தமிழருக்கு இரண்டு புத்தாண்டு


நிமிர்ந்திந்த ஞாலத்தை ஞானத்தாலும் 
நிலையோங்கு வீரத்தோ(டு) ஈரத்தாலும்
தமிழாண்ட வரலாறிங்(கு) இருப்பதாலே
தனிமிடுக்கு நமக்கதிலே பிறப்பதாலே
தமிழர்க்கிங்(கு) இருபுத்தாண்(டு) இருக்கலாம்! நாம்
தக்கபடி கொண்டாட்டம் நடத்தலாம்தான்! 
அமிழ்தத்தை இருகலனில் ஊற்றித் தந்தால் 
அதனைஏன் கொண்டாட யோசிக்கின்றோம்? 

விடியலென்றால் புதுமலர்கள் மலர்வதற்கே,
விழுவதென்றால் புதிதாக எழுவதற்கே, 
நடத்தையிலே நாம்மாற்றம் கொணர்ந்திடாமல்
நன்மைவரும் எனச்சொல்லல் சிரிப்பதற்கே!
கடந்ததனை எண்ணியினிக் கவலுறாமல்
காலத்தை மீறிநிதம் கனா காணாமல்
கிடைத்திருக்கும் புதுநாளைப் பயன்படுத்திக்
கிளரின்பம் வளர்செய்கை செய்தே வாழ்வோம்!!

*

ஒரேதரம் வாழ்க்கை உருப்படியாய் வாழ்வோம் 
குரோதிமுத லேனும் குறித்து! 

-விவேக்பாரதி
14.04.2024
காலை 11.30

Comments

Popular Posts