சொல்லறச் செல்வன் ராமன்

தேஜஸ் பவுண்டேஷன் கவியரங்கம்
-மயிலாப்பூர், சென்னை-


காப்பு

வில்வாக் குடைய வியனரசைத், தந்துணையாய்ச்  
செல்வாக் குடையஸ்ரீ ராமனைச் - சொல்வாக்கால் 
ஏத்தும் கவியிதற் கேற்றநற் காப்புமலர்
சாத்தும் கலைவாணி தாள்! 

சொல்லறச் செல்வன் ராமன்

சிலதினங்கள் முன்னால்நான் சிந்தை களிப்படைய
உலகமகா கதைகளினுள் ஒன்றைப் படித்திருந்தேன்!
தேரெழுந்தூர்த் தச்சன் தமிழ்க்கவியில் அற்புதமாய் 
நேரெழுந்த ஸ்ரீராமன் அயணத்தைச் சுவைத்திருந்தேன்!
அந்தக் கதையினையும், அதனுள் கவிக்கம்பன் 
தந்த சுவைகளையும், தமிழின் அழகினையும், 
ஆழ அசைபோட் டமர்ந்திருக்கப், புத்தகத்தில் 
வாழும் சொற்களெல்லாம் வளர்வது போல்கண்டேன்!
முன்னே எழுந்துவந்த முழுச்சொற்கள், புத்தகத்துள் 
என்னை இழுத்தன! எங்கோ ஓரிடத்தில் 
பொத்தென்று வீழ்ந்தேன் போதையிலே மயங்கிவிட்டேன்! 
புத்தி தெளிந்த பொழுதில் பார்க்கையிலே 
முன்பக்கம் சரயுநதி, முத்துப்போல் தண்ணீர்! 
என்பக்கம் கம்பன், எதிர்ப்பக்கம் அடர்க்காடு, 
கத்தும் பறவைகள், காலாற நடந்தபடி 
சுற்றும் விலங்குகள், சுகபோக வாழ்க்கையென் 
றெல்லாச் சுகங்களிலும் கிறங்கிப் பின்தெளிந்து 
சொல்லால் கம்பனைத் துதிக்கின்றேன்! “கம்பா! 

சந்த மதயானைத் முதுகிலோர் அரியணையைச்
சொந்தத் திறத்தாலே நிறுவி வுலவியவா! 
மனக்கண்ணில் நீகண்ட மகத்தான காட்சிகளைப்
புனைவுக்கண் ணாடியிலே புதுச்சந்தச் சேலைகட்டி
நடக்கவைத்த கலைஞா! நாடறிந்த கதையையாம்
படிக்குங்கால் பரவசத்தில் பாயவைத்த சொல்லுழவா!
காவியம் செய்யக் கவியெடுத்துச், சொற்களிலே
ஓவியம் செய்த உயர்சித்தி ரக்காரா!
ஆஹா எனவியக்கும் அற்புதத் திரைக்கதையைப்
பாகாய்க் கொடுத்து பாக்ஸாபீஸ் ஹிட்டடித்த
நல்ல இயக்குநனனே! நாவொன்றால் உன்புகழைச் 
சொல்லிக் களிக்கவொரு சுவைமாலை போதாது!
என்னைக் காக்க” என்றுசரண் எய்திநின்றேன்! 
என்வாழ்த்தைக் கேட்ட எழிற்கம்பன் சபாஷென்றான் 

வாவா உனக்கென்றன் வளமை உலகத்தை 
நாவாரச் சுற்றி நானே காட்டுகிறேன் 
என்றும் உரைத்தான் எழுந்த பரவசத்தில் 
நன்று நன்றெனநான் தலையை அசைக்கையிலே, 
கம்பன் சொல்லிவந்த கதைநாயகன் ராமன்
அம்பும் கையுமாய் அங்கெங்கோ சென்றிருந்தான்! 
அவனைப் பின்தொடர்ந்தோம்! அதற்குள் கம்பன் 
ரவிகுல திலகனை ரசித்தவிதம் சொல்கென்றான்! 
கம்பன் காவியத்துக் கதாநா யகனைநான் 
தெம்புத் தமிழ்ப்பாட்டால் அவனுக்கே சொல்கின்றேன்! 

“முன்னோர்சொல் அறம்பொருள் இன்பம்வீ டிவற்றையெலாம் 
மன்னவனாய்த், துறவியாய், மானிடனாய், வல்லிறையாய்க்
காத்துவந்த தூயவன்! கால்நடந்த பாதையெல்லாம்
பூத்துவந்த அன்பாலே புவிமணக்கச் செய்தபிரான்!
பிள்ளையாய் அண்ணணாய்ப் பிரியமான கணவனாய்
உள்ளன்பு வைத்தார்க் குற்றநற் றோழனாய்
எந்த இடத்திலும் ஏற்றநிலையின் அறங்காக்கச்
சிந்தை மிகக்கொண்டு சிரத்தையுடன் வாழ்ந்தவன்!
நீபடைத்த ராமனுக்கு நிறைகுணங்கள் பலவிருந்தும் 
நாம்பார்க்கும் ராமனுக்கு நாற்பொருளில் முதலான 
சொல்லறம், இல்லறம், வில்லறம், நல்லறமென் 
றெல்லாமே அறந்தான்! கவியரசே இங்கேயாம் 
ராமனை அறத்தின் வடிவென்றே பார்க்கின்றோம்!

ஆம்!
அறமே அவனுருவம்! இராமன் 
    அன்பின் திருவுருவம்! 
மறமும் அவன்சிறப்பு! அவனே 
    மாலின் மறுபிறப்பு! 

அவனியில் வாழ்வ தற்கோ 
    அறமதே வழியென் றாகும்! 
சுவரெனில் அறமே! அங்கு 
    சித்திரம் வாழ்க்கை! மண்ணில் 
தவநிலை, துறவு, மற்றும்
    தகுந்ததோர் குடும்பம், செல்வம், 
இவையெலாம் பெறுவ தற்கும் 
    ஈடிலா அறமே மார்க்கம்! 

அறத்திலே வகைகள் உண்டு 
    அவற்றுளே ராமன் காத்த 
குறிப்புடை அறமென் றாலோ 
    கூறுசொல் லறமாய்க் கண்டோம்!
மறுப்பாயோ கம்பா? கெட்ட 
    வரக்கியைக் கொல்லென் றாசான் 
குறித்தசொல் லறமாய்க் கொண்டு 
    கொன்றானே தாட கையை! 

மகளிரைக் கோரல் ராஜ
    வழக்கமே இல்லை! ஆனால் 
பகைமுடி கொல்க வென்று 
    பகர்ந்தவை குருவின் சொற்கள்!
தகும்குரு சொல்லும் சொல்லே 
    தரையினில் வேத வாக்கென் 
றகழ்ந்தனன் அரக்கி மார்பை 
    அதிலறம் சொற்கள் அன்றோ! 

ஆம்!
அறமே அவனுருவம்! - இராமன் 
அன்பின் திருவுருவம்! 
மறமும் அவன்சிறப்பு! - அவனே 
    மாலின் மறுபிறப்பு! 

என்றதும் வியந்தான் கம்பன் 
    எடுத்துரை மேலும் என்றான் 
நின்றவர் அமர்ந்து கொண்டோம் 
    நீண்டதே எங்கள் பேச்சு! 

காட்டுக் குப்போ ஸ்ரீராமா 
    கடுகிச் சொன்னாள் கைகேயி 
மாட்டேன் என்றா இவன்மறுத்தான் 
    மற்று, தந்தை சொல்லட்டும் 
காட்டை அடைவேன் எனச்சொல்லி
    கையா விரித்தான்! எனக்கேட்டேன் 
ஏட்டைப் பார்த்து நம்கம்பன் 
இல்லை என்று தலையசைத்தான்!  

மேலும் சொன்னேன் அதைக்கேட்ட 
    மேன்மைத் தம்பி இலக்குவன்தான்
மேலும் கீழும் குதித்தானே! 
    வேந்தன் முகமா மாறியது? 

வெகுண்டெ ழுந்த தம்பியுடை 
    வேகம் தவிர்த்து நல்விதமாய்  
மிகக்க னிந்த வார்த்தைகளால் 
    மகனைப் போன்ற இளையவனே 
பகையை விடுவாய் தவறிங்கே 
    பாழும் விதிமேல்! நமக்கல்ல! 
அகலச் சொன்னது தந்தையின்சொல் 
அறமதைக் காத்தல் என்றானே!  

எனவே, 
அறமே அவனுருவம்! - இராமன் 
அன்பின் திருவுருவம்! 
மறமும் அவன்சிறப்பு! - அவனே 
    மாலின் மறுபிறப்பு! 

அச்ச டித்த பதுமைபோல் 
    அமைந்த வதனம் எனநீயும்  
உச்சி கொட்டிப் புகழ்ந்ததெலாம் 
    உயர்ந்த அறத்தைத் தானன்றோ! 
நிச்ச யம்சொல் அறந்தானே! 
    நிறுத்திக் கேட்டேன் கம்பனிடம் 
மெச்சித் தலையை அசைத்தபடி 
    மேலும் தொடர்க எனச்சொன்னான்! 

காட்டினிலே சோகத்தில் வாழ்ந்திருந்த 
   சுக்ரீவன் கவலை கேட்டு 
மீட்டியதோர் அம்பாலே துயர்மாய்த்தான் 
   ஸ்ரீராமன் மீண்டும் ராஜ 
கோட்டைகளும் கொத்தளமும் கிடைத்திட்ட 
   மகிழ்ச்சியிலே குரங்குக் கோமான் 
நீட்டியதோர் சொல்மறந்து மதுவுடனும் 
   மாதுடனும் நிலையில் தாழ்ந்தான்! 

சொல்லறத்தைக் காக்கின்ற சூரிய 
   குலத்திலகம் சூடு கொண்டு 
நல்லவிதம் தம்பியிடம் சொல்கின்றான் 
   சுக்ரீவன் நட்ப றுத்தான் 
வல்லபெரும் நன்றியினை மறந்துவிட்டான்  
    தன்வாய்ச்சொல் மறந்தா னைநீ 
கொல்லுவது குற்றத்தில் சேராது 
    அவனெண்ணம் கொணர்க என்பான்!  

இதுவன்றோ சொல்லியதோர் சொல்லறத்தைக் 
    காக்கின்ற இதயம்! மேலும் 
மதுரமொழிச் சீதைக்கு தேன்சொல்லால் 
    அவன்தந்த வாக்கும் என்ன?
மதியாலும் இப்பிறப்பில் இன்னொருபெண் 
    றனைத்தீண்டேன் என்று தானே! 
இதுவரைக்கும் ஸ்ரீராமன் சொல்காத்து 
    அப்படியே இருக்கின் றானே! 

எனவே, 
அறமே அவனுருவம்! - இராமன் 
    அன்பின் திருவுருவம்! 
மறமும் அவன்சிறப்பு! - அவனே 
    மாலின் மறுபிறப்பு! 

என்றிடவும் உங்களைப்போல் கைத்தட்டி 
    பலேகவிஞ என்றான் கம்பன்! 
நின்றிருந்த மரமெமக்குக் கிளையசைத்துப் 
    பூத்தூவி நிறைவைச் செய்ய 
இன்னுமுண்டு சொல்லிடவா எனக்கேட்டேன் 
    சொல்லென்றான் இரண்டு பேரும் 
தென்றல்வரும் திசைநோக்கி நடையிட்டோம் 
    நான்தொடர்ந்தேன், சீதை என்னும் 

நல்லறத் தாளைக் கண்டு 
    நகரெரித் துவந்தோன், தெற்கைப் 
புல்லியத் தரையினோடு 
    பொற்புற வீழக் கண்டு 
சொல்லறச் செல்வன் ராமன் 
    சொல்வரும் முன்னா லேயங் 
கில்லையோர் துக்க சேதி 
    என்பதைத்  தேர்ந்தான் அன்றோ! 

மேலுமந்த போர்நேர்ந்த சமயம் தன்னை  
வேகமாக நீநினைத்துப் பாரேன் கம்பா! 

காற்றினிலே கலக்கின்ற தூசைப் போலக் 
    களமாடிக் கரைந்துவிட்டார் அரக்க வீரர் 
சேற்றினிலே தானொற்றைத் தாம ரைபோல் 
    செயலற்று தனியாக வாளும் இன்றி 
தோற்றநிலை விளிம்பினிலே தலையைத் தாழ்த்தித் 
    தோன்றுகிறான் எதிர்த்துவந்த இலங்கை வேந்தன்! 
ஆற்றுகிறான் நம்மண்ணல் பேச்சை! அப்பா 
    ஆளெல்லாம் பூளையெனப் போனா ரன்றோ! 

இன்றுமுதல் உன்தீமை அவிந்த தே!நீ 
    இமையவரை விண்ணனுப்பு! சிறைவைத் துள்ள  
என்னுடையை சீதையைநீ வீட னுப்பு 
    எனைச்சேர்ந்த வீடணனை நகர னுப்பு 
உன்னுடைய கர்வத்தைக் கீழ னுப்பு 
    உரியமணி முடியையவன் தலைய னுப்பு 
இன்னவிதம் செய்தாலுன் உயிரும் மிஞ்சும் 
    இல்லையெனில் போர்!அதிலே எதுதான் எஞ்சும்? 

நேருக்குச் சரண்சொல்லி யான்முன் சொன்ன 
    நிபந்தனைகள் நிகழுமெனச் சொல்லு வாயோ, 
போருக்குச் சீருடையும் வாளும் கொண்டு 
    பொருதிவர நிற்பாயோ எதுவா னாலும் 
யாருக்கும் தீங்கில்லை நாளைக்கேவா 
    இன்றைக்குப் போவென்று வழிதந் தானே!  
யாருக்கு வாய்த்திடுமிச் சொல்லின் நேர்மை 
    அறத்தலைவன் ஸ்ரீராமன் ஒருவனன்றி! 

பின்னுமொரு குகனிடத்தே ஐவர் என்றும் 
    பெருமுதவி செய்குரங்கால் அறுவ ரென்றும் 
மன்னவனாம் வீடணனால் எழுவ ரென்றும் 
    வழங்கியசொல் லறங்காத்து வாழ்ந்தான் ராமன்! 
சொன்னதொரு சொல்காக்கும் ராமன்! மக்கள் 
    சொல்லாத சொல்லஞ்சி சீதை தம்மை 
இன்னமொரு நெருப்பிடையும் இறக்கிப் பார்த்தான் 
    இதில்கூட இராமனறம் துலங்கு மன்றோ! 

எனவே, 
அறமே அவனுருவம்! - இராமன் 
     அன்பின் திருவுருவம்! 
மறமும் அவன்சிறப்பு! - அவனே 
    மாலின் மறுபிறப்பு!

எனநான் முடித்திடவும் எழுத்தாணி கையோடு
கனமாய்ப் பிடித்துக் குலுக்கி வாழ்த்துரைத்தான்! 
அறநாய கன்ராமன் ஐயமில்லை! சொல்லின் 
அறமேதான் அவன்காத்த அதிமுக்கிய மானவறம் 
ஒப்பினோம் என்றணைத்தான் ஒருநொடி கும்மிருட்டு 
தப்பிநான் பார்க்கையிலே தாளினிலே இக்கவிதை! 
மண்டபத்தில் யாரும் எழுதித் தரவில்லை 
மண்டைக்குள் கம்பன் வரைந்து கொடுத்ததென்று 
தேடிவந் திங்கே தருமிபோல் உரைக்கின்றேன் 
பாடிய பாட்டில் பிழையிருந்தால், மன்னித்துக்
கைத்தட்டுப் பொற்பை கணக்கிட்டுத் தாருங்கள்! 
மைக்தட்டி விடுமுன்னே இடம்சாரு வேன்நன்றி!!

-விவேக்பாரதி 
09.02.2020

Comments

  1. முழு கம்ப காவியத்தைக் கவி வரிகளால் காட்சிமைப் படுத்திய பாங்கு அற்புதம் வாழ்த்துகள்.
    வெ. நாதமணி

    ReplyDelete

Post a Comment

Popular Posts