நிலமும் அசையும் நீண்டு


காலை சீக்கிரமே எழுந்துவிட்டேன். புதிதாகக் கற்றுவரும் யோகாசனங்களைச் செய்து முடித்து, அமைதி நிலையான சவாசனத்தைத் தொட்டேன். பெரும் மூச்சிரைச்சலுடன் இருந்த காலை நிசப்தத்தில் ஆழ்ந்தேபோனேன்.  சரசரவென விழுந்ததை அப்படியே பொறுக்கி அள்ளித் தளைபார்த்து வைத்துவிட்டேன். 

கடந்த இரு வாரங்களாக நான் செய்துவரும் யோகாசன பயிற்சிகளில் இன்று கண்டதுதான் பெரிய அனுபவம்... 

நீண்டு சுழலுமொரு நீள வளையத்தில் 
மீண்டுமீண்டு சென்று மிரளுகிறேன் - தூண்டிய 
சக்தியைக் காணோம்! சடுதியில் நான்கண்ட 
முக்திக்குப் பேரோவென் மூச்சு! 

மூச்சுவிடும் போதும் முனைத்திரியில் தீயெரியும் 
ஆச்சர்யம் காணல் அமிர்தமடா - பேச்சிழந்து 
பாய்ச்சலிடும் உள்ளம் படுத்திருக்கும் போதுவரும் 
காய்ச்சலிலே தோன்றும் கவி!

கவிழ்த்தியே வைத்த கனற்குடம், நெஞ்சில் 
தவிக்கையில் ஊறுந் தமிழ்போல் - செவிகளுக்குள் 
யாரும் இசைக்காத ஏதோ சுருதியொன்று 
போரே நிகழ்த்திடுமிப் போது! 

போதைச் சுகந்தானா? போய்வந்த விண்ணழகுப் 
பாதைச் சுகந்தானா? பாட்டுகளா? - காதில் 
இனிக்கவென் மூச்சே இசையாக, தேகக் 
கனத்தைநான் நீத்த கணம்!

கணந்தோறு மிப்படியே காலம் மறந்து 
வனந்தோறும் சென்றாடும் வண்டாய் - மணந்தேறும் 
வாழ்க்கை அமைந்திட்டல் வாழலாம்! இல்லையேல் 
யாக்கை பிழைப்பென் றறி! 

அறியாத மௌனந்தான் ஆகாசம் மொத்தம்!
புரியாநி சப்தம் புயலே! - முறையான 
மூச்சலையில் நான்நீந்தி முக்குளிக்க! பூந்தரையில்
நீச்சலிட்டேன் மீனாய் நிமிர்ந்து!

நிமிர்ந்து மடக்கினேன், நீண்டு, சுருக்கி, 
அமைந்த உடலம் அசைத்தேன் - குமிழுக்குள் 
சின்னப் பொறியொன்று சீறிக் கலங்கியதும், 
வன்னப் பறவைநான் வா! 

வானம் எனக்கருகில் வாசற் கருணையொடு 
கானமின்றி என்னையே கண்டிருக்க - நான்விட்ட 
பேய்மூச் சிசைதந்த பேரிரைச்சல் கேட்டதும் 
போய்மூச் சடக்கும் புரிந்து! 

துவளலே இல்லாமல் தூங்கியெழ வேண்டும்! 
சிவனாய்ச் சிறிதமர வேண்டும்! - கவிதை 
பிறக்குமுன் னேயெழுந்து பீடுயோகம் செய்தால் 
பறக்கும்போ தேதெறிக்கும் பாட்டு! 

பாட்டுண்டென் மூச்சில்! பரமுமுண் டென்மூச்சில்! 
பூட்டுண்டேன் மேனி புரிந்தது! - ஆட்டிக் 
கலையசைக்கும் தெய்வந்தான் காயம் அசைக்கும்! 
நிலமசையும் நம்முடனே நீண்டு!! 

-விவேக்பாரதி 

13.04.2020

Comments

Popular Posts