இருப்பின் இன்மை


இரவில் எனக்குப் பின்னணியில், 
ஈரமான மென்குரலில், 
சுரங்கள் இசைக்கும் நேரத்தில், 
சுகமாய் உன்னை நினைக்கின்றேன்! 
நிரந்தரத்தில் பற்றில்லை 
நீயாய் இருந்தால் அதுபோதும் 
இருந்து விடலாம் என்றபடி 
இதயம் இழுத்துப் போர்த்துகிறேன்! 

உருகும் நிலவின் சத்தத்தில், 
உயிரின் கீதம் கேட்கிறது! 
பருகி அந்த ஓசையிலே, 
பாடல் ஒன்று பிறக்கிறது 
சருகைப் போல இருந்தவுடல் 
சற்றே வானுக் கெழுகிறது! 
அருகில் இருக்கும் மௌனமெலாம் 
ஆணி போல அறைகிறது! 

கனவில் நேற்று வந்தாயே 
கையைப் பிடித்துக் கொண்டாயே! 
மனதைத் தொட்டு வாழ்வெல்லாம் 
வருவேன் என்று சொன்னாயே! 
எனது வாசம், என்சூடு, 
எல்லாம் இதமே என்றாயே! 
அனைத்தும் மீணடும் வேண்டித்தான் 
அன்பே போர்வை போர்த்துகிறேன் 

காத்திருக்கப் பயமில்லை! 
காணாமல்நான் போய்விட்டால்? 
பூத்திருக்கப் பயமில்லை! 
புலர்ந்து வாடி நான்வீழ்ந்தால்? 
சேர்த்திருக்கும் காலந்தான் 
திருப்பிப் பக்கம் புரட்டுமட்டும் 
கோத்திருப்போம் இருப்புகளைக், 
கூடி வாழ்வோம் இன்மையிலே!! 

விவேக்பாரதி 
02.04.2024 
இரவு 11.40

Comments

Popular Posts