பச்சை மரகதம்


பச்சை மரகதப் பதுமையாள் - நின்று
   பார்த்திடப் பார்த்திட இனிமையாள்! உள்ள
பயங்கள் தவிர்க்குந் துணையினாள் - செல்வப்
   பாண்டிய நாட்டின் தலைவியாள்! மன
இச்சை நடத்தும் திறமையாள் - எங்கள்
   ஈசரைக் காதல்செய் வுரிமையாள்! சின்ன
ஈர்க்குச்சி நெஞ்சினை வைரமாய் - கண்
   இமைப்பினில் ஆக்கும் கருணையாள்!

கயல்கள் சிரிக்கும் விழியினாள் - சந்தக்
   கவிதைக் கசையும் இடையினாள்! வரும்
கவலை துடைக்கும் கரத்தினாள் - காணக்
   கண்களித்தூறும் வளத்தினாள்! என்றும்
முயலும் மனத்தில் விசையினாள் - இந்த
   முத்தமிழ் நாட்டுக் கிறைவியாள்! உயிர்
மோட்சம் பெறச்செயும் நாமத்தாள் - நம்
   முக்கண்ணன் வெள்ளுடல் வாமத்தாள்!

பொற்றா மரைக்குள தீரத்தில் - கொஞ்சம்
   போயமர் கின்றபொன் னேரத்தில்! சின்னப்
புன்னகை மட்டும் புரிகுவாள்! - யார்
   புரிவதென் றேநாம் விழிக்கையில், வண்ணச்
சிற்றாடை கட்டிய செல்வியாய் - வந்து
   சிணுங்கியே கண்முன்னின் றோடுவாள்! எந்தச்
சீருக்கும் தோன்றாப் புதிரினாள் - பிள்ளை
   சிரிப்பது கண்டு கிறங்குவாள்!

கைகளில் குங்குமம் ஏந்துவாள் - நாம்
   கண்மூட நெற்றியில் பூசுவாள்! அவள்
கைவிரல் பட்டதும் அண்டமே - வந்து
   கண்ணில் தெரிவதைக் காணுவோம்! அருட்
பொய்கை நனைந்தபின் பூமியில் - பெறப்
   புண்ணியம் ஏதென்று துள்ளுவோம்! மனம்
பூவென்று தாள்களில் சூட்டியே! - அவள்
   புகழினை மாத்திரம் சொல்லுவோம்!

மக்கினை மாகவி ஆக்கினாள் - இந்த
   மக்களை மன்னர்க ளாக்கினாள்! இங்கு
வாழும் மனிதர் குணத்தினில் - அன்பை
   வாரி இழைத்தழ காக்கினாள்! முன்பு
சொக்கனைத் தன்வசம் ஆக்கினாள்! - மண்ணைச்
   சொர்கமென் றேஉரு வாக்கினாள்! தென்றல்
திக்கணைத்தும் தொட்டுத் தடவிட - வைகைத்
   தெய்வ நதியினை ஆக்கினாள்!

காணக் கிடைக்காத காட்சிகள் - இந்தக்
   கடையனின் கண்ணுக்கும் காட்டினாள்! புதுக்
கான உருவினில் நாளெலாம் - என்
   காலையை மாலையை ஓட்டுவாள்! வந்து
பேணக் கரம்தமை நீட்டினாள் - அள்ளிப்
   பிள்ளையைப் போல்மடி சாற்றினாள்! முன்னைப்
பிழைகள் அனைத்தும் துடைத்தவள் - தன்மேல்
   பித்தினை மட்டும் நிறுத்துவாள்!

ஓரச் சுடர்விழிப் பார்வையில் - கதை
   ஓராயிரம் பல சொல்லுவாள்! அதை
உடனறி யாமல் விழிக்கையில் - வந்து
   உச்சியில் குட்டி உணர்த்துவாள்! பசி
தீரத் கருணைகள் பண்ணுவாள்! - பிள்ளை
   சிரிப்பதைக் கண்டுகண் பொங்குவாள்! விழி
தீபம் எனச்சுடர் வீசிட - எனைத்
   தீண்டிப் புதியவன் ஆக்குவாள்!

அத்தனை அன்பளே மாதங்கி - நடம்
   ஆடிடும் நாயகன் சங்கரி! இந்த
அன்னை நமக்குத் தயாபரி - அருள்
   ஒன்றே இயல்பெனும் உத்தமி! சின்னப்
பித்தளைச் செம்பினைத் தூக்கினாள் - உரு
   பொன்னென ஆவதைக் காட்டினாள்! இன்பம்
பீறி எழும்வகை வாழ்க்கையை - மிக்க
   பிரியத்தி னோடிவள் பண்ணினாள்!

ஊசி அளவுள்ள நெஞ்சினில் - பெரும்
   உலகினைக் கோக்க நினைக்கிறாள்! சின்ன
உள்ளம் உரைப்பன கேட்பவன் - வசம்
   உண்மைகள் சொல்லிச் சிரிக்கிறாள்! வெறும்
ஆசையில் ஆடும் மதிக்குளே - மறை
   ஆழங்கள் சொல்லி நிறைக்கிறாள்! ஒரு
அற்பனின் நாவினில் சொற்பதம்! தமை
   ஆள்ளி வழங்கி ரசிக்கிறாள்!

மீனாட்சி சிந்தனை ஒன்றுதான் - மனம்
   மீண்டும்மீண்டும் மண்ணில் செய்வது! அதில்
மின்னல் இதயத்தில் பூத்திடும் - இடி
   வந்து வந்துடம்பில் கேட்டிடும்! பின்னர்
தானாய் நடப்பவை வெற்றிகள்! - அவள்
   சரண கமலத்தில் முத்துகள்! நமைத்
தாயின் பதங்களிற் சேர்க்கையில் நின்று
   தீரும் பிறவிக் கணக்குகள்!!

-விவேக்பாரதி
14.12.2019

Comments

Popular Posts