பிழைத்த தமிழகம்

போராட்டம் பலகண்டு சலித்த நேரம்
   போடாப்போ என்றெண்ணிக் கிடந்த நேரம்
காரோட்டம் எதிர்பார்த்துக் களைத்துப் போன
   கானமயில் போல்நாங்கள் வறண்ட நேரம்
தேரோட்டும் வீதியிலே திருவி ழாப்போல்
   திரளாக வந்துவிட்டாய் அம்மா உன்றன்
நீரோட்ட உருக்கண்டோம் நிறைவு கண்டோம்
   நிலையான நெல்மணிகள் சிலிர்க்கக் கண்டோம்!

குளங்குட்டை தேக்கிவைத்த காலம் சென்று 
   குளமெல்லாம் கட்டிடமாய் வளர்ந்த நாளில்
வளமைக்கும் உரிமைக்கும் ஏங்கி ஏங்கி
   வாசல்களில் கத்திநின்றோம் கொடுமை மாய
இளவேனில் நேரத்துத் தென்றல் போல
   இதமாக இயல்பாகச் சேர்ந்தாய் அம்மா
உளவரைக்கும் எமையுய்ய வைக்கும் உன்னை
   உள்ளபடி காக்கின்ற வழிதான் காணோம்!

பொதுவாகத் தான்வந்தாய் பார தத்தில்
   பொருளறிந்தார் உனைக்காக்கும் தகைமை செய்தார்
மெதுவாகத் தொடங்குகின்ற நிலத்தில் நீயும்
   மேன்மையுடன் வாழ்ந்திடவே அணைகள் செய்தார்
நதியாகப் பெருக்கெடுத்துத் திரண்டு சூழும்
   நன்னாட்டில் உன்வளமை மட்டும் பார்த்து
விதியென்றே நீகடலைக் கலக்கும் மட்டும்
   வீணாக விடுகின்றோம் அறியோம் அம்மா!

வறண்டநிலம் பயிர்காண வந்து பாய்ந்தாய்
   வறுமைபெறும் உழவர்க்கு வசந்த மானாய்
சுறண்டியவர் கோரத்தால் சுயமி ழந்தாய்
   சுறுசுறுப்பாய் இருந்தபலம் சுருங்கக் கண்டாய்
மறந்தவராய் உன்புகழை மறிக்கச் செய்தோம்
   மண்வெட்டி உன் தடத்தை அறுத்தெ றிந்தோம்
பிறந்தவரைத் தாய்பொறுப்பாள் அதுபோல் நீயும்
   பிழைபொறுத்துப் பாய்கின்றாய் சிரித்த வாறு!

கல்லணைபோல் பல்லணைகள் கட்டிக் காக்கும்
   கடமைதான் எமக்குண்டு விரைவில் செய்வோம்
நல்லணைகள் சிலநூறு கட்டி யுன்னை
   நலத்தோடு வளம்சேர்க்க வாழ வைப்போம்
வல்விரைவாய்க் கடல்கலக்க ஓடும் உன்றன்
   வளமடைவோம் அதனாலே வாழ்க்கை கொள்வோம்!
தொல்பெருமைக் காவிரியே பிழைத்தோம் உன்னால்
   தொழில்கொடுக்கும் உயிர்நிதியே பிழைப்போம் உன்னால்!!

-விவேக்பாரதி
25.07.2018

Comments

Popular Posts