கனல் மணக்கும் பூக்கள்

சந்த வசந்தம் கூகுள் குழுவின் கவியரங்கில் வாசித்த கவிதை.


புனல்மணக்கும் பூக்களெனில் தாய்மைப் பார்வை புகழ்மணக்கும் பூக்களவை கலைஞன் பார்வை கனவுமணக் கும்பூக்கள் சிறுவர் பார்வை கடமைமணக் கும்பூக்கள் உழவர் பார்வை தினம்நடக்கும் திருட்டாலும் லஞ்சத் தாலும் திரிகின்ற மானுடத்தின் வன்மத் தாலும் கனல்மணக்கும் பூக்களவை கவிஞர் பார்வை காலத்தைக் கவனிக்கும் இளைஞர் பார்வை! கொஞ்சநஞ்ச மாவுலகில் திருட்டுக் கொள்ளை கோடிகோடி யாய்ப்பணத்தைப் பதுக்கினாலும் பஞ்சமது வந்ததுபோல் இன்னும் இன்னும் பாய்போலே சுருட்டுகிறார்! இல்லா ஏழை நெஞ்சுடைந்து வீடிழந்து நலமி ழந்து நடுத்தெருவில் ஏங்குகிறார்! நடக்கு மிந்த வஞ்சகத்தைத் தீய்த்திடவே பெருகும் பார்வை வருகின்ற தலைமுறையின் கனலின் பார்வை! பெண்மனத்தில் ஆசைகளை விதைத்து விட்டுப் பெரும்போகப் பொருளாகச் சுகித்து விட்டு மண்ணிலொரு குப்பையென வீசும் கூட்டம், மழலையையும் கூசாமல் தொட்டுப் பார்க்கும்! எண்ணத்தால் மிருகங்கள் ஏதோ தோற்றம் எடுத்ததிலே மனிதர்கள்! இவரை எல்லாம் திண்ணத்தால் பொசுக்கவரும் இளமைப் பாய்ச்சல் திறமையிலே கனல்மணக்கும் அக்னிப் பூக்கள்! தேன்மணக்க வரும்பூக்கள் செடியில் பூக்கும், தெய்வத்தைத் தொடும்பூக்கள் கொடியில் பூக்கும், ஏன்!பெண்ணின் அணிபூக்கள் மரத்தில் பூக்கும், எல்லார்க்கும் சமம்பூக்கள்! ஆன போதும் வான்மணக்கும் நல்லொளியை அகத்தில் வாங்கி வண்ணமெனும் நேசமுடன் மணமும் கொண்டு ஞானத்தில் கனல்மணக்கப் பூக்கும் பூக்கள் நல்லவர்கள் எண்ணத்தில் பூக்கும் பூக்கள்! தர்மத்தின் விதைநடுவோம் நேர்மை என்னும் தண்ணீரை அதில்விடுவோம்! இறைநம் பிக்கை கர்மத்துக் கேற்றதுபோல் காற்று சேர்க்கும் கதிரொளியை மழையளவை நமக்குப் பாய்ச்சும்! மர்மத்தை அதுவாக ரசித்தி ருப்போம் மனமென்ற ஒன்றைநம் பிடியில் வைப்போம் அர்த்தங்கள் விளங்குகின்ற நேரம் தோன்றும் அப்போது கனல்மணக்கும் பூக்கள் நாமே!! -விவேக்பாரதி 22.02.2020

Comments

Popular Posts