உழைப்பாளர் தினம்



எந்தக் கைகள் நமக்காக
   ஏந்தா ததெல்லம் ஏந்திடுமோ?
எந்தக் கால்கள் நமக்காக
   எல்லா தூரமும் தாண்டிடுமோ?
எந்தக் கண்கள் நமக்காக
   எல்லாம் எளிதெனப் பார்த்திடுமோ
அந்தக் கை,கண், வாய்க்கெல்லாம்,
   அன்பில் ஆயிரம் முத்தங்கள்!

விழைவில் உயர்வார் எல்லாரும்
   விருப்பப் படியே வாழ்கின்றார்!
தழைப்பில் உயர்ந்தார் அவர்கூட
   தம்முன்னோர்போல் வாழ்கின்றார்!
அழைக்கா துதவும் மழைபோல
   அனைத்தும் உலகில் செய்கின்ற
உழைக்கும் மக்கள் வாழ்வென்ன?
   உணர்ந்து வார்க்கும் முத்தங்கள்!

காலை வாசற் கட்டினிலே
   காத்தி ருக்கும் பால்பாக்கெட்,
மூலைத் தெருவில் ஞாயிறிலும்
   முழுதும் இயங்கும் சிறுகடைகள்,
வேலை விடுப்பே இல்லாமல்
   விரைந்து கிடைக்கும் மருத்துவங்கள்,
சாலை காக்கும் காவல்கள்,
   சமர்த்தாய் இயங்கும் வாகனங்கள்,

நாட்டு நடப்பை வீட்டுக்குள்
   நல்க வந்த ஊடகங்கள்,
காட்டு வயலைப் பண்படுத்தி
   கதிரை அறுக்கும் பக்குவங்கள்,
ஓட்டுநர்கள் ஆகையிலே
   ஓடும் நமது வாழ்க்கைகள்
நாட்டில் உழைக்கும் அனைவருக்கும்
   நயந்து சேர்க்கும் முத்தங்கள்!

எவரில் லாமல் வையத்தில்
   எதுவும் இங்கே அசையாதோ,
எவரில் லாமல் உடலுக்குள்
   எல்லாம் இயக்கம் நிறுத்திடுமோ
அவரை வாழ்த்தும் இந்நாளில்
   அவர்தம் உழைப்பை வணங்கிடுவோம்!
தவறா தவர்க்கு நன்றிகளைத்
   தவணை முறையில் சேர்ப்போமே!!

-விவேக்பாரதி 
01.05.2020

Comments

  1. கொடுக்க வேண்டிய முத்தங்கள். அன்பும் ஆசிகளும் வவேசு

    ReplyDelete
    Replies
    1. அடடா! மகிழ்ச்சி! நன்றி ஐயா...

      Delete

Post a Comment

Popular Posts