அவன் எத்தனை?

ஏழை மனத்தில் ஊஞ்சல் கட்டி
   இறைவன் ஆடுகிறான் - பிறர் வாழக் கரங்கள் தருவோர் நெஞ்சில்    வசந்தம் பாடுகிறான் தாழும் நிலையில் தள்ளி அணைத்துத்    தாய்மை காட்டுகிறான் - நாம் வீழும் பொழுதில் பாடம் புகட்டி   வித்தை கூட்டுகிறான்!
அவன் எத்தனை தொழிலுக் கதிபன்!
அவன் எத்தனை பேரின் தொண்டன்!
அவன் எத்தனை பேருக் குண்மை!
அவன் எத்தனை பேரின் பொம்மை!
சின்ன விதையை உந்தும் விசையாய்ச்
   சிரித்துப் பார்க்கிறான் - அவன்
மின்னல் கீற்றும் மேகப் பாட்டும்
   விரித்துப் பார்க்கிறான்
அன்பின் வடிவில் ஆனந்த மாகி
   அமர்ந்து கிடக்கிறான் - எங்கும்
இன்பம் நிறைந்தால் துன்பம் துடைக்க
   இடத்தை கேட்கிறான்!
அவன் எத்தனை பெரிய ஞானி!
அவன் எத்தனைக் கடலில் தோணி!
அவன் எத்தனை உயர்ந்த ஏழை!
அவன் எத்தனை துளிர்க்கும் வாழை!
உணர மறுத்தார் உணர்ந்தார் என்று
   உருவம் பார்ப்பதில்லை - உண்மை
புணர முடியும் இடத்தில் சேரப்
   புத்தி நடுங்கவில்லை
கணங்க ளெல்லாம் மனத்தில் நின்றே
   காட்சி தருகிறான் - நம்மை
அணைக்கும் போது சேதி சொல்லி
   அனலைக் குறைக்கிறான்!
அவன் எத்தனை காலம் வாழ்வான்
அவன் எத்தனை காலம் தாழ்வான்
அவன் எத்தனை நெஞ்சை ஆள்வான்
அவன் எப்போ துலகில் மீள்வான்?
-விவேக்பாரதி
26.07.2018

Popular Posts