சகியைத் தேடி


கைகள் நீட்டித் தேடுகின்றேன் - என்
   காதல் நிலவை காணவில்லை!
கண்கள் விரித்துக் காத்திருந்தும் - அவள்
   கனிந்த கைகள் தீண்டவில்லை!
சைகை மொழியில் தேடுகின்றேன் - என்
   சகியை ஏனோ காணவில்லை
சலங்கை சத்தம் கேட்கிறது - அவள்
   சரிந்த நிழலைக் காணவில்லை!

என்னை எழுப்பப் பின்முதுகில் - அவள்
   எட்டி உதைப்பாள்! நேரவில்லை!
ஏதோ காதில் முணுமுணுத்து - அவளை
   ஏந்தி அணைப்பேன்! நிகழவில்லை!
கண்ணைத் திறந்து கன்னத்தில் - நான்
   கவிதை இடுவேன்! காணவில்லை!
காலம் மட்டும் செல்கிறது - எனைக்
   கையால் மீட்பாள் தோன்றவில்லை!

அத்தான் என்பாள் ஆசையுடன் - நான்
   அதைத்தா என்பேன் வாஞ்சையுடன்
அதிகா லையிலா என்றபடி - என்
   ஆசை தணிப்பாள் இளையகொடி
பித்தா என்பாள் முரண்பிடிப்பாள் - அது
   பிடித்திருந் தாலும் அவள்துடிப்பாள்
பிறையாய் நாணி முகம்குழைவாள் - அப்
   பிரியத் தில்நான் கண்மலர்வேன்!

இப்போ ததுபோல் நேரவில்லை - என்
   இரவு தீர வழியுமில்லை
இதயம் திருடிப் போனகிள்ளை - அவள்
   எங்கே உள்ளாள் தெரியவில்லை!
எப்போ தேனும் கனவுகளில் - கண்
    இமைக்காப் போதில் நினைவுகளில்
என்முன் வருவாள் சிரித்தபடி - எனை
   எழுதச் சொல்வாள் அணைத்தபடி!

பூமிப் பந்து சுற்றுவதைச் - சில
   போது மறக்கும்! நானவளின்
போகம் மறத்தல் சாத்தியமோ? - அப்
   போதை தவிர்த்தால் இன்பமுண்டோ?
சாமிக் கெல்லாம் உயர்தலைவி - என்
   சக்தி கொடுத்த உறவல்லவோ!
சகியை வேண்டிக் காத்திருக்கும் - இச்
   சென்மம் கவிதை வரவல்லவோ!!

-விவேக்பாரதி
16.03.2019

Comments

Popular Posts