நெழல் இருக்குமா?


மக்கா தெரிஞ்சிக்க - எப்பவும்
வானம் தான் பெருசு - அது
முக்காலத்திலும் எட்டா தொசக்க
முறுக்குற திணுசு 


ஆத்த மறிச்சி வீட்ட கட்டி
ஐயோ வெள்ளமுன்னு - நாம
அலறித் திரியுறோம் - இங்கக்
காத்தக் கெடுத்து மழையத் தடுத்து
காவிரி வர்லேன்னு - அடடா
கண்ணீர் சிந்துறோம்!

காட்டத் திருத்தி கழனி வெச்சான்
காட்டு வாசிதான் - அவனும்
நம்ம சாதிதான் - வயக்
காட்ட அழிச்சு கட்டிடங் கட்டி
காசுக்குத் தண்ணியையும் - இப்போநாம
கஷ்டத்தில் வாங்குறோம்!

மலைய வெட்டி பாத செஞ்சு
நமக்கு முப்பாட்டன் - அழகா
ஆத்துக்கு வழிவிட்டான் - இப்போ
நெகிழி திணிச்சு ஆத்து வழியில
மலைய செஞ்சுப்புட்டோம் - வெட்டதான்
மனுஷன் போறவில்ல!

உனக்கும் எனக்கும் மட்டும் இல்லே
அடுத்த சந்ததிக்கும் - ஒலகம்
இருக்க வேணுமடா! - நம்ம
மனசு போக்குல அழிச்சுப் போனா
புள்ளைக்கும் பேரனுக்கும் - மல, நதி
மரம் இருக்காதே!! - ஒதுங்கிட
நெழல் இருக்காதே!

-விவேக்பாரதி
15.09.2018

Popular Posts