துரத்தும் கண்ணீர்


போதுமடி வெண்ணிலவே நீசிரிப்ப தெல்லாம் 
போதுமடி கார்முகிலே பரிகசிப்ப தெல்லாம்
காதலில்லாக் காரணத்தால் தான்வறண்டு வீழ்ந்தேன் 
மாதுமிலா இவ்விரவில் மண்மூட வாழ்ந்தேன் 

அவளில்லா ராத்திரிகள் பலகழித்தேன் உண்மை 
அவளில்லா பகற்பொழுதும் கழிந்ததெலாம் உண்மை 
அவளில்லா திவ்விரவு மட்டுமொரு முள்ளாய் 
கவிதைவரும் கழுத்துவளை இறுக்குவதும் ஏனோ? 

உலகமிங்கே இயங்கிவிட நான்மட்டும் நின்றேன் 
மலர்வாசத் துக்கேங்கும் வண்டாகி நின்றேன் 
பலகதைகள் பலகனவு பலவுரைகள் பேசி 
விலகியபல் லிரவைப்போல் இவ்விரவோ இல்லை 

இந்நிலவும் இவ்விருளும் அவள்நினைவைக் கூட்ட 
இந்நிலைமை எதுவரைக்கும் இடிகொடுக்கும் தாக்க? 
இந்நிலமை எத்தனைநாள் நீடிக்கும் அறியா 
தெந்நிலமை கரைசேர முந்தும்கடை அலையாய்! 

நெஞ்சத்தில் ஏனிந்தச் சோகத்தின் எச்சம் 
மஞ்சத்தில் அவளின்றி நேருப்பேதான் மிச்சம்
நஞ்சைப்போல் இக்காற்று நாவறட்சி செய்ய 
பஞ்சைப்போல் என்மனது காற்றோடு போக 

ஏங்குகுறேன் அவளின்றி ஏமாந்து படுத்தேன் 
வீங்கியவென் நெஞ்சத்தில் பெண்மனதைத் தரித்தேன் 
தாங்கியதும் தளர்த்ததுவும் காதலதன் விந்தை 
தூங்கிவிழப் பார்க்கின்றேன் துரத்துதுவே கண்ணீர்!!

#மௌனமடி நீயெனக்கு  

–விவேக்பாரதி
20.04.2020

Comments

Popular Posts