இப்படி ஒரு படமா? | பார்த்துச் சொல்லுங்கள்!


”மலருடன்தான்
விரிகிறதே
உலகம் தினந்தினமே!

புது விடியல்
தினம் வருவதெலாம்
முதலில் மலரிடமே!

காற்றோடு அசைந்திடும் மலரே
நேற்றோடு உனக்கில்லை உறவே

நான் புதிதாகவே 
பிறந்தாகணும் உனைப் போலவே!
மறையாது நீகொண்ட சிரிப்பு

மாறாது உன் ஒளித் தெறிப்பு
ஓர் நாளாகினும் 
உன் வாழ்க்கையும் 
பொன்வாழ்க்கையே!!”

அவ்வளவுதான் பாடல் என்று காகிதத்தை நீட்டினேன். இது நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. 

நண்பன் இரவி சரஸ் ஒரு குறும்படம் இயக்க ஆசை கொண்டு என்னிடம் சொன்னான். சரி அதில் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு நீங்கள்தான் எல்லாமே என்றும் சொன்னான்.

முதலில் விளங்கவில்லை. பின்னர் தெரியவந்தது என்னுடைய எழுத்துகளுக்குப் புதிய களம் கொடுக்க முயற்சிக்கிறான் இரவி என்பது. சரி என்று ஒப்புக் கொண்டேன். 

“நீங்கள் ஒரு பாட்டும்! படத்தின் பின்னணி வசனங்களும் எழுதித் தர வேண்டும்” என்றான். 

“சரி! இந்தா பாடல்!” மேலுள்ள பாட்டை மட்டும் முதலில் எழுதிக் கொடுத்தேன். ”இவ்வளவுதான் பாட்டா” என்றான்.  "ஆம்! பின்னால் படத்தை முடித்துக்கொடு, பின்னணி வசனங்களைக் காட்சிகளைப் பார்த்து எழுதித் தருகிறேன்" என்றேன். 

சரி என்று ஒப்புக்கொண்டு நகர்ந்த இரவி, கொஞ்ச நாளில் படத்தை எனக்குக் காண்பித்தான். அதிர்ந்து போனேன்! டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவன் இரவி. அவன் எடுத்துக் கொண்டுவந்து காண்பித்த படம், என்னைச் சிலிர்க்க வைத்தது. “உருவுகண் டெள்ளாமை வேண்டும்” என்பதை அறிவுறுத்தியது. 

பரவசமாக காட்சிகளுக்கு வசனங்களை எழுதிக் கொடுத்தேன். என் கவிதைச் சுதந்திரத்துக்கு எள்ளளவும் தடை வாராமல் முழுவதும் எனக்கான ஸ்கோப்பைக் கொடுத்தவை இரவியின் மனமும், திரையின் அழகிய காட்சிகளும். பெரும்பாலும் நான் சிலாகித்த குட்டிக்குட்டி விஷயங்களை எழுதி இரண்டு இரவுகளில் இரவியிடம் சேர்த்தேன்! 

நல்லபடியாக படம் தயாரிப்பு முடிந்து வெகுநாட்கள் ஆகின்றன. சில தினங்களுக்கு முன்பு கூட யூடியூபில் படத்தைப் பதிவேற்றி என்னையும் முகநூலில் பகிரச் சொன்னான். ஒரு வார்த்தை கூட முகநூல் பக்கம் எழுத முடியாத அளவு நேர நெருக்கடியில் சிக்கியவன், இப்போது கொஞ்சம் விடுதலை அடைந்து மனம் நிறைக்க உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

இதோ யூடியூப் லிங்க்! பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்! பிடித்திருந்தால் வாழ்த்துங்கள்! வாழ்க இரவி! வாழ்க அவன் கலைத்திறம்!



Comments

Popular Posts