இளங்கவிஞர்களுக்குக் கடிதம்
முன்குறிப்பு: சேவாலயாவின் "மகாகவி பாரதியார் மேனிலைப் பள்ளி"யில் நிகழ்ந்த கவிதை மன்றத்தின் தொடக்க விழாவில் அந்த மாணவர்களுக்காக நான் எழுதிய கடிதம்.
இளங்கவிஞர்களுக்கு இளங்கவியின் வணக்கம்,
கவிதை எழுத ஆர்வம் பெற்ற உங்கள் அனைவருக்கும்
கலைவாணி பரிபூரண அருளைக் கொடுக்கட்டும். கவிதை எழுத வேண்டும் என்ற முனைப்பெடுத்து
விட்டீர்கள். அதுவே வெற்றி. நான் வேறென்ன சொல்ல? இருந்தாலும் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று சில
விஷயங்கள் என் மனத்துக்குள் எப்போதும் இருந்ததுண்டு. அவற்றை இந்தத் தருணத்திலேனும்
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
முதலில் "நம்பிக்கை வேண்டும்".
"நம்பிக்கை இல்லாதவன் கவிதை எழுத வரக்கூடாது" என்று எழுத்தாளர்
ஜெயகாந்தன் விளையாட்டாகச் சொல்லுவார். அது முற்றிலுமான உண்மை. உங்களுக்குள்
"நாம் எழுதுவது கவிதை தானா?" என்ற எண்ணம் எழுந்தால் அது எழுதத் தடை. அதை
உடைக்க வேண்டும். நம்பிக்கையோடு எழுதுங்கள். எழுத எழுதத்தான் கவிதைக்கான
தேடலுக்குள் நீங்கள் பயணப்பட தோதாக இருக்கும். எப்படியெல்லாம் கவிதை எழுதி
இருகிறார்கள்? எப்படி எல்லாம் எழுத முடியும் என்ற ஆராய்ச்சியில் இறங்குங்கள். அப்படி
ஆராய்வதற்காக நீங்கள் நிறைய படிக்க வேண்டும். அதுதான் அடுத்த படியே.
இரண்டாவதாக "நிறைய படியுங்கள்".
"சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்" என்றொரு பழமொழியே உண்டு.
இது தான் கவிதை என்ற ஊற்றின் மூலத்தை நீங்கள் பிடித்துவிட்டீர்கள் என்றால் அது
வற்றாமல் ஓடக் கருத்து வேண்டும். அதற்கு உங்கள் சிந்தனை பரந்து விரிந்திருக்க
வேண்டும். சிந்தனைப் பரப்பை வாசித்தல் தான் உயர்த்தும். நிறைய வாசியுங்கள்.
இயல்பாகவே கவிஞர்கள் எல்லாரும் நல்ல வாசகர்கள். அதனால் வாசியுங்கள்.
பொத்துக்கொண்டு வரும் கவிதை ஊற்றினை நெறிப்படுத்தத் தான் இலக்கியங்களும்
இலக்கணங்களும். எல்லா துறை சார்ந்த பல்லறிவும் ஒரு கவிஞனுக்கு இன்றியமையாமை.
படித்தல் என்பது வெறும் புத்தகங்களோடு நின்றுவிடக் கூடாது. மனித பழக்க வழக்கங்களை, குணாதிசியங்களை ஏன்
மனித மனங்களையே கூடப் படிக்கப் பழக வேண்டும். ஒரு கவிஞன் தன்னை நவீனப்படுத்திக்
கொண்டே இருக்க வேண்டும். வாசித்தல் என்பது உங்கள் மொழிவளமையை அதிகமாக்கும். எழுத்துப்
பிழைகளை குறைக்கும். பிழையற்ற பாட்டுக்கு விழாவெடுத்த சமூகம் நம்முடையது.
பிழைகளைக் களைய நீங்கள் நிறைய படிக்க வேண்டும்.
அடுத்தது, "பரந்த நோக்கம் வேண்டும்" நீங்கள்
எதைச் சார்ந்த வாசிப்புகளை மேற்கொள்கிறீர்களோ அவை உங்கள் சிந்தனைகளாக மாறும்.
அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு கவிஞன் என்பவன் எப்போதும் பொதுவானவன்.
அனைத்து விதமாக சிந்தனைகளையும் சிந்தித்துப் பார்க்க வேண்டியவன். அதனால் உங்களது
எண்ணம் ஒரு சிறு வட்டத்திற்குள் சுருங்கிவிடக் கூடாது. பரந்திருக்க வேண்டும். உங்களுக்கென்று
ஒரு கொள்கையோடு வாழுங்கள். மற்ற கொள்கைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.
"காலம் கனிந்தால் கவி". உங்கள்
எண்ணத்தில் தோன்றுவதை எல்லாம் எழுதுங்கள். எப்போது வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால்
எழுத வேண்டுமே என்ற நிர்பந்தத்தோடு மட்டும் ஒருபொழுதும் எழுதாதீர்கள். கவிதை
என்பது மனத்துக்குள் ஊற்றெடுத்து வந்து நின்று, இனிமேலும் அடக்க முடியாது என்னும்படியாக
எண்ணங்கள் முட்டி மோதும், அப்போது எழுதித் தீர்த்துவிடுங்கள். அப்படி முட்டி மோதும் வரையில்
கருத்து கனிய அவகாசம் கொடுங்கள். எண்ணங்கள் வழிந்து கொட்டினால், தேர்வறையின்
அமைதியில் வினாத்தாளின் பின்புறம் கூட கவிதை எழுதலாம்(நான் நிறைய செய்திருக்கிறேன், திட்டு வாங்கியும்
இருக்கிறேன்) ஆனால், ஒன்றும் தோன்றாவிட்டால் அது கவிதைப் போட்டியாக இருந்தாலும்
பங்கேற்காமை நல்லது. ஒரு கட்டுரையாளனோ, பேச்சாளனோ, கதாசிரியனோ தனது படைப்பினை வெளிக்கொணர
எடுத்துக்கொள்ளும் எந்தவொரு முன்னேற்பாடுகளோ, பிரய்த்தனங்களோ ஒரு கவிஞனுக்குத் தேவை இல்லை. எதையும்
முன்னே யோசித்துவைத்துவிட்டு எழுதினால் அது கட்டுரை. தானாகக் கொட்டுவது தான்
கவிதை. இதை நெஞ்சில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
நமது சமுதாயத்தை எப்போதும் அக்கறையோடு பாருங்கள்.
தாய் தந்தையரைப் போல குருவையும், தெய்வத்தையும் எப்போதும் வணங்குங்கள். உண்மையை மட்டுமே எழுதுங்கள், சிந்தியுங்கள்.
இனிமையான வார்த்தைகளை மட்டுமே எண்ணுங்கள். உலகத்தில் சிறந்த தொண்டு, ஒருவரிடம் கனிவான
ஒருவார்த்தை பேசினால் போதும் என்கிறார் திருமூலர் என்னும் கவிஞர். "உள்ளத்தில்
உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்" என்கிறார் மகாகவி பாரதியார்.
உள்ளத்தில் அத்தகு உண்மை ஒளி பரவ வேண்டுமென்றால் தெய்வ நம்பிக்கையோடு இருங்கள்.
எதையும் பகுத்தறியும் சிந்தனையைப் பட்டை தீட்டிக்கொண்டே இருங்கள்.
மொழி கவிதைக்கு ஒரு பேதமே அல்ல. எந்த மொழிக்
கவிதையானாலும் ரசித்துக் படியுங்கள். சிறந்த ரசனை சிறந்த கவிதையை வெளிப்படுத்தும்.
எந்தக் கவிதை அல்லது படைப்பு உங்களை எழுதத் தூண்டுகிறது என்று தேடித் தேடி
ரசியுங்கள். உங்களது சிந்தனை எப்போதும் உயர்ந்தே இருக்கட்டும். எழுதும்
எழுத்திலும் உயர்ந்த சிந்தனை உரக்க எழுதுங்கள். சமூகத்தில் இருட்டுப் பக்கங்களை
வெளிச்சம் போட்டுக் காட்ட நினையுங்கள். அதே வேளையில் வெளிச்சங்களைக்
கொண்டாடுங்கள். எண்ணங்களைச் சுத்தமாக வைத்திருங்கள். அங்கே சொற்களைத் தவிற
வேறெதற்கும் அனுமதி வழங்காதீர்கள். தேசமே முதல். அதனை எப்போதும் உறுதியாகப்
பிடியுங்கள். நிறைவாக உங்களுக்காக ஒரு சிறு கவிதை.
கவிஞர்கள் எல்லோரும் காலத் தூண்கள்
கலாச்சாரம் காக்கின்ற
காவல்மார்கள்
சுவைஞர்கள் நினைப்பவற்றைத் தன் நெஞ்சுக்குள்
சுதிகூட்டிப் பார்க்கின்ற
வல்லவர்கள்
செவியென்னும் பூவுக்குள் தேனை ஊற்றிச்
செம்மையான பாராட்டை
வாங்கும் ஈக்கள்
கவிஞர்கள் என்றாலே மொழியைக் கொண்டு
களிப்பூற்றிக் கருத்தூட்டப்
பிறந்தவர்கள்!
பேனாக்கள் செங்கோலாய்! வெள்ளைத் தாள்கள்
பெருமையுடை ஆசனமாய்! எண்ணத்துள்ளே
தானாக முளைக்கின்ற கருத்து நெல்லைத்
தரம்பார்த்து வழங்கிடுதல்
தொழிலாய்! ஓங்கி
வானாகி புல்லாகி உருவம் மாறும்
வல்லமைகள் தந்திரமாய்
நிறையப் பெற்று
தேனான மொழிவளமை அரசை ஆளும்
செல்வந்தர் சொல்வேந்தர்
கவிஞர் ஆவார்!
கவியென்றால் நெஞ்சுக்குள் கனல் இருக்கும்
கவியென்றால் கண்ணுக்குள்
அனல் பறக்கும்
கவியென்றால் அன்பென்னும் குணம் சிரிக்கும்
கடமைகளில் எப்போதும் மனம்
நிலைக்கும்
புவியென்றால் பொறுமையெனில் கவியென்றாலோ
பொறுமைகளைப் பாடுகின்ற
பொறுமை கண்டீர்!
கவியென்றால் மழலையுடன் இறைமை சேரும்
கைதூக்கி வாருங்கள் கவிஞர்
என்றே!
வாருங்கள் தமிழர்களே இங்கே நீங்கள்
வளமான தமிழள்ளித் தெளிக்க
வந்தீர்!
வாருங்கள் குழந்தைகளே இங்கே நீங்கள்
வண்ணத் தமிழ்தன்னைக் கொஞ்ச
வந்தீர்!
வாருங்கள் இளைஞர்களே இங்கே நீங்கள்
வரிகளுடன் விளையாடிப்
பார்க்க வந்தீர்!
வாருங்கள் கவிஞர்களே இங்கே நீங்கள்
வாழ்த்துகளைச் சொல்லியுல
காள வந்தீர்!!
அன்புடன்
விவேக்பாரதி
11.07.2018
Comments
Post a Comment