மௌனக் கண்ணீர்


கவிப்பேரரசு பைரனின் When we two parted கவிதையைத் தழுவி.. 

மௌனக் கண்ணீரில் உறைந்தே 
நாம் ஒருவரை ஒருவர் பிரிந்தோம்! 
பாதி கூரான மனத்தில் 
பல ஆண்டின் வலிகளை அறிந்தோம்!. 

நீ பிரிகையிலே உன் கண்ணம் 
அந்தப் பால்நிலாவின் வெண்மை!  
நாம் பிரிவினில் பழகிய முத்தம்  
அது இன்றும் மாறாக் குளுமை 

அதுதான் அடுத்து தொடரும் 
என் வலிகளை உணர்ந்த தருணம்! 

உறைந்த காலையின் பனியும் 
உன் முத்தம் நினைவினில் கொணர, 
அது பிரிந்த சோகத்தைச் சொல்லும் 
என் எச்சரிக்கையாய் உணர! 

உனது உண்மைகள் தூர்ந்து 
உன் பெயரும் புகழுமே சரிய 
பிறரின் வசைகளைக் கேட்டேன் 
அவமானம் என்னில் கல் எறிய  

எனது கண்ணின்முன் உன்னை 
பலர் இகழ்தல் மரணமாய்க் கேட்க  
நொறுங்கி உடைகிறேன் அழகே 
இதில் எப்படி வாழ்வாய் பூக்க?

உன்னை அறிந்தவன் அதனால் 
இங்கு என்னை நானே வெறுத்தேன் 
உனது வாழ்வினில் நுழைந்து
நான் எதனை சரியாய்க் கொடுத்தேன்?  

அந்தரங்கம் நம் காதல் 
நான் மௌனம் கொள்கிறேன் அழுது 
என்னை நீயும் மறக்க,
என் பொய்முகம் பார்த்துப் பழகு!
 
உன்னை இனியும் ஒருவேளை 
நான் சந்திக்க நேரும் அறிவேன்  
அன்று உன்னைநான் வாழ்த்த 
மீண்டும் மௌனக் கண்ணீரில் உறைவேன்!!

-விவேக்பாரதி 
16.06.2021

Comments

Popular Posts