உளறலுலா


இருசக்கர வாகனத்தில் தனியாய்ச் செல்லும் பெரும்பாலான சமயங்களில் பாட்டோ கவிதையோ துணைக்கு வந்து வாய்க்கும். அப்படித்தான், நேற்று காலை அலுவலகத்திற்குச் செல்லத் தாமதம் ஆகிவிட, வண்டியை வேகமாகத் திருகிக், காற்றின் வேகத்தைச் சாடிப் பறந்து கொண்டிருந்தேன். அப்போது சாலையோரம் கண்கண்ட காட்சி ஒன்றை மனம் வெண்பாவாய் முனுமுனுக்க, அடுத்தடுத்து விழுந்தது அந்தாதி. நிறைவு பெறும் முன்னர் அலுவலகம் வந்துவிட்டது. அலைப்பேசியில் ஒலிப்பதிவு செய்திருந்த முனுமுனுப்பைத் திரட்டி எழுதிவிட்டேன். இன்னும் இரண்டு பாட்டோடு இது முடியுமோ தொடருமோ யார் கண்டார்... இப்போதைக்கு இது!

காகம் அமர்ந்துப்பின் காலால் அசைத்தகிளை
வேகம் எடுத்து விளையாடும்! - ஆகுமிதைக்
காற்றால் நடக்கின்ற காட்சியென்று நம்பினால்
தூற்றால் படுவாய் துளை!

துளைபட்ட மூங்கில் துயர்க்காற்றில் கூட
விளையாட்டாய்ப் பாடும் வியப்பு - வளையுற்ற
நண்டுக்கு நேரலைகள் நாராச மே!குப்பைக்
குண்டுக்குப் பேரலையோ கூத்து!

கூத்தடிக்கும் காற்று குறித்துத் தொடுவதில்லை;
நேற்றடிப்ப(து) இன்று நிகழ்வதில்லை! - மாற்றிருக்கும்
யாவுமே நல்லதென ஆவதில்லை மேல்வானில்
மேவுமோ செக்கரன்றி வேறு!

வேற்றுமை வாழ வழிகொடுக்கும்! வற்புறுத்தித்
தேற்றிடும் ஒற்றுமை தீயதே - ஆற்றிடும்
செய்கைவே(று) என்றாலும் சேர்ந்த புவியில்நம்
உய்கையெல் லாமிங்கே ஒன்று!

ஒன்றின்றி ரெண்டில்லை ரெண்டின்றி ஒன்றில்லை
நன்றின்றி தீதில்லை நாட்டினரே - இன்றில்லை
நேற்றில்லை நாளையெனும் நேர்வில்லை! உண்மைக்கு
மாற்றில்லை இன்னோர் மருந்து

மருந்திருந்து சேர்க்கும் வலிமைவிட, அந்நோய்
இருந்திருந்து சேர்ப்ப(து) அதிகம்! - பொருந்திதினம்
பாகலுண்(டு) உண்டே பழகிய நாக்கிற்கு
நோகலில்லை எச்சுவையும் நோக்கு!

நோக்கம் பலவாய் நுவலப் படும்பொதும்
ஆக்கம் விளைத்தால் அதுவுயர்வே! - காக்கும்
கடவுளரை வெவ்வேறாய்க் கண்டாலும், பக்தி
நடவுபெறின் நேரும் நலம்!

நலமென்ற பாலருந்த நாளும் உழைத்துக்
கலமென்ற காயம் கணக்காய்த் - துலக்கி
ஒழுக்கமெனும் புல்போட்(டு) உளநிரையைப் பேண
வழக்கமுறும் இன்பத்தின் வாழ்வு!  

-விவேக்பாரதி
07.04.2024
காலை 06.30

Comments

Popular Posts