நேற்றைய நெஞ்சிலிருந்து - HIV, AIDS விழிப்புணர்வு

எங்கள் கல்லூரிக்கு AIDS மற்றும் HIV கிருமி குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் சொல்லி உரையாற்ற சில இளைஞர்கள் வந்தார்கள். அவர்களில் பலர் வெளிநாட்டவர். எல்லா வகுப்புகளுக்கும் சென்று இந்த நோயைக் குறித்த விழிப்புணர்வைப் பரப்பினார்கள். எல்லா இடத்திலும் தான் இது போல நடக்கின்றது ஆனால் இவர்கள் சொன்ன முக்கியமாக விஷயமே, "Breaking the STIGMA" என்னும் மூட நம்பிக்கைகளைப் பெயர்த்தல். HIV மற்றும் AIDS நோயைக் குறித்த குழப்பங்களும் வதந்திகளும் மனிதர்களை பயமுறுத்துகின்றன. சாதாரணமாக இருக்கும் ஒருவருக்குக் கூட அவருக்குத் தெரியாமலேயே இந்நோய் வந்து தாக்கக் கூடும். ஒரு அட்டைப் பூச்சி எப்படி வலிக்காமல் ரத்தத்தை உறிஞ்சி எடுக்குமோ அதனைப் போல பாதிக்கப்பட்ட மனிதரின் உடலில் ஆரம்ப கட்டத்தில் தனது இருப்பைக் காட்டாமல் மொத்த நோய் எதிர்ப்பு சக்தியையும் தாக்கும் கிருமி இந்த HIV கிருமி. இது உண்மை. இது தொட்டால் பரவும், எச்சில் மற்றும் வியர்வையால் பரவும் என்று மக்களை ஒதுக்கி வைப்பது என்பது வதந்தி. இதனைத் தெளிவாக விளக்கிய அந்தக் குழுவினர். நான்கு உண்மைகள் என்றொரு பட்டியலும் இட்டனர். அவை,

1) HIV கிருமி மனிதரிடமிருந்து தான் மனிதருக்குப் பரவும். கொசு கடித்தாலெல்லாம் இது பரவாது.

2) இது கிருமி, ஏழை, பணக்காரன், தாய், சேய், சொந்தம், பந்தம் என்று எவ்வித பாரபட்சமும் பார்க்காது.

3) HIV கிருமி பாதிப்பைச் சோதனையால் அன்றி சாதாரண கண்களால் கண்டறிய முடியாது.

4) இந்த நோய்க்கு நிரந்தர தீர்வு கிடையாது. பாதிக்கப்பட்டவர் மருத்துவத்தோடு உயிர்வாழ முடியுமே தவிற நிரந்தர தீர்வு இன்னும் கண்டறியப் படவில்லை.

இந்த நான்கும் அனைவருக்கும் சென்று சேர வேண்டிய உண்மைகள் என்று அவர்கள் கூறினார்கள். இது பரவுவது குறித்து மக்களிடை இருக்கும் பயங்களையும் மூட நம்பிக்கைகளையும் மாற்ற வேண்டும் என்றும் இது எப்படி எல்லாம் பரவுகிறது என்றும் விளக்கினார்கள்.

பொதுவாகவே CD4 அணுக்கள் மூலமாகத்தான் இந்தக் கிருமி பரவுகின்றது. அந்த CD4 அணுக்களை அதிகம் சுமக்கும் திரவம் மனித உடலின் குறிப்பிட்ட நான்கு துவாரங்கள் வழியே ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்குப் பரவுகின்றது. மாணவர்கள், "எச்சில், சளி, வியர்வை போன்ற திரவங்கள் பரப்புமா?" என்று கேட்டதற்கு அவர்கள் பரப்பாது என்று மறுத்தனர். வாயிலிருந்து சுரக்கும் எச்சில் அத்தகு கிருமிகளை அழித்துவிடும் என்றார்கள்.

HIV கிருமியால் பாதிக்கப்பட்டவரின்

1) இரத்தம்
2) விந்து
3) பெண்குறி நீர்
4) தாய்ப்பால்

ஆகிய நான்கு திரவங்களில் ஏதேனும் ஒன்று,

1) திறந்த புண்/வெட்டு
2) ஆண்குறி
3) பெண்குறி
4) ஆசனவாய்

ஆகிய நான்கு கதவுகளில் ஏதேனும் ஒன்றில் கலக்கும்போது தான் இந்த நோய் மற்றவர்களோடு பரவும். வேறெந்த முறையிலும் பரவாது.

ART (antiretroviral therapy) என்ற மருத்துவத்தைப் பயன்படுத்துவது மூலம் பாதிக்கப்பட்டவரின் நோய் எதிர்ப்பு சக்தியை மீட்டுக் கொணர முடியும். ஆனால் ஆரோக்கியமான நடத்தையும், கவனமாக பழக்கங்களுமே பாதிக்கப்பட்டவர் எவ்வித சிரமமுன்றி வாழ உறுதுணை புரியும் என்றனர்.

உடலுறவு மூலமாகவும், இரத்தத்தின் மூலமாகவும், தாய்ப்பாலின் மூலமாகவும் பரவும் இந்த நோய்க்கு அந்தத்த வகைக்கேற்ப தடுப்புமுறைகளையும் சொன்னார்கள். இடையிடையே எளிமையான உதாரணங்களைக் கொண்டு கேள்வியும் கேட்டார்கள். அவர்கள் விளக்கிய முறையும், இதுவரை செவிவழியாகவே அறிந்த பல புரளிகளுக்குத் தெளிவான விளக்கமும் கிடைத்ததால் இதனை எழுத வேண்டுமென்று தோன்றியது. முறையான சோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியவர்கள் சென்னையில் மட்டுமே கிட்டத்தட்ட 60க்கும் மேலாக இலவச பரிசோதனை முகாம்கள் இருப்பதையும், தமிழகத்தில் 300க்கும் மேல் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்கள். அறியாத விஷயங்கள் பலவற்றை அறிந்துகொண்ட மாணவர்கள் மிகவும் கவனத்துடனும், சிரத்தையுடனும் அவர்களது உரையைக் கவனித்தார்கள். கேள்விகள் சந்தேகங்களையும் கேட்டு நிவர்த்தி செய்துகொண்டார்கள். மொத்தத்தில் அறிவுசால் பயன் கொண்டதாகக் கழிந்தது நேற்றைய மதியப் பொழுது....

நிறைவில் அவர்களது வலைதள முகவரியையும் அளித்தார்கள்.....இதோ அது....www.iapaids.org

Popular Posts