நானும் அவனும்


உன்னைச்சுற்றி வருவதல்லால்
ஒன்றுமே அறிதற்கில்லேன்
என்னைச்சுற்றும் பிணியறுத்து
ஏகாந்த வாழ்வமைத்துத் 
தன்னைச்சுற்றும் தன்மை மட்டும் 
தாரகமாய்க் கொடுத்து
மண்ணைவிட்டு விண்ணெடுத்து
மகிழ்ந்திட வேண்டும் ஐயா! 

நட்டநடு நெஞ்சுக்குள்ளே
நடித்திடும் ஒருத்தனும் நீ
வெட்டவெளி தன்னில் வைத்து
விளையாடி ரசிப்பவன் நீ
கிட்டவந்தும் எட்ட நின்று 
கிளர்ச்சிகள் தருபவன் நீ
குட்டிமனம் காணுகின்ற 
குறைகளைத் தீர்ப்பவன் நீ

பூக்களிற் சிரிப்பவன் நீ
புயலென வருபவன் நீ
பாக்களைத் தருபவன் நீ
பாடிடக் கேட்பவன் நீ
தேக்கிடும் நெஞ்சுக்குள்ளே
தெளிந்திடும் எண்ணமும் நீ
ஆக்கிடும் பாவமெல்லாம்
அறுத்திடும் கத்தியும் நீ! 

ஓடிடும் எறும்பினில் நான்
ஒய்யாரக் குயிலினில் நான்
ஆடிடும் அலைகளில் நான்
அசைத்திடும் காற்றினில் நான்
வாடுதல் நீக்கி விட்டு 
வாழ்வுக்கு வழி கொடுத்துத் 
தேடுதல் தீர்ப்பாய் என்று 
சேர்கிறேன் காப்பாய் ஐயா!!

-விவேக்பாரதி
13.09.2018 

Comments

Popular Posts