தீர்ந்து திறக்கட்டும்


அவள்
அழுகைத் துளிகள் அமிலத் துகள்கள்
ஆணே அறியாயோ? - உனை
முழுதாய் அழிக்கும் மூர்க்கம் என்றே
முதலில் உணராயோ?

அவள்
கதறல் ஒலிகள் கத்தி முனைகள்
கருத்திற் கொள்ளாயோ? - நீ
அதைத்தான் விரும்புகின்றாய் என்றால்,
அழிவை மதியாயோ?

அவமானத்தில் தலைகள் கவிழ
அழுது குணிந்து கண்கள் கரைய
ஆணினம் மொத்தம் வெட்கிக் கிடக்கும்
இந்த வேளையில்,
இனி
மழைதான் வருமா? வசந்தம் வருமா?
கொளுத்தும் வெயில் குளுமை பெறுமா?
சோகக் கண்ணீர் பாவம் கழுவ
கடந்து போகக் காட்சிகள் உண்டாம்!

என்ன வளர்ந்தோம்? எங்கோ தொலைந்தோம்!
ஏனோ மூர்க்கத் தீயில் எரிந்தோம்!
வக்கிரம் காணும் விளையாட் டானது!
மக்கள் வாழ்வு மல்லரங் கானது!
முறைத்துப் பார்க்கும் பாலினக் கோரம்!
மறைக்கப் பார்க்கும் அரசியல் புத்தி!
இதற்கு மத்தியில் மூச்சு விடுகிறேன்
நாசி குமட்டி நடுங்குதல் காணீர்!

வார்த்தை எவர்க்கும் வாழ்க்கை தராது
வார்த்தை அன்றி அழவழி யேது?
தீர்ந்து போகட்டும் மானுட மிருகம்
திறக்கட்டும் இனி புதிய பாரதம்!!


மன வருத்ததுடன்
விவேக்பாரதி
13.03.2019


Comments

Popular Posts