

வந்தவள் ஆடைகள் புதியதல்ல - தன் 
    மார்பகம் பொதுவினில் தெரியவந்தாள் 
மணங்கள் நிரப்பிய செயற்கையிலே - தனி 
    மலரென ஆடைகள் அற்றுவந்தாள் 
தந்தது வெறும்சிறு கூச்சலல்ல - ஒரு 
    தாயுடல் ஏறிய வன்மங்களைத்
தாங்கிய பூமியின் கதறலம்மா - அதில் 
    சார்ந்தவர் பெற்றது உதறலம்மா! 

ஒருபுறம் குண்டுகள் மழைபொழியும் - இன் 
    னொருபுறம் டாலரின் மழைபொழியும் 
ஒருபுறம் கதறலில் காற்றலரும் - இன் 
    னொருபுறம் கரவொலி அரங்கதிரும் 
ஒருபுறம் ராணுவம் மண்கிழிக்கும் - இன்
    னொருபுறம் புகழொலி விண்கிழிக்கும் 
உலக அரங்கேறும் இவ்வழு நிலையை - தன் 
    ஒருகுரல் கொண்டவள் காட்டவந்தாள் 

எத்தனை வலியவள் கண்டிருந்தால் - தன் 
    இயல்,உடை நீக்கியே வந்திருப்பாள் 
எத்தனை கொடுமைகள் பார்த்திருந்தால் - தன் 
    இடையினில் செந்நிறம் கொண்டிருப்பாள் 
எத்தனை மனிதரை வெறுத்திருந்தால், - திரை 
    அரங்கினில் வன்முறை செய்திருப்பாள் 
இப்படி எத்தனை கேள்விகளை - சிறு 
    இரைச்சலில் உலகமே கேட்கவந்தாள்! 


வன்கொடுமை தனை நிறுத்திடுங்கள் - என 
    வார்த்தைகள் கேட்டன கேன்ஸ்நிகழ்வில் 
வண்ணங்கள் கோத்த வரிசையிலே - அவள் 
    வலிகளில் கூசின மக்களின்கண் 
தன்னுரிமைக்(கு) எனும் சண்டையிலே - தினம் 
    சரிவதும் நிகழ்வதும் பெரும்கொலைகள் 
தப்பியவள் குரல் கதறலிலே - ச்சீ 
    தரைதொட வேண்டும் அக் கொடுந்தலைகள்!!  

-விவேக்பாரதி
22-05-2022

Comments

  1. எத்தனை வலிகள், அந்த வரிகள் என்னவோ செய்கின்றன!! நெஞ்சில் சுருக்கென்று எதோ ஒன்று தைக்கிறது!!

    ReplyDelete
    Replies
    1. அந்தக் குத்தல்தான் அவர்கள் வன்கொடுமைக்கு எதிராக ஏந்தும் ஆயுதம்

      Delete

Post a Comment

Popular Posts