உணர்ச்சி ஆயுதம்

Image result for suicide

"காதல் என்பது பருவப் பிழை
அதற்கு உன்றன் உயிரா விலை?" 

என்று கேட்பார் என் நண்பர் கவிஞர் மா.கார்த்திக். இன்றைய இளைஞர்கள் மத்தியில் இந்தக் கொடும் பழக்கம் குறைந்திருக்கிறது என எண்ணி இருக்கும் காலத்தில் என் உயிரை உலுக்கும் இன்னொரு சம்பவம். என்னோடு கல்லூரியில் என் வகுப்புக்கு பக்கத்து வகுப்பில் பயிலும் மாணவன், என் நண்பன், நல்ல சிந்தனையாளன், உணர்வாளன் தென்னழகின் மறைவு. ஒரு மனிதன் எவ்வளவு படித்திருந்தாலும், எத்தகு நிலையில் இருந்தாலும் தான் கட்டுப் படுத்த வேண்டியது தனது உணர்ச்சியையும் அதனால் ஏற்படும் பின் விளைவுகளையும். அவன் ரொம்பவே உணர்ச்சியின் வசப்பட்டவன். இந்த நாட்களின் இளைஞர்கள் சென்ற தலைமுறையைக் காட்டிலும் துணிச்சலோடு விளங்குகிறார்கள் என்பதை இன்றைய தலைமுறையும் நேற்ற தலைமுறையும் ஒப்புக்கொள்ளப் போகும் ஒரு செய்தி தான். ஆனால் அத்தகு எழுச்சிக்கும் வீரியத்திற்கும் அடிகோலும் உணர்ச்சி என்னும் மிக வலிமையான ஓர் ஆயுதம் இது போன்ற அவலங்களையும் உருவாக்குகிறது என்பது மிகவும் வருந்தத் தக்க உண்மை.

இளைஞர்கள் உணர்ச்சிப் பூர்வமாக முன்னெடுக்கும் பல போராட்டங்களும், பல எண்ணங்களும் நன்மையின் பக்கமும் வெற்றியின் பக்கமும் இச்சமூகத்தை ஈட்டுச் செல்கின்றது என்பதை ஒவ்வொரு இளைஞனும் உணரும் பட்சத்தில் சமுதாயத்தில் அவன் நடத்தையில் சில பொறுப்புகள் அவனுக்கு இருக்கின்றன என்பதன் எண்ணம் அவனுக்குள் கருவாக வேண்டும். உணர்ச்சியின் வசம் சிக்கிக், காதலின் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்களது எண்ணம் தற்காலத்தில் மாற ஒரு சில திரைப்படங்களும், உளவியல் ஆர்வலர்களும் பெரிதும் போராடினர். அதன் விளைவு, தாக்கிக் கொள்வது சென்று தாக்குவது என்ற அவல நிலையைக் கட்டவிழ்த்தது. அமில வீச்சு, கத்தியால் வெட்டு என்று பலதரப்பட்ட தாக்குதல்களுக்கும் இளைஞர்கள் ஆளானார்கள். இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் காரணமாக நாம் வைத்துக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டியது உணர்வுகளைத் தான். பாவம் உணர்வுகளைத் தண்டிக்க முடியாதே. ஆனால் கண்டிக்கலாம். அடக்கலாம். நல்வழியில் செலுத்தலாம்.

விசை மிகுந்த ஒரு காட்டாற்றைக் கூட குறுக்கி நெறிப்படுத்தி அதன் ஆற்றலின் அவசியத்தைச் சீர்படுத்தும் இடத்தில் மின்சாரம் பிறக்கிறது. இதுதான் விதி மற்றும் கட்டுபாடுகளின் மைய நோக்காக இருக்க வேண்டும். உணர்ச்சியின் வசப்படும் மாணவர்கள் அனைவரும் மனத்தை ஒருநிலைப் படுத்தும் முயற்சிகளில் இறங்க வேண்டும். தியானம் யோகம் மட்டும் மனத்தை ஒருமுகப் படுத்தும் முறைகள் அல்ல, புத்தகம் படிப்பதும், கடிதம் எழுதுவதும், பயணப் படுவதும் ஒருமுகம் தான். இளைஞர்கள் என்னும் அளப்பரிய சக்தி உணர்வுகள் என்னும் ஆயுதத்தைப் பகையின்பால் திருப்பி வெல்ல வேண்டும். தவறாகக் கையாண்டு தன் கழுத்துக் குறிவைக்கக் கூடாது.

"கொள்கை நிலைப்பாடு" என்பது சமுதாயத்தை நேசிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் இருக்க வேண்டிய ஒன்று. சமயப் பற்று இல்லாது போனாலும் சமுதாயப் பற்று நிச்சயம் இருக்க வேண்டும். அந்தச் சமுதாயப் பற்றின் அடிப்படை, "நம்மை உலகம் பார்த்து நடந்து கொள்கிறது அதனால் நமது செயல்களில் கவனம் தேவை" என்பதே. உணர்ச்சி எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம், அது நன்மையைப் பயக்குமா என்ற குறைந்தபட்ச யோசனையே அடிப்படை பகுத்தறிவு.

வன்புணர்வு மட்டும் குற்றமல்ல. தற்கொலையும் குற்றமே!

வருத்தத்துடன்
-விவேக்பாரதி
08.09.2018

Popular Posts