பாலகன் மேல் அருளாட்சி


(சிருங்கேரி சுவாமிகள் பாரதி தீர்த்தர் எழுதிய ‘கருட கமன’ பாடல் மெட்டி எழுதியது)

அழுது அழுது விழி துளிகள் மறந்து விட 
தினமும் தினமும் யுகமாகும் 
பழுது பழுது மனம் கதறும் கதறும் தினம் 
பதறி உதவிவிட வேணும் 

அடி! பார்வதியே நீ சாட்சி 
இந்தப் பாலகன் மேல் அருளாட்சி! 

உறவில் பிரிவில் தினம் உழலும் சிறுமை மனம் 
உருளும் புரளுமிக வாடும் 
நிறைவை முடிவை அது நிதமும் கருது கிற 
நிலைகள் தவங்களென நீளும்  (அடி பார்வதியே)

நினைவில் கதறுவதும் நிகழ்வில் உளறுவதும் 
நிதமுன் தொடருமொரு கோரம் 
கனவில் துயரமிலை தினங்கள் கனவுமிலை 
கதைகள் தொடரும்பல நேரம்  (அடி பார்வதியே)

வலிய வலிய வினை வலிகள் நிறைய தர 
பிழியப் பிழிய அழும் மூடன் 
பொலியு முனது பத மலரில் அமைய வரம் 
பொழுதும் விழையுமொரு பாலன் (அடி பார்வதியே)

பொறுமை இனியு மிலை கொடுமை அளவில் இலை 
கரமும் பதமுன் தர வாவா
நிறமும் வடிவும் அற நிஜமும் கனவும் விழ 
நிறைய நிறையவருள் தாதா  (அடி பார்வதியே)

-விவேக்பாரதி
08.04.2019

Comments

Popular Posts