பாம்புக்குச் சொல்வது... - இரட்டை நாக பந்தம்


இரட்டை நாக பந்தம் என்பது சித்திரக் கவிகளுள் ஒன்று. ஒரு நேரிசை வெண்பாவும் ஒரு இன்னிசை வெண்பாவும் புதைந்து கிடப்பது இந்த இரட்டை நாக பந்தம்!

நேரிசை வெண்பா : (சைவம்)

ஈசனடி யாக வணிய வுலவியே
மாசுறு தீவிடந் தொட்டபடி - தேசுறும்
பாம்பே சிவனி னடியாள் மனையினுள்
போம்பணி யாஞ்சிந்தை போக்கு!

கருத்து:

ஈசனின் திருவடிவில் ஓரங்கமாக ஆக, அவர் எடுத்து அணிய அவர் தோள்களில் உலவியபடியே, மாசு நிறைந்த அவர் கழுத்தின் தீய விடத்தினைத் தொட்டு உரசியபடி மின்னிக்கொண்டு இருக்கும் பாம்பே! சிவனின் திருவடி ஆள்கின்ற (அல்லது) சிவனின் அடியாள்(ர்) வாழ்கின்ற மனைக்குள் நீ போகும் படியாக எந்தப் பணி இருந்தாலும், அந்த சிந்தனையை உடனேயே போக்கு! 

(’’சிவனடியார்கள் வீட்டுக்குள் நுழைந்து அநாவசியமாக அவர்களை பயமுறுத்தாதே!’’ என்பது சொல்லவந்த முடிபு)


இன்னிசை வெண்பா : (வைணவம்)

வாசவனச் சின்னகை தேடிநாட கஞ்செய்து
நாசம்பட் டஞ்சி வுயிரடக் கும்நாக!
மேனி புனல ரியடியார் சேரிடம்
மான வபயம்நீ போற்று !

கருத்து: 

வாசு என்று அழைக்கப்படுகின்ற திருமால், உன்னுடைய வாலைத் தமது சிறிய கரங்களால் பிடிக்க வேண்டும் என்று நீ ஆசை கொண்டு, நீயே அதற்காக ஓர் நாடகம் ஆடி, யமுனை நதியின் ஆழத்தில் அமர்ந்து கொண்டு, அவருடைய கை உன்னைத் தீண்டியதும் உன் ஆங்கார கர்வமெல்லாம் நாசமாகும்படிச் செய்த, உயிர்களை அடக்கக்கூடிய நாகமே! தண்ணிய புனலைப் போன்ற குளுமையான தேகத்தை உடைய திருமால்தம் அடியார்கள் சேரும் இடத்தில், நீயே அவர்கட்குக் காப்பாகத் திகழ்ந்து அவர்களைப் போற்றுவாயாக! 

(’’மாலடியாரைக் கண்ணனுக்குக் குடையாகிக் காத்ததுபோல் காத்தருள்க’’ என்பது சொல்லவந்த முடிபு)

பி.கு;- 
இந்தப் பாடல்களை மறந்தே போயிருந்தேன். நினைவுப் படுத்தி என்னைத் தேட வைத்து இங்கே பதிவிட வைத்த கவிப்பெருஞ்சுடர் ஹரிகிருஷ்ணன் ஐயாவுக்கு நன்றி.

-விவேக்பாரதி
06.09.2017

Comments

Popular Posts