உடனே விழி தமிழா

பைந்தமிழ்ச் சோலை கவியரங்கம்
-மாங்காடு, சென்னை-  


காப்பு 

மஞ்சள் உருப்பிடித்த மாதா வினைகாக்க 
நெஞ்சம் நிமிர்த்திய நேர்முகனே - அஞ்சேல் 
எனச்சொல்லி இந்த எளியேனைக் காப்பாய் 
உனைச்சொல்லில் வைத்தேன் உயர்த்து! 

தலைவர் வாழ்த்து - கவிஞர் கவினப்பன்

பேராசான் தந்த பெருமை மிகுமவையில் 
பேராசை யாலேநான் பேசவந்தேன்! - ஊராசி 
பெற்றுயர்ந்த மாவரதன் பெற்றியெலாம் பாடிடக் 
கற்றுயர்ந்தோர் செய்வார் கவி! 

அரங்கத் தலைவர் அழகுத் தமிழைத்
தரங்கமென வீசுகின்ற தங்கம் - மறந்தநம் 
சங்கத் தமிழெடுத்துச் சாற்றுவார் பாட்டுத்தார்! 
சிங்கக் கவினப்பன் தீ! 

உடனே விழி தமிழா

உடனே விழி தமிழா - என்ன 
உறக்கம் இது புதிதாய்?  

தமிழா என் தமிழா - உன் 
   தரங்களை எல்லாம் தடுத்திடு வோரால் 
அமிழ்த்தப் படுகின்றாய் - உனது 
   ஆற்றல் பெருமலை பேர்க்கும் அதிசயம் 
குமைந்திவை அறியாமல் - நீ 
   குணிந்தவ னாகி அடிபல வாங்கி 
நிமிர்தல் மறக்கின்றாய் - உன் 
   நினைவை எழுப்பிட கனலைப் பதிக்கிறேன்! 

தேசத்துச் சிந்தனையே - அற்று 
   தெளிவை மறந்தொரு பழியின் நிலையினில் 
மாசுற்று வீழுவதா? - பல 
   வளங்கள் படைத்தநம் செழுமை நிலத்தினைத் 
தூசுக்குள் தள்ளுவதா? - வெறும் 
   தோற்றப் புகழ்ச்சியில் நாட்டம் மிகக்கொண்டு 
ஆசையில் வாடுவதா? - நீ 
   அறிவை வளர்த்திடக் கனலைப் பதிக்கிறேன்! 

விளம்பரம் நம்பிநம்பி - மதி 
   விலையில் சறுக்கிட வாழும் நிலையிருள் 
உளத்தில் பிரிவினைகள் - மிக 
   உயர்வாய் வளர்வது கொடுந்துயர் பேயிருள் 
களத்தை மறந்துவிட்டு - பெருங் 
   கணினிகள் செய்யும் கணக்கும் இருளதில் 
விளக்கின் ஒளிகண்டுநீ - இரு 
   விழி திறக்கப் புதுக் கனலைப் பதிக்கிறேன்! 

உன்விழிப்பே உதயம் - இறை 
   உனக்குள் இருந்துபல் கணக்கை நிகழ்த்திடும் 
உன்னதப் பேரிதயம் - அதன் 
   உச்சி பிடித்துநீ கச்சித மாகவே 
மின்னல் படைத்துவிடு - செயும் 
   வினையும் கவனமும் சூல்கொண்ட கார்முகில் 
இன்னும் உறக்கமென்ன - தோள்
   இமயம் நிகர்த்திடக் கனலைப் பதிக்கிறேன்! 

சாதியை நீக்கிடடா - தமிழ்ச் 
   சமுகம் பழையது மிகவும் பெரியது 
நீதியைக் கொண்டதடா - அதை 
   நீசர் வெறுக்கிறார் நீவந்து காத்திடு 
ஆதியும் நம்மொழியே - சுவை 
   அமிழ்தக் கலசங்கள் தமிழக் கவிதைகள் 
வீதியெல் லாமுழங்கு - புது 
   வீச்சுடன் நீவரக் கனலைப் பதிக்கிறேன்! 

தெய்வத்தில் நம்பிக்கையும் - அது 
   தெரிவது நாம்செயும் கடமையி லென்கிற 
உய்வித்தையும் அறிந்தே - பலர் 
   உயர்ந்திட உயர்த்திட துள்ளி நடந்திடு 
கைவைத்த இடமமிர்தம் - உன் 
   கரங்களை போலொரு தெய்வமில்லை மதி 
மெய்வித்தில் ஆழ்ந்திடட்டும் - விதை 
   மேல்வைத்த தீயினில் வாழ்ந்து செழிக்கட்டும் 

உடனே விழி தமிழா! - என்ன
உறக்கம் இது சரியா?

-விவேக்பாரதி 
23.09.2018

Popular Posts