அம்மாவும் சாமியும்

அம்மா சாமி கும்பிடுகிறாள்!,
எதுவாய் இருக்கும் பிரார்த்தனை?
என்னவாய் இருக்கும் வேண்டுதல்?
எவையாய் இருக்கும் படையல்?
எப்படிக் கேட்கும் தெய்வம்?


அவசரத்தில் சமைத்த
அவியலும் சாம்பாரும்
கணவருக்குப் பிடிக்க வேண்டுமே!
பரீட்சைக்குச் சென்ற மகன்
படித்தவை மறவாது
ஒழுங்காய் எழுத வேண்டுமே!

கடல் தாண்டி இருக்கும்
தம்பிகள், பெற்றோர்
நலமாய் இருக்க வேண்டுமே!
வேலைக்குச் செல்லும்
ஆசை வேறு,
வேலை கிடைக்க வேண்டுமே!

கல்லூரி சென்ற மகள்
காலம் கடத்தாது
தனியே வீடுவர வேண்டுமே!
பக்கத்து வீட்டு அத்தை
இன்றேனும் யாரையாவதோ
யாரிடமோ கோள் மூட்டாமல்
இருக்க வேண்டுமே!

பார்ப்பவன் கண்களுக்குள் கேட்கும்
அம்மாவின் மனத்தோசை அடங்க
அவள் வாயுதிர்த்த வாசகம்
"லோகா சமஸ்தா சுகினோ பவந்து"
ஆம் "அம்மா" சாமி கும்பிடுகிறாள்!!

-விவேக்பாரதி
11.07.2018

Comments

Popular Posts