மழைக்காலப் புலரி


புலரி - இருளில் ஒருதுளியாய் விழுந்து உடனே பரவி ஆட்சியை நடத்தும் விடியலின் அற்புதமான பெண்பால் உணர்வு 

மேலெழும்பும் புது சூரியனை 
போர்வையிடும் காதலி, 
வெளிச்சம் பெறுகிற அறை வெறுத்தே
இருள் போர்த்தும் தலைவி, 
கடல் அலையின் தனி சுருதியைப்போல்
குறட்டை விடும் அழகி, 
மனச்சூட்டில் உடல் குளிரவைக்கும் இவள் 
மழைக்காலப் புலரி! 

தென்றல் கரம் மலர் சிறுகூந்தல் 
கோதிவிடும் விரலி, 
பறவை இனத்தின் பேச்சொலி கேட்டுக் 
கனவிசைக்கும் விறலி, 
சொட்டுச் சொட்டாய் உள்ளங்களைத் 
தொட்டுவிடும் சிறுமி,
மெத்தை வனத்துள் உயிர் இழுக்கும் 
மழைக்காலப் புலரி!

காது மடல்களை மெல்லக் கவ்வி 
கழுத்தில் கவிசெய்து, 
இதழ்களிலே அதைப் படிக்கையிலே இமை 
மூடித் திருத்தம் இட்டும்,
கை கால் அணைப்பில் உயிர் பிசைந்தே 
நகத்தில் உயிர் வரைந்தே
சோம்பல் சன்னிதிக் குள்ளே சுகிக்கும்
மழைக்காலப் புலரி!!

விவேக்பாரதி
07 மே 2022

Comments

Popular Posts