நாட்டியத் தாரகை

Image result for bharatanatyam paintings


நர்த்தனத் தாரகையே - உயிர்
நாடியிலே சுரம் கோடி இசைத்திடும்
அற்புத மானவளே!

வித்தகத் தேன்கனியே - எழில்
வீச்சுடன் வந்தென்றன் மூச்சை நிறுத்திடும்
முத்து நிறத்தவளே!

நாட்டிய நாயகியே - விழி
நாளும் சுழற்றிடும் வாளெனக் கொண்டனை
மாட்டினேன் நானதிலே!

பூட்டிய சதங்களையுடன் - சிறு
புன்னகையால் பல பொன்னகை தோற்பதைக்
காட்டிட வந்தவளே!

செம்மை நிறத்தழகே - உனைச்
சேர்வது தான் மனம் நேர்வது தான் எண்ணம்
சம்மதம் சொல்லடியே!

சிம்மத்தின் பெண்மகளே - இடைச்
சினுங்கலிலும் இதழ் முனகலிலும் இசைக்
கும்மிகள் செய்பவளே!

அஞ்சனம் விழியிலடி - எனை
ஆட்டி நடத்திடும் ஈட்டிச் சிரிப்பொலி
கொஞ்சுவ துன்னிதழ்கள்!

மஞ்சள் வரைந்தகன்னம் - புது
மாலை நிலவெனச் சோலை மலர்த்திடும்
பிஞ்சுப் பிடிவிரல்கள்!

கொவ்வை இதழ்ச்சிரிப்பே - கலை
கொஞ்சும் முகத்தெழில் மஞ்சு நிறக்குழல்
செவ்விய பெண்மணியே!

கவ்விய காரிருளில் - முத்தக்
கனிகள் பறிப்பதில் கனலை வளர்ப்பதில்
பவ்வியம் பார்ப்பதுவீண்!

எண்ணச் சிதறெல்லாம் - முந்தி
என்னை அடிக்கையில் மின்னல் வெடிக்கையில்
கண்ணில் சிரிப்பவளே!

மண்ணில் உனைத்தொழவே - கவி
வார்த்தைகளைப் பதம் கோத்துப் படைக்கிறேன்
பெண்மைக் குயர்ந்தவளே!

பாட்டுக்குப் பஞ்சமில்லை - உனைப்
பார்த்திடப் பார்த்திட ஆர்த்து வருங்கவி
வேட்டுக்குப் பஞ்சமில்லை

கூட்டுக்கு நெஞ்சமழும் - மிக
குழைந்து குழைந்துனை அழுது நினைந்தது
நாட்டத்தைப் பாடியழும்

சேர்க்கத் தயக்கமில்லை - உனைச்
சேருவதன்றி நோய் தீருவது எங்கணம்?
வேர்க்கக் கவிவரைந்தேன்!

பார்க்கத் தயக்கமுண்டோ? - என்றன்
பார்வதியே மயிலே ரதியே எனைக்
காக்கப் பணித்தனையோ??

-விவேக்பாரதி
15.09.2018







Popular Posts