மணிப்பாவை | ஐயப்பன் மேல் பாவைப் பாடல்கள்


2019 ஆம் ஆண்டு மார்கழி மாதம் ஐயப்பன்மேல் பாவைப் பாடல்கள் எழுதும் எண்ணம் பிறந்தது. ஏற்கனவே விநாயகர் மீது பாவைப் பாடல்கள் எழுதிய ஆர்வத்தில் தொடங்கினேன். ஆனால் பிரம்மச்ர்யத்தை ஏற்ற ஐயப்பனுக்கு பாவைப் பாடல்கள் எழுதப்படுவது குறித்து சான்றோர் சூழ் சபையில் சர்ச்சை எழுந்தது. அதனால் எழுதியதுவரை போதும் என விடுத்த நான்கு பாடல்கள் இவை...

#மணிப்பாவை

1) மார்கழி கோலமாய்

மார்கழி கோலமாய் வாசல் நிறைந்தனள் 
கார்த்திகைத் திங்கள் கழுத்தே றியமணி 
போர்புகழ் வில்லன் புலிவாக னன்கோயில் 
கீர்த்தியைக் காணக் கிளர்த்தும் சரணத்தின் 
வார்த்தைகள் கேட்டும் மயக்கமோ! எந்தோழீ!  
மூர்த்தி யிருவர் முகையாய் முளைத்தெழுந்த 
பார்த்திவன் ஐயப்பன் பந்தள ராஜன்பேர் 
சேர்ந்துரைத்து நீராடிச் சேவிப்போ மெம்பாவாய்! 

கருத்து: 

அம்மா வாசலில் இட்டிருக்கும் வண்ணக் கோலத்தின்மூலம் மார்கழி என்னும் பெண்மகள் நமக்குக் காட்சியானாள். ஒரு மாதம் ஆகிவிட்டது. நம் கழுத்தில் கார்த்திகை மாதம் ஏறியது ஐயப்பனின் துளசிமணி மாலை. மகிஷியுடன் தனக்கு நடந்த போரில் வென்று அகில உலகமும் புகழும்படி நின்ற வில் வித்தைக்காரன், புலிகளின்மேல் ஏறி நாடு சேர்ந்தவன் ஐயப்பன்.  அவனுடைய கோயில் கீர்த்திகளைப் பார்க்கும் ஆவலை நெஞ்சுக்குள் அந்த மணிமலை தூண்டிவிட்டு சரண கோஷத்தைச் செய்துகொண்டே இருக்கிறது. இந்த வார்த்தைகளைக் கேட்டும் உனக்கு மயக்கமா என் தோழி?  சிவன் விஷ்ணு என்கிற இரு மூர்த்திகளின் அருளால் முகையாய் விரிந்து வளர்ந்தவன் ஐயப்பன். அவன் பந்தள தேசத்தை ஆளும் அரசன். அவனுடைய பெயரை நாம் அனைவரும் சேர்ந்து, உரைத்து, அவன் நினைவிலேயே நீராடி, அவனையே நெஞ்சில் சேவிப்போம் என் பாவையே! 

***

2) மாலை அணிவோர்

மாலை அணிவோர் விரதம்மேற் கொள்ளணுமாம்
காலை எழுந்து கடகடென நீராடி
நீலம் கருப்பு நிறத்தாடை தாம்சாற்றி
ஆலம் அருந்திய ஈசற்கும் மோகினியாம்
மாலுக்கும் வந்த மகனைத் துதிக்கணுமாம்
நாளுமிது செய்யணுமாம் நம்தந்தை சொல்கின்றார்
மேலும் பலவுண்டாம் மென்மகளே கண்மலராய்
ஞாலத்து நாயகன்பேர் நாமுரைப்போம் எம்பாவாய்!

கருத்து :

நம் அப்பா சொல்கிறார், "ஐயப்ப சுவாமிக்கு மாலை போடுபவர்கள் விரதம் இருக்க வேண்டும். காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். எழுந்த உடன் குளிக்க வேண்டும். குளித்து, நீலம் அல்லது கருப்பு நிறத்தில் ஆடைகள் அணிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அணிந்துகொண்டு ஆலகாக விஷத்தை அருந்திய பரமசிவனுக்கும் மோகினியாக மாறி வந்த மகாவிஷ்ணுவுக்கும் பிறந்த மகன், ஐயப்பன் திருப்பாதங்களைக் காண வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்" என்கிறார். இன்னும் நிறைய இருக்கிறது என்றும் சொல்லிறார். எனவே மென்மையான என் தோழியே! உன் கண்களைத் திறந்து தூக்கம் விழித்துக்கொள்! நாம் சேர்ந்து இந்த உலகத்தைக் காக்கும் நாயகனான ஐயப்பன் பெயரைப் பாடி மகிழ்வோமாக! 

***

3) வானகத்துத் தேவரெலாம்

வானகத்துத் தேவரெலாம் வந்தேத்தும் ஐயப்பன் 
கானகத்துக் கோயிலைக் காணும் விரதத்தில் 
பானகமும் நல்ல பழமும் நிவேதனமாய்
தானஞ்செய் தர்மத்தும் சத்திய கர்மத்தும் 
கானத்தும் ஐயனைக் காணுதல் பேரின்பம்! 
ஞானகுரு சாமிசொன்னார் நங்காய் விழிதிறந்
தேனின்னும் பள்ளி எழவில்லை? காலையிலே 
மோனந்தீர் கோஷம் முழங்கேலோ ரெம்பாவாய்! (3)

கருத்து: 

வானத்தின் அகத்தில் வாழும் முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து வணங்கித் துதிக்கும் ஐயப்பனின் காட்டுக் கோயிலைக் காண நாம் விரதம் இருக்கிறோம் அல்லவா! இந்த விரத பூஜைக் காலத்தில் பானகமும் பழங்களும் ஐயப்பனுக்கு வழக்கப்பட்டு நமக்கும் நிவேதனமாய்க் கிடைக்கின்றது. இந்த நிவேதனத்தோடு சேர்த்து சிறந்த தானமான நிதானமும், சிறந்த கர்மமமான சத்தியமும், சிறந்த சந்தோஷமான கானமும் நமக்க் ஐயப்பனையே காட்டுமாம்! அது நமக்குப் பேரின்பம் சேர்க்குமாம்! இதையெல்லாம் நம் குருசாமி என்னிடம் சொன்னாரடி! நீ மட்டும் ஏன் இன்னும் துயிலெழவில்லை? உன் மௌனம் தீர்க! காலையில் ஐயப்பன் சரண கோஷத்தை முழங்கிடுவோம் என் பாவையே! 

4) மழையில் நனைந்தால்

மழையில் நனைந்தால் மனங்குளிர் தல்போல்
அழுதை நதியால் அகங்குளிர் வெய்தும்! 
முழுவுல கேழும் முனைந்து துதிக்கும் 
குழந்தையை யப்பன் குறிப்புணர்ந் துள்ளில் 
அழைத்திடு முன்பே அருளிடுந் தெய்வம்! 
மழலை மகளே! மயக்கந் தெளிவாய்! 
தழல்கொளும் மேனி தணிந்துங் குளிர்ந்தும்
எழில்பெறக் கோஷம் எழுப்பேலோ ரெம்பாவாய்! (4) 


கருத்து:

தோழிகளே! நமக்கெல்லாம் மழையில் நனைய எவ்வளவு பிடிக்கும்? மனம் குளுமை அடையும் அல்லவா! அதுபோலத்தான் அழுதை நதியில் குளிக்கும்போதும் மனம் குளுமை அடையும். ஏழு உலகங்களும் தினமும் வியந்து வணங்கக்கூடிய குழந்தை ஐயப்பன் ஆகிய இறைவன், நம்முடைய அகக் குறிப்புகளை உணர்ந்து, நாம் உள்ளத்தால் நினைத்து அழைத்திடும் முன்னமே நமக்கு அருள்தரும் தெய்வம். மழலைக்குணம் நிறைந்த மகளே! நீ மயக்கம் தெளிந்துகொள்! அழுதை நதியில் குளிக்கும்போது உடம்பில் இருக்கும் உஷ்ணமெல்லாம் தணிந்து, குளிர்ந்து உடம்பு எழில்பெறும். அப்போது சரண கோஷங்களை எழுப்பிடுவோம் என் பாவையே! 

விவேக்பாரதி
20-12-2019

Comments

Popular Posts