இரவு... இன்னும் கொஞ்சம் கழித்து...


இந்த இரவு 
இன்னும் கொஞ்சம் கழித்து 
சூழ்ந்திருக்கக் கூடாதா?

அடியிமைகளில் கனம் இறங்க, 
ஆழ் மனத்தில் இசை மயங்க 
வடிவழகு மேனியை நீ 
வலையாய் விரித்துப் 
பஞ்சணை அடைந்து 
உறங்கத் தொடங்குகிறாயே! 

ச்ச! இந்த இரவு 
இன்னும் கொஞ்சம் கழித்து 
சூழ்ந்திருக்கக் கூடாதா?

ஏனென்று கேட்பதற்கு 
ஆள்யாரும் இல்லாத 
வானொன்றில் நான் மட்டும் 
வார்த்தை விண்மீன் பொறுக்கி, 
மின்னல் நார்கோத்து
புதுமாலை கட்டுகிறேன்! 
சூடிக் கொள்ளக்கூட எழுந்திருக்காமல் 
சுருண்டு தூங்கச் செல்கிறாயே! 

அட! இந்த இரவு 
இன்னும் கொஞ்சம் கழித்து 
சூழ்ந்திருக்கக் கூடாதா?

காதலிலே காத்திருந்து 
கால்களெல்லாம் புல் முளைத்துப் 
பேதலித்து மனம் வலித்துப் 
பேரை மட்டும் உச்சரித்து 
நானிருந்த பகல் ரணத்தை 
உன் செவிச் சிமிழில் கொட்டிவிட 
நினைத்திருக்கும் நேரம், 
நீ 
கனவில் என்னுடன் காதலிக்கக் 
கண்கள் மூடித் தூங்குகிறாயே! 

ப்ச்! இந்த இரவு 
இன்னும் கொஞ்சம் கழித்து 
சூழ்ந்திருக்கக் கூடாதா?

போகட்டும், 
குறைந்த பட்சம் 
இந்தக் கவிதை கேட்க மட்டும் 
அரைமயக்கத் தூக்கத்தில் 
சில “ம்ம்ம்ம்”களை உதிர்த்துவிடு! 
இனி 
என் வார்த்தையெல்லாம் உனக்கு மட்டும்  
வாழ்க்கையைப்போல!!

#மௌனமடி நீயெனக்கு  

-விவேக்பாரதி 
11.02.2020

Comments

Popular Posts