வடபழனி பாலன் வரம்


-வடபழனியில் படைத்த சில அந்தாதிகள்- 

வடபழனி வாழும் வடிவேலன் பாதம் 
தொடப்பழகி நாளும் தொடர்ந்தேன் - கெடப்பழகி 
பாழான நெஞ்சம் பகல்பார்க்க வைத்தென்னைக் 
கூழாகச் செய்தான் குழைத்து! 

குழைத்துள சந்தனக் குங்கும வாசம் 
அழைத்துளம் ஏறும் அழகாய் - தழைத்துள 
ஆசையெனும் காடெரிக்கும் அம்பிகை மைந்தனுக்குப் 
பூசைதர என்றும் புகழ் 

*** 

உலகத்தை ஒருநொடியில் சுற்றியசெவ் வேலன் 
   உள்ளத்தில் ஆனந்த நிலைகொண்ட பாலன் 
கலகத்தை வேல்கொண்டு தூள்செய்த காலன் 
   கவிதைக்குத் தமிழ்காத்த ஞானானு கூலன் 
பலவித்தைக்(கு) அரசான ஈராறு தோளன் 
   பாடுபவர் பக்கம்நின் றதுகேட்கும் தோழன் 
புலவர்க்குத் தமிழ்கூறும் வடபழனி பாலன் 
   புகழ்மாலை நிதம்சொல்லித் தொழுவாயென் நெஞ்சே! 

நெஞ்சத்தில் சூழ்கின்ற எண்ணங்கள் யாவும் 
   நெருப்பென்று சுடர்வீசச் செய்கின்ற கண்கள், 
வஞ்சத்தில் வீழ்ந்தோர்க்குப் படகாகும் கைகள், 
   வனமுலையள் கைசேர்க்க வடிவான மேனி, 
செஞ்சடையன் நெற்றிவிழிக் கனல்தந்த செம்மை, 
   சேர்ப்பாக நீலமயில் அழகான ரூபம், 
அஞ்சவரும் பகைமாய்க்கும் வடபழனி பாலன் 
   அமர்கின்ற இடம்நெஞ்சம் அறிந்தாலே வெற்றி! 
 
வெற்றிவடி வேலவனின் வண்ணமயில் போதும் 
   வேளையெல் லாமும்நம் செயல்களது காக்கும்! 
சுற்றிவரு கின்றவிணை வாசனைகள் மாய்க்கும் 
   சுடர்வீசும் எண்ணத்தை வண்ணமயம் ஆக்கும் 
பற்றிவரும் கூற்றுபயம் இல்லாமல் சாய்க்கும் 
   பக்திநிலை யுள்ளவரைப் பரநிலையிற் சேர்க்கும் 
கற்றைச்சடைக் காரிமகன் வடபழனி பாலன்  
   கருணைமயில் தோழமையைப் பேணுகவிப் போதே!

போதையிலே புத்திதடு மாறுகிற காலம், 
   பொன்னகையில் மண்ணிலத்தில் மோகமுறும் காலம், 
பாதையிலே பாவையரின் மேனிகளின் மீது 
   பற்றுவரக் கூடுமொரு காமத்தின் காலம், 
நீதமிலா செய்கைகளைச் நாம்செய்யும் காலம், 
   நித்தியமும் சத்தியத்தை நினையாத காலம், 
சீதநிலாச் சடையர்மகன் வடபழனி பாலன் 
   சீரடிகள் பற்றிவிட்டால் குற்றமெலாம் போமே! 
      
ஓமென்ற பிரணவத்தின் பொருளோடு வந்தான் 
   ஒளிசிந்தும் ஈராறு விழியோடு வந்தான் 
தாமதிக் காமலோர் வேலோடு வந்தான் 
   தமிழ்காக்க சங்கத்தின் தலைமையாய் வந்தான் 
நாமங்கள் பலகூடி அர்ச்சிக்க வந்தான் 
   நயமான குறவள்ளி பூஜிக்க வந்தான் 
மாமன்மா லன்போற்றும் வடபழனி பாலன்  
   மலர்ப்பாதம் பணிவோர்கள் எல்லாரும் ஞானி! 

ஞானமொரு முகம்தந்தைக் குரைசொல்லிக் காட்ட 
   ஞாலமொரு முகமொற்றை நொடிசுற்றிப் பார்க்க 
சேனையொரு முகமந்த சுரனழிவை மாற்ற 
   செவ்விளமை முகமெங்கள் தமிழ்வள்ளி பார்க்க 
வானமொரு முகம்நாங்கள் பழநிதனில் பார்க்க 
   வண்ணமயில் முகம்சோலைப் பதியில்நடம் ஆர்க்க 
யானையெனும் முகனிளவல் வடபழனி பாலன் 
   யாவர்க்கும் எளியனென பாட்டுமுகம் காட்டும்! 
 
காட்டுக்குள் கிழவனென வந்தவிளை யாடல் 
   கனிசுட்ட கதைசொன்ன அன்புவிளை யாடல் 
பாட்டுக்குள் திருப்புகழில் கொஞ்சிவிளை யாடல் 
   பாதாதி கேசத்தில் அழகின்விளை யாடல் 
மேட்டுக்குள் கோவில்கள் வானவிளை யாடல் 
   மென்மலர்ப் பாதத்தில் தண்டைவிளை யாடல் 
நாட்டுக்குள் வாழுமருள் வடபழனி பாலன் 
   நல்லவிளை யாடல்கள் சொல்லிமுடி யாதே!

யாதென்று குறைகேட்டு வரமருள மாட்டான் 
   யாதொன்றும் குறைவாரா தருளிவினை செய்வான் 
தீதென்ன நாம்சொன்ன பின்காக்க மாட்டான் 
   தீதுவரும் முன்னாலே திசையெட்டும் காப்பான் 
சேதிகளைக் கேட்டுப்பின் சேமம்தர மாட்டான் 
   சேமத்தைச் சேதியென நமக்கருளிச் செய்வான் 
தூதுவரும் பாட்டில்மகிழ் வடபழனி பாலன் 
   துணையுண்டு பிறகென்ன பயமில்லை வேல்!வேல்! 
 
வேலந்த வேலலெங்கள் தோகைமயில் அம்சம்
   வேந்தனவன் வேந்தெங்கள் சங்கரியின் அம்சம்
காலந்தக் காலெங்கள் கணபதியின் அம்சம்
   கருணையது கருணையெம் தமிழ்மொழியின் அம்சம்
சூலந்த சூலெங்கள் சுடர்விழியன் அம்சம்
   சுந்தரமும் எங்களவன் மாலன்வடி வம்சம்
ஞாலத்தைக் காக்கின்ற வடபழனி பாலன் 
   நலம்யாவும் சேர்க்கின்ற முழுயிறையின் அம்சம்! 

சங்காரம் செயும்போது தீயுமிழும் கண்கள் 
   சங்கரிய ணைக்கையில் தேனுமிழும் கண்கள் 
பங்குபெறும் தெய்வானை பக்கத்தில் நிற்கப் 
   பார்க்கையில் குகனுக்குப் பாலுமிழும் கண்கள் 
சங்கத் தமிழ்ப்புலவர் கவிகேட்கும் போது
   சாந்தமுக முருகனுக்கு மதுவுமிழும் கண்கள் 
எங்கெங்கும் ஒளிவீசும் வடபழனி பாலன்  
   ஏரகனின் கண்களவை ஏகாந்தம் அன்றோ!!

-விவேக்பாரதி

 

Comments

  1. திருப்புகழின் தேன் போல அமைந்துள்ளது. வாழ்த்துகள் ❤️

    ReplyDelete

Post a Comment

Popular Posts