யாதுமாகும் பெண்மை - சித்திரைக் கவியரங்கம், கோவை

Image may contain: 5 people, including Valiyur Subramanian, பொற்கைப் பாண்டியன், Muthaiah Marudhavaanan and Vivek Bharathi, people smiling

இறைவணக்கம்

நின்றாளை அசுரர்களைக் கொன்றாளைப்
   பச்சைமா நிறத்தி னாளை
நன்றாளை அரிமேலே சென்றாளை
   வண்டாடுங் குழலி னாளைக்
குன்றாளை இடபாகம் வென்றாளை
   நமைக்காக்கும் குணத்தி னாளை
மன்றாடித் தமிழ்செய்வேன் மாசொன்றும்
   வாராது காக்க தாயே!

அவை வணக்கம்

முன்னிருக்கும் மூத்தோர்க்கும் முத்தமிழ்க்கும் என்பேரின்
பின்னிருக்கும் பாரதிக்கும் பீடுடையிப் போழ்துக்கும்
கோவை நகரில் கொழுந்தமிழ்த் தேன்சுவைக்கும்
நாவுடைய மக்களுக்கும் நற்றிசைக்கும் காற்றிற்கும்
என்னை எழுதவைக்கும் ஏதமிலா ஆதிசக்தி
அன்னைக்கும் மற்றும் அனைவருக்கும் என்னோடு
யாதுமாகி நிற்கின்ற யவ்வணப் பெண்மையை
ஓதிப் புகழவந்த ஒண்டமிழ்ப் பாவலர்க்கும்
நல்லதமிழ் கேட்க நலமான பாமன்றை
வல்லபடி வைத்த வள்ளல் கிருஷ்ணாஸ்வீட்ஸ்
மக்களுக்கும் ஏணை மனங்களுக்கும் இப்போது
வானொட்டக் கைதூக்கி வாழ்த்தி வணங்குகிறேன்
நானொரு சின்னப் பயல்!

தலைவர் வாழ்த்து

வாத்தியார் என்று நாங்கள்
   வாஞ்சையோ டழைக்கும் கல்வி
மூத்தவர் இளைஞர் நெஞ்சை
   முடுக்கிடும் இளைஞர்! நூல்கள்
யாத்தவர் முன்னம் வந்து
   யானுமே வணங்கிக் கைகள்
சேர்த்தவர் தலைமை வாழ்த்திச்
   செப்புவன் கவிதை யிங்கே!

வவேசு தலைவரை வாழ்த்தித் துவங்கும்
விவேக்பா ரதியின் விசை!

இயற்கையின் வடிவமாய்

பார்க்கும் இடமெல்லாம் பட்டொளிரும் பொற்கிரணம்
ஈர்க்கும் படிவாய்ந்த இன்பத்தின் மாலையிலே
யாருமிலா வோரிடத்தில் யான்மட்டும் ஆண்டவனின்
சாரத்தை எண்ணியெண்ணிச் சந்தோஷம் கொண்டிருந்தேன்!
கீற்றில் கிளிவந்து கீச்சலிடும் அப்போதில்
காற்றின் அலைவரிசை காதுதொடும் அப்போதில்
எங்கும் ஒளிபரவி ஏவவரும் கும்மிருட்டைக்
தங்கத் துணிபோட்டுத் தானாய் வரவேற்கும்
காட்சிபோல் நின்ற கவிதையெனும் அப்போதில்
சாட்சிபோல் நான்மட்டும் சாலைவழி பார்த்திருந்தேன்!
தென்றல் எடுத்துவரும் தெம்மாங்கு பாட்டுடனே
அன்றில் பறவையென அங்கொருத்தி வந்துநின்றாள்!
கம்பன் புகழ்கின்ற காவியத்தின் சீதையென
நம்பிநான் ஏமாற நங்கையவள் நின்றிருந்தாள்!
மாலைக் காற்றுலவும் மங்கலத்துக் கூந்தல்வழி
ஜாலம் பலவியற்றி சண்டாளி நின்றிருந்தாள்!
நான்கண்ட காட்சி நயமான சிந்தனை
வான்கண்ட விந்தை வடிவழகென் றெல்லாமே
மங்கையிடம் கண்டு மனம்வியந்து நின்றுவிட்டேன்!
சங்கப் புலவர்முதல் சற்றுவந்த புலவர்வரை
சொல்லிப் புகழ்ந்தகதை சோம்பல்தரும் என்றாலும்
சொல்லப் புகுந்தவிடம் சொந்தவிடம் என்பதனால்
மீண்டும் உரைக்கின்றேன் மேதினியீர் இயற்கையெலாம்
தூண்டுகிற பெண்ணினத்தின் தோற்றமெனக் கண்டிடுவீர்!

(வேறு) 

கவிழ்ந்துகொட்டும் கருப்பருவி கூந்த லென்பேன்!
   கதிருருண்டை நிலவுருண்டை கண்கள் என்பேன்!
அவிழ்ந்துவிடும் மலரினமோ இதழ்கள் என்பேன்!
   ஆர்ப்பரிக்கும் நீர்ச்சுழிபெண் அங்கம் என்பேன்!
தவழ்ந்துவரும் காற்றசைவோ வளைவு கண்டீர்!
   தாழ்வில்லா மலைமுகடு மார்ப கங்கள்!
குவிமுனையின் சிகரநுனி மூக்கின் நேர்த்தி!
   குகைபோலே புதிர்பரப்பும் பெண்கள் உள்ளம்!

வாழையிலை வளவளப்பும் பெண்மை யாகும்,
   வலுவாண்மை மட்டுமெனில் கிழிந்து போகும்!
வீழவரும் மரநிழல்கள் காக்கும் பெண்மை,
   விளையாட்டாய்ப் பயமுறுத்தும் இருளும் பெண்மை!
சூழுமொரு நறுமணமும் பெண்மை கண்டீர்,
   சுகமியற்றும் புளகமது சாட்சி சொல்லும்
ஆழமிலா அந்தமிலா வானும் பெண்மை
   அதிலூறும் நாண்சிவப்பே சாட்சி கண்டீர்!

உயிர்களையே வளமாக்கச் சுரப்ப தாலே,
   ஊற்றுநதி யாறெல்லாம் தாய்ப்பா லாகும்!
பயிர்களையும் செடிவிதையும் சுமப்ப தாலே,
   பக்குவத்து நெல்வயல்கள் கர்ப்பப் பெண்மை!
மயிலினத்தின் மழையாட்டம் பெண்மை ஆகும்,
   மங்கையரின் மனக்காதல் அதற்குச் சாட்சி!
குயிலினத்தின் மறைவான வாழ்வும் பெண்மை,
   குடும்பத்தில் தாய்தியாகம் அறிவோம் யாரும்!



(வெறு) 

சிப்பியில் முத்து நன்கு
   சிவந்திடும் பவளம் இன்னும்
ஒப்பிலா மீன்கள் கோடி
   உறைவது கடலின் தூளி!
செப்பிட அலைக்க ரங்கள்
   திரந்தமண் மீது நீட்டிக்
கப்பென அரவ ணைக்கும்
   கடலொரு பெண்மை அன்றோ!

நுண்ணுயிர் வாழ்வ தற்கும்
   நூதன மிருகம் பட்சி
எண்ணிலா வகைகள் எல்லாம்
   எழிலுற வாழ்வ தற்கும்
மண்ணுளான் மனிதன் நன்றாய்
   மகிழ்ச்சியாய் வாழ்வ தற்கும்
விண்ணையாள் வேர்கள் தூக்கும்
   விருட்சமும் பெண்மை அன்றோ!

காதலாய்க் குலவி நாளும்
   கவிதைகள் படைப்ப தற்கும்
மோதலும் நிகழ்ந்து விட்டால்
   மோனமே நினைவ தற்கும்
ஆதர வாய மைந்த
   அழகிய சோலைப் பூக்கள்
கீதமாம் வண்டின் நாதம்
   கிளர்த்திடும் பெண்மை அன்றோ!


(வேறு) 

நெல்குணியும் உயர்நாணம் வரப்பெடுக்கும்
   நேர்பாதை நிறையும் பெண்மை!
வில்வளையும் காட்சிகளும் விரிந்திருக்கும்
   ஜாலமெல்லாம் வியக்கும் பெண்மை!
கல்குடையும் வண்டினிலே காண்கின்ற
   சூக்குமமும் கடமைப் பெண்மை!
இல்லமைத்தும் இறைபிடித்தும் காக்கின்ற
   சிங்கங்கள் இரும்புப் பெண்மை!

வாய்தேடிச் சோறுட்டும் பறவைகளின்
   உயர்பெண்மை! வாழ்வில் எங்கும்
நோய்தேடித் தீர்க்கின்ற மூலிகைகள்
   மருந்துக்கள் நூத னத்தன்
பாய்தேடி வீழ்கின்ற பாரதத்தை
   எழுப்புகின்ற பகலும் பெண்மை!
சேய்தேட அருகணையும் நிழல்பெண்மை!
   நிஜம்பெண்மை! செழுமை பெண்மை!

பொறுமைக்கு நிலம்பெண்மை! பொழிவுக்கு
   வான்பெண்மை! போதைக் கான
நறுமணத்துப் பூபெண்மை! நன்னீரின்
   சுவைபெண்மை! நம்பக் காக்கும்
அறம்பெண்மை! வேர்கொள்ளும் ஒப்பந்தம்
   அவைபெண்மை! அழிந்தால் கூட
பிறவிக்கு வித்தாகும் வரம்பெண்மை!
   இயற்கையெலாம் பெண்மை பெண்மை!



(வேறு) 

என்று புகழுரைத்தேன் - அவள்
   எழிலைக் கவியென மொழிபெயர்த்தேன்
நின்று முழங்கிவிட்டேன் - கவி
   நீட்டியதும் அவள் தொலைந்துவிட்டாள்

மாலை இருட்டாச்சு - நிலா
   மங்கித் துளிர்த்து சிரிச்சாச்சு
வேலை முடிந்தாச்சு - மன
   வேகம் சமநிலை கண்டாச்சு

கன்னி மறைந்தாச்சு! - பெருங்
   கவிதை கொடுத்துப் பறந்தாச்சு
மின்னல் இடியாச்சு - நெஞ்சில்
   மின்மினிப் பூச்சி உயிர்த்தாச்சு!

என்று சிரித்துக் கொண்டேன் - கவி
   ஏற்றிக் கொடுத்தவள் நல்லியற்கை
இன்று படித்துவிட்டேன் - அதை
   இயற்றிக் கொடுப்பது கவியியற்கை!!

-விவேக்பாரதி
12.04.2018

Popular Posts