மாதங்களில் அவள் மார்கழி - 2



(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 

மணக்கும் துளசி மாடத்து  
மண்ணில் உதித்த மாமணியே
அணைக்கும் பெருமாள் தோள்தழுவும்
அலங்கல் தரித்த மாதரசே
கணைக்கும் குதிரை யானையொடு
கனவில் மாலைக் கண்டவளே
நினைக்கும் செய்கை நிகழுமென
நிஜத்தில் சொன்ன புதியவளே (11)
 
புதுமை உன்றன் பாட்டுநடை
புலவர் மெச்சும் ராஜநடை!
பதுமை நெஞ்சின் ஆசையெலாம்
பதித்து வைத்த தேவகதை!
முதுமைத் தந்தை மொழிவழியே
முகிந்த கண்ணன் ராகமெலாம்
எதுகை மோனை இயைபுகளாய்
எழுந்து வந்த கவிதைவிதை! (12)
 
விதைத்தாய் காதல் பக்தியிலே
விதந்தாய் காமம் காதலிலே
கதைத்தாய் கண்ணன் பெண்மனத்தில்
காட்டும் ஜாலம் அத்தனையும்
எதைத்தான் முன்னாள் பெண்ணினமே
ஏந்தி மறைத்துக் காத்ததுவோ
அதைநீ கொஞ்சும் மொழிகளிலே
அமைத்தப் போட்டாய் பாதையொன்றே! (13)
 
ஒன்றும் மனத்தின் எண்ணமெலாம்
ஒழுக்கம் மிகுந்த வகையினிலே
அன்று கொடுத்த தனைத்தையும்
ஆழ்ந்து படித்தால் காதல்வரும்
தென்றல் வந்து தொட்டணைக்க
தேகம் சிலிர்க்கும் தன்மையதாய்
மன்றில் சொன்ன கவிதைகளை
மனதில் படிக்கப் பரவசமே (14)
 
பரவ சத்தில் எழுதியதா?
பார்த்துச் சுகித்துச் சொல்லியதா?
உரசி ஆசை ஒவ்வொன்றும்
உயர்த்திப் பார்த்துப் பேசியதா?
முரசைக் கொட்டிப் பெண்மனத்தை
முழுதும் எழுதி வித்ததிறம்
கருதிக் கருதிக் களிப்பதலால்
கடமை உண்டோ பிறிதெமக்கே (15)
 
கேட்கக் கேட்கச் சிலிர்க்குதம்மா  
கேச வன்மேல் ஆசைவரும்
வேட்கைக் காய்ச்சல் கொதிக்குதம்மா
மாலே அமுதென் றுரைத்தாயே
ஆட்கள் கூடிக் காலையிலே
அருநீர் ஆடி அவன்பெயரை
நாட்கள் தவறா தோதிநின்றாய்
நாங்கள் துய்க்கப் பாடிவைத்தாய் (16)
 
தாயே கோதாய் உன்வழியில்
தர்மம் நிலைக்கும் செவ்வழியில்
மாயோன் மீதில் மனமொன்றி
மாதம் சிறந்த மார்கழியில்
தூய தெண்ணீர் ஆடுவதும்
துளசித் தீர்த்தம் உண்ணுவதும்
வேயன் புகழை ஓதுவதும்
விழைந்தோம் யாவும் உன்செயலே (17)  
 
செயலெல் லாமே கண்ணன்வசம்
சென்ற தாயுன் நாட்குறிப்பில்
மையல் பொங்க எழுதிவைத்தாய்
மாதே கோதை, எங்கள்மன
வயலெல் லாமும் கவிதைமணி
வாசம் வீசி நிற்பதனால்
அயரும் பொழுதும் தேனமுதாய்
அருந்துந் தோறும் இனிக்கிறதே (18)
 
தேவன் மார்பில் மலரானாய்
தெய்வத் தமிழில் விருந்தானாய்
பாவை நோண்பில் முதலானாய்
பட்டர் மடியில் மகளானாய்
ஜீவன் பெற்ற காரணத்தை
ஸ்ரீரங் கத்தில் நிறைத்தவளே
கோவில் செல்லும் பொழுதெல்லாம்
கூடப் பாடி வருபவளே (19)
 
பவளம் செவ்வாய் மணம்கேட்டாய்
பாவம் என்று காமனிடம்
கவிதை மூலம் வரம்கேட்டாய்
கண்ணன் வந்து கூடுவதை
தவமாய்க் கண்டு தமிழேட்டில்
தழுவித் தழுவி நீபதித்தாய்
நவமே கோதாய் நாங்களெலாம்
நயந்தோம் படித்தே என்பாவாய்!! (20)

-விவேக்பாரதி
18.12.2020

Comments

Popular Posts