உலகம் அளந்து பார்க்காத ஆழம்
உலகம் அளந்து பார்க்காத ஆழம், பெண்மை. அனைத்து மகளிர்க்கும் எனதினிய மகளிர் தின வாழ்த்துகள்
பெருமை அளந்திடும் சீதனம்
பெண்மை என்பதோர் பூவனம் - அது
பேண வேண்டிய தோர்வளம்!
பெண்மை காப்பதே நம்கடன் - அப்
பேறு வாய்ப்பதே தெய்வதம்
பெண்மை வாழ்கெனப் பாடுவோம் - எந்தப்
பெண்ணைக் கண்டாலும் போற்றுவோம்!
ஆணின் பலமெலாம் ஊனிடம் - பெரும்
ஆன்ம பலமெலாம் பெண்ணிடம்
காண வேண்டிய கீர்த்திகள் - நம்
காரி கைவசம் பூர்த்திகள்
பேணும் நல்லறம் பெண்ணிடம் - பல
போரும் அமைதியும் பெண்ணிடம்
தூணைப் போலதைக் காத்துதான் - எதிர்
தோன்றும் போதெலாம் வாழ்த்துவோம்!
வானின் மாமழை தாய்க்குணம் - அலை
வண்ணக் கடலும் காதல்மனம்
சேனை ஆயிரம் ரௌத்திரம் - பல
செழுமை பெண்கொளும் பூரணம்!
ஞானம் அவர்சொலும் போதனை - அவர்
நாமம் தேன்வரும் கீர்த்தனை
தானு ணர்ந்திதை ஏத்துவோம் - பெருந்
தண்மை பெண்களைப் போற்றுவோம்!!
-விவேக்பாரதி
08.03.2019
Comments
Post a Comment