இசைக்கவி ரமணனின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா.


சென்னை பாரதிய வித்யா பவனில் இசைக்கவி ரமணனின் ஐந்து நூல்கள் வெளியாயின. எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராத, திரைத்துறைக்குள் இல்லாத ஒரு கவிஞருக்கு இப்படிப்பட்டதொரு விழா இக்காலத்தில் எடுக்கப் படுவதும், அதில் அரங்கம் நிறைய மக்கள் வந்து கலந்து கொள்வதும் பெருவியப்பு. இதில் எனக்குக் கிடைத்த பேறு, இந்த நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கும் பாக்கியம். தமக்கு இதுவொரு முக்கியமான நிகழ்வாக இருந்தாலும், “உன் இஷ்டம்! நீ புகுந்து விளையாடு” என்று எனக்கு எல்லாவித உரிமையும் தந்த இசைக்கவிக்கும், தம்முடைய வரவேற்புரையில்,”எங்கள் வீட்டுப் பிள்ளை விவேக்” என்று அன்பு செலுத்திய அவர் மனைவி அனு அம்மாவுக்கும் எத்தனை நன்றி சொல்வது.

நான் நினைப்பதெல்லாம் ஒன்றுதான்! எத்தனை ஆழ்ந்த அறிவார்ந்த சமூகத்தில் என்னைப் பராசக்தி இணைத்திருக்கிறாள் என்பதேயாகும். விழாவில் முன்னிலை வகித்து எனக்கு ஆசிகளை வழங்கிய அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், பொற்றாமரை இலக்கிய அமைப்பின் தலைவர் திரு. இல.கணேசன், நடிகர் சிவக்குமார், வானதி பதிப்பகம் டாக்டர் ராமநாதன், கட்டித் தழுவிக் கொண்ட இலக்கியவீதி இனியவன் ஆகியோருக்கும் என் பணிவான வந்தனங்கள். 

வகுப்பில் நாம் எடுக்கும் செமினாரைப் பயல்கள் படமெடுத்து கலாய்ப்பதுண்டு, அதுபோல போட்டோகிராஃபர் மோகன் சார் என்னை வளைத்து வளைத்துப் புகைப்படம் எடுத்து கலாய்த்துக் கொண்டிருந்தவற்றில் சில இங்கே! 




இந்த அன்புகளுக்கெல்லாம் என்ன கைம்மாறு செய்ய? இதோ இதைத் தவிற...

இந்த பயங்கரி எந்த நினைப்பினில் 
   என்னைப் படைத்தாளோ 
அந்த நினைப்புகள் வென்று நலம்பெற 
   அவளே துணை! சரணம்! 

இத்தனை உருவில் வருகின்றாள் - அவள் 
   இவ்வள வன்பைத் தருகின்றாள் 
அத்தனைக்கும் நான் என்செய்வேன் - என் 
   அடிமுதல் முடிவரை சரணென்பேன்! 
எத்தனை அழகிய அன்பர்களில் - போய் 
   என்னை இணைத்துப் பார்க்கின்றாள் 
பித்தனைப் போல பேசுகிறேன் - சிறு 
   பிள்ளையை மேடையில் வைக்கின்றாள் 

இந்த பயங்கரி எந்த நினைப்பினில் 
   என்னைப் படைத்தாளோ 
அந்த நினைப்புகள் வென்று நலம்பெற 
   அவளே துணை! சரணம்! 

நன்றி எனும்பதம் சொன்னபின்தான் - நான் 
   நகருவ தென்றொரு நினைப்புவந்தால் 
ஒன்று போதாது யுகயுகமாய்ச் - சொல்லி 
   ஓய்ந்து போகாது! இதுவுண்மை! 
ஒன்றும் அறியாத இளங்கன்றாய் - அவள் 
   ஓடி விளையாடும் வீதிகளில் 
நின்றது மட்டும் என்நினைவு - பின் 
   நீண்ட கதைகள் அவள்நினைப்பு! 

இந்த பயங்கரி எந்த நினைப்பினில் 
   என்னைப் படைத்தாளோ 
அந்த நினைப்புகள் வென்று நலம்பெற 
   அவளே துணை! சரணம்! 

தமிழைப் படித்ததும் தற்செயல்தான் - அதன் 
   தலைவன் பாரதி, தற்செயல்தான் 
அமிழ்த்தி நான்காத்த கண்ணீரும் - அன்று 
   அருவி யானும் தற்செயல்தான் 
உமை நினைப்புகள் தற்செயல்தான் - பின் 
   உறுதி ஆனதும் தற்செயல்தான் 
அமைந்த தற்செயல் அத்தனையும் - என் 
   அம்மை நினைத்தவை முற்செயல்தான் 

எந்தப் பொழுதையும் பயணாக - அதில் 
   எண்ணும் எண்ணங்கள் வளமாக 
இந்தக் கணம்வரை முயல்கின்றேன் - அதை 
   ஈஸ்வரி தானே பார்க்கின்றாள்! 
சந்தையில் என்னைத் தொலையவிட்டு - மரம் 
   சரிந்த நிழலில் ரசிக்கின்றாள் 
பிந்தி முந்திநான் தேடுகிறேன் - அவளைப் 
   பிடித்த மாத்திரம் முத்தங்கள்தாம்! 

இந்த பயங்கரி எந்த நினைப்பினில் 
   என்னைப் படைத்தாளோ 
அந்த நினைப்புகள் வென்று நலம்பெற 
   அவளே துணை! சரணம்!!


நிகழ்ச்சிக்கு என் தாத்தாவையும் அழைத்துக் கொண்டு சென்றேன். 76 வயது இளைஞர் என்னுடன் ஸ்கூட்டரில், நிகழ்ச்சிகளில் அவர் சிலாகித்தைச் சொல்லிக் கொண்டே வந்தார்.

-விவேக்பாரதி 
08.01.2020 

Comments

Popular Posts