உலக நாடக நாள்


நடிகன் என்பவன் நாட்டின் கலைமுகம்!
விடியப் போகும் வருங்கா லத்தை
முடிந்து நிலைக்கும் முற்கா லத்தை
வெடித்துக் கிடக்கும் நிகழ்கா லத்தை
நடிப்பில் காட்டும் நயங்கள் கொண்டவன்!
உள்ளுக் குள்ளே உலுக்கும் உணர்வு
பள்ளம் போலப் பட்டிருந் தாலும்
ஊரைத் தன்றன் உற்சா கத்தால்
சீரை மறந்து சிரிக்க வைப்பவன்!
உடலை மனத்தை ஒருசேர் கலனாய்த்
திடம்பட இயக்கத் தெரிந்த மனிதன்!
பாராட் டிற்குங் கைத்திட் டிற்கும்
நீராய் வியர்வை நிறைய உகுப்பவன்!
ஏட்டில் பாட்டில் எழுதிய தெல்லாங்
கூட்டி மக்கள் குடிக்கத் தருபவன்!
தன்னலம் என்பதைத் தாயகம் தாய்மொழி
நன்னலம் காத்தல் என்று பெயர்ப்பவன்!
விகடம் சிறுசிறு விளம்பரம் செய்தே
அகத்தில் செய்திகள் ஆழப் பதிப்பவன்!
மேடை ஏறி வேடம் கட்டினால்
ஆடும் கூத்தில் தன்னை இழப்பவன்!
எழுந்து நின்று கைத்தட் டுகிற
முழுமைக் காக மூச்சு பிடிப்பவன்!
பல்லோர் உலகில் பகைமை கொண்டும்
சொல்லில் பூசும் விஷத்தைக் கொண்டும்
பிறரின் வாழ்வில் பிழையாய் நடிக்க
அறத்துடன் மேடையில் மட்டும் நடிக்கும்
நாடக நடிகர் களுக்கென்
ஊடகம் திறந்த உயர்வாழ்த் துகளே!!

-விவேக்பாரதி
28.03.2019

Comments

Popular Posts