வண்ணக் கனா படைத்தாய் வைரமுத்து!



கவிப்பேரரசு வைரமுத்து அண்மையில் வெளியிட்டுள்ள கனாக் கண்டேன் பாடல் கேட்டேன். கண்ணன் எழுதும் காதல் கவிதை என்ற தலைப்பே உள்ளே நுழைய வைத்தது. பழைய மரபில் கால் ஆழமாக வேரூன்றியவர் அவர் என்பது, இந்தப் பாடலிலும், இதற்கு முன்னதாக கொண்டல் மேகம் ரெண்டு என்ற பாடலிலும் வெட்ட வெளிச்சமாகிறது. 



கொண்டல் மேகம் ரெண்டு பாடல், அண்ணாமலையார் காவடிச் சிந்து வகையைச் சார்ந்தது.  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த அம்பிகாபதி படத்தில் கூட அந்தமேவும் அரவிந்த மாமலரில் வந்த வேத வல்லியாள் என்று நடையிலேயே துள்ள வைக்கும் பாடல் உண்டு. இது அதே சந்தம். அதனை சங்கர் மகாதேவனின் குரலிலும், தவிலும் நாதஸ்வரமும் துள்ளும் இசையிலும் நம்மை ஆட வைத்திருப்பார்கள். அதன் தாக்கமே தினசரி கேட்கும் பாடலாக மாற்றியுள்ள நிலையில், தற்போது கனாக்கண்டேன் வெளியாகி கொள்ளை கொண்டுள்ளது. 



ஆண்டாள் எழுதியதுபோலவே கலிப்பா வகையில் களிப்பாக அமைந்திருக்கிறது பாடல். அணில் ஸ்ரீநிவாசன் இசையில், ஹரிசரன் உயிரையே உருக்கி குரலாய்க் கொடுத்திருக்க, ஒவ்வொரு துளியும் ஆயிரம் தடா நெய் பெய்த அக்கார அடிசிலாகக் கேட்கிறது. 


காட்சியமைப்பில் புதிய கதை சொல்ல புகுந்திருப்பது அழகு என்றாலும், நான் கண்களை மூடி, குரலிலும் சொற்களின் குழைவிலும் மெய் மறந்தேன். வைரமுத்துவின் மரபுத் தமிழின் சான்று, இக்கவிதையில் வைரமும் முத்துமாய் ஒளிர்கிறது.   

வாழை யிளம்பச்சை வரித்ததோர் ஆடையிலே
தாழை நறுங்குழல் தையலாள் வீற்றிருக்க
ஏழை ஒருவன் எழுகோடிப் பொன்கொண்ட
பேழை கண்டதுபோல் பித்துற்றேன் பெண்பாவாய்

என்று தொடங்கும் முதல் பாட்டே வாய்பிளக்கச் செய்யும் வசீகர வார்த்தைகளின் விஸ்தரிப்பு. குறிப்பாக “ஏழை ஒருவன் எழுகோடி பொன்கொண்ட பேழை கண்டதுபோல்” என்ற உவமை! அப்படியே அடுத்த பாட்டைக் கண்டால், “உயிரே என்பேனோ, உள்ளத்தில் வேர்கொண்ட பயிரே என்பேனோ” என காதல் களிப்பில் சொல்வதுபோலவே கருத்தழிந்து நிற்க வைக்கிறது. அனைத்திற்கும் மகுடமாய் முத்தாய்ப்பாய் இறுதிப் பாடல், 

வான்பூட்டும் வில்லின் வண்ணத் திருவுடையாள்! - அடடா! அதுமட்டுமா அவள் தேன்பூட்டும் இதழாள்! அவளுடையது தெய்வத் திருக்கழுத்து. இப்படி அன்றோ கண்ணன் ஆண்டாளைக் கண்டிருக்கக் கூடும் என ரசித்து சிலாகிக்க வைக்கும் வரிகள். அதில் நாண்பூட்ட கனாக்கண்டதாய் கண்ணன் சொல்லும் வாக்குமூலம், வண்ண வசந்தங்களின் வார்த்தை மாயம்! எழுதிய கவிஞருக்கு அவர் சாயலிலேயே வாழ்த்து..

கண்ணன் மொழியாகக் கனித்தமிழில் செய்தகவி 
கன்னல் இனிப்பாகக் கற்கண்டாய்த் தித்திக்க 
பண்ணின் நடையழகில் பாவையென உள்சொக்க 
வண்ணக் கனாபடைத்தாய் வார்த்தையிலே வாழியநீ! 

-விவேக்பாரதி
17-05-2022

Comments

Popular Posts