வசந்த வருணனை


- தமிழ்க்குதிர் மின்னிதழில் வெளியான எனது கட்டுரை -

தமிழ்ச் சிற்றிலக்கிய உறுப்புகளில் ’கேசாதிபாத’ வருணனை மிகவும் ரசனை வாய்ந்தது. தெய்வங்களையும், அரசர்களையும் பாட்டுடை நாயகர்கள் ஆக்கி, பெரும் கவிஞர்கள் நமக்குப் பாடிக் கொடுத்திருக்கும் 96 வகைச் சிற்றிலக்கியங்களில் கலம்பகம், உலா உள்ளிட்ட வகைகளில் வெளிப்படையாகவும், குறவஞ்சி, பிள்ளைத்தமிழ் போன்ற வகைகளில் மறைமுகமாகவும் இவ்வுறுப்பு பாடப்படுகிறது. தவிர சில தனிப் பாடல்களிலும் பயன்படுத்துவதால் கேசாதிபாத வருணனை ஒரு கவிதை உத்தியாகவே உணரப்படுகிறது. 

அக்கால இலக்கியங்கள் தொட்டு, இக்கால திரைப் பாடல்கள் வரை இந்த உத்தி பெயர் அறியாமல் புழக்கத்தில் இருப்பதுதான். அப்படி ஒருவரைத் தலைமுதல் கால்வரை புகழ்வதில்தான் எத்தனை வியப்பு. அதுமட்டும்மல்ல, சிற்றிலக்கியத்தில் இப்படி வருணிக்கப்பட ஒரு விதியும் உண்டு. பாட்டுடைத் தலைவர் ஆண் எனில், அவரைக் கால் முதல் தலை ஈறாக பாதாதி கேசமாய்ப் பாட வேண்டும். பெண்மை என்றால் தலையை முதலாகக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் இலக்கியங்களில் எத்தனையோ வருணனைகள் உள்ள போதிலும், குற்றாலக் குறவஞ்சியில் வரும் ஒரு வருணனை கேசாதிபாதம் என்று பெயரிடப்படாத ஒரு கேசரி. அப்பாடல் படிக்கும்தோறும் சிந்தனைச் சோலைத் தென்றலாய் நீவும் வசந்தம். ஆம், பாடல் கேசாதிபாதமாக புகழ்வது வசந்தவல்லி என்னும் கதாநாயகியை. திரிகூட ராசப்ப கவிராயர் இயக்குநராகப் படைத்திருக்கும் அற்புதமான கவிச்சித்திரம் - திருக்குற்றாலக் குறவஞ்சி. அப்படி வரிகளுக்கு ஊடாக வரும் கற்பனைகளும், அவற்றுக்குத் துணை செய்யும் சந்தங்களும் மனக்கண்ணின் திரையில் காட்சிகளைத் தெள்ளத் தெளிவாகக் காட்டும்.

சொற்களைக் கொண்டு அப்படி இயக்கிக் காட்டுவதில் கம்பன், வள்ளுவன், புகழேந்தி, ஒட்டக்கூத்தர் வரிசையில் நீங்கா இடம் கொண்டவர் திரிகூட ராசப்ப கவிராயர். குற்றாலக் குறவஞ்சியில் கதைக்களம், பின்னணி உள்ளிட்ட இத்யாதிகள் இலக்கிய உலகம் அறிந்தவை. அவற்றுள் புகுந்து நேரம் கடத்தாமல், விட்டதும் விருட்டெனக் கேணிக்குள் செல்லும் கயிற்று வாளிபோல் தொட்டணைத்து ஊறும் கவிதைக் கேணியாம் திருக்குற்றாலக் குறவஞ்சியின் அந்தக் குறிப்பிட்ட பாடலுக்குள் குதிப்போம். 

வீதியில் வரும் அழகிய பெண்ணாள் வசந்தவல்லி. அவள் ஆண்மக்கள் மயக்கமுற, அமரர்கள் கலக்கமுற, அமராவதி நாட்டுப் பெண்கள் நாணம் அழிந்து மண்டியிட, உள்ளூர்ப் பெண்களும் காதல் கொண்டு கருத்தழிய நடந்து வருவதாக வருணணை. அவ்விடத்தே அவள் அழகை வருணிக்கும் பாடல், சந்த நயத்துடன் மேற்குறிப்பிட்ட கேசாதிபாதத்தையும் இழைத்து முத்துச் சொற்களால் முறுக்கப்பட்ட மாலையாய் மிளிர்வது படிக்கச் சுகம் சேர்ப்பது. இதோ பாடல்,

இருண்ட மேகஞ்சுற்றிச் சுருண்டு சுழி எறியும் கொண்டையாள் – குழை
ஏறி யாடி நெஞ்சைச் சூறையாடும் விழிக் கெண்டையாள்
திருந்து பூமுருக்கின் அரும்புபோ லிருக்கும் இதழினாள் - வரிச்
சிலையைப் போல்வளைந்து பிறையைப்போல் இலங்கும் நுதலினாள்
அரம்பை தேசவில்லும் விரும்பி ஆசை சொல்லும் புருவத்தாள் – பிறர்
அறிவை மயக்குமொரு கருவம் இருக்கும் மங்கைப் பருவத்தாள்
கரும்பு போலினித்து மருந்துபோல் வடித்த சொல்லினாள் - கடல்
கத்துந் திரைகொழித்த முத்து நிரை பதித்த பல்லினாள் 

பல்லின் அழகைஎட்டிப் பார்க்கும் மூக்கிலொரு முத்தினாள் - மதி
பழகும் வடிவுதங்கி அழகு குடிகொளும் முகத்தினாள்
வில்லுப் பணிபுனைந்து வல்லிக் கமுகைவென்ற கழுத்தினாள் - சகம்
விலையிட் டெழுதியின்பநிலையிட் டெழுதுந் தொய்யில் எழுத்தினாள் 
கல்லுப் பதித்ததங்கச் செல்லக் கடகம்இட்ட செங்கையாள் – எங்கும்
கச்சுக் கிடக்கினும்தித் திச்சுக் கிடக்குமிரு கொங்கையாள்
ஒல்லுங் கருத்தர்மனக் கல்லுஞ் கழிக்குமெழில் உந்தியாள் – மீதில்
ஒழுங்கு கொண்டுளத்தை விழுங்குஞ் சிறிய ரோம புந்தியாள் 

துடிக்குள்அடங்கியொரு பிடிக்குள் அடங்குஞ்சின்ன இடையினாள் – காமத்
துட்டன் அரண்மனைக்குக் கட்டும் கதலிவாழைத் தொடையினாள்
அடுக்கு வன்னச்சேலை எடுத்து நெறிபிடித்த உடையினாள் – மட
அன்ன நடையிலொரு சின்ன நடைபயிலும் நடையினாள் 
வெடித்த கடலமுதை எடுத்து வடிவுசெய்த மேனியாள் – ஒரு
வீமப் பாகம்பெற்ற காமப் பாலுக்கொத்த சீனியாள்
பிடித்த சுகந்தவல்லிக் கொடிபோல் வசந்தவல்லி பெருக்கமே – சத்தி
பீட வாசர்திரி கூட ராசர் சித்தம் உருக்குமே 


ஆ! படித்துப் பார்த்தீர்களா? இயக்குநர் திரிகூட ராசப்ப கவிராயர் ஓட்டிக் காட்டும் ஒய்யாரியின் நடையழகுக் காட்சி அவள் நடையைப் போலவே எழிலுடன் துள்ளுகிறது. கண்மூடி ஒருகணம் இச்சொற்கள் சிந்தும் பொருளை ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தால் கண்முன் வரும் பேரழகி எப்படிப் பட்டவள் தெரியுமா?

கருமுகில்கள் திரண்ட கார்குழல், காதுவரை நீண்ட மீன்விழி, முருக்கம் பூ அரும்புகளாய்ச் சிவந்த இதழ்கள் என்று தலை முதல் கால் வரை கவிராயர் சொல்லும் வருணனைகளை ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்து இன்புற வேண்டும். இந்தப் பாட்டின் மொத்த அழகும் பெண்மையின் மென்மைப் பாகங்களை வருணிக்கையில் கவிஞர் கையாண்டுள்ள அழகியலில்தான் இருக்கிறது. 

முத்தடுக்கிய பற்கள், மூக்குத்தி அணிந்த மூக்கு என்று மெல்ல மெல்ல கீழிறங்கும் கவிஞர், கழுத்தைக் கமுகுடன் ஒப்பிடுகிறார். கமுகு எனப்படும் பாக்கு மரம், குறிப்பிட்ட ஒரு பகுதிவரை சுரசுரப்புள்ள மரமாகவும், பின்னர் வளுவளுவென்று மனிதரின் கழுத்துபோல் அளவில் மெல்லச் சுருங்கி கிளைத் தோகைகளை விரித்திருக்கும். இதனை வசந்தவல்லியின் கழுத்துக்கு ஒப்பிட்டுச் சொல்கிறார். அடுத்த அடியில் அப்பெண்ணின் கையெழுத்தையும் புகழ்கிறார். நடந்து வந்தவள் கையெழுத்தைக் கவிஞர் எப்படிக் கண்டார்? கற்கள் பதித்திருக்கும் அழகிய கடகத்தை அணிந்து இப்படி ஒரு கரங்கள் மண்ணில் இருக்குமெனில் அதன் கையெழுத்து உலகையே விலையாக எழுதிக் கேட்கும் தன்மையினதே என்று நம்மைக் குறிப்பால் உணரச் செய்கிறார். 

அடுத்துவரும் அவளது கொங்கைகள், கச்சுக்குள் மூடப்பட்டுக் கிடந்தாலும் காணக் காணத் தித்திக்கும் வடிவினைக் கொண்டிருப்பதாகப் பாடுகிறார். அப்போதிலிருந்து இப்போதுவரை ஒரு பெண்ணைக் கண்ணோட்டமிடும் ஆடவரின் உளவியலை அபட்டமாக சொல்லுவதாயினும், விரசமின்றி அழகு தொனிக்க “கச்சுக் கிடக்கினும் தித்திச்சுக் கிடக்கும் கொங்கையாள்” என்று பாடுகிறார். இன்னும் கீழிறங்கி அவள் வயிற்றின் சுழியைப் பாடுகிறார். 

சிந்தனை பிசகாமல் இறை வழியிலேயே நின்று மனத்தைக் கட்டுக்குள் வைத்துக் கல்லாக்கி வாழும் தவம் கொண்டவர்கள் மனத்தையும் சுழலுக்குள் சிக்கிவிடும் வகையில் அத்தனை எழிலுடையது அவள் உந்தி என்கிறார். அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், அதன் மேல் மென்மையான ரோமங்களால் ஒரு பந்தியும் உண்டு என்று பாடுகிறார். அகத்திணையில் மிகவும் உணர்ந்து ரசித்து எண்ணி இன்புறத்தக்கதை அழகியலாய் வருணித்துவிட்டார் கவிஞர். 

பின்னர் ஒரு பிடிக்குள் அடங்கும் குழந்தை இடை, காமன் அரண்மனையின் தூண்களாக கதலித்தண்டு தொடைகள், எழிலுடன் அமைந்திருக்கும் உடை, அதற்கு ஏற்ப நடக்கும் அன்னத்தின் நடை என்று பாடி நிறைவில் இவையெல்லாம் திரிகோண மலையில் வாழும் ஈசனான திரிகூடராசர் சித்தத்தை உருக்கும் என்கிறார். திரிகூடரை உருக்குமோ இல்லையோ, இலக்கியக் காட்டுக்குள் வழியின்றி தேடும் நம்மை நிச்சயம் உருக்கி ஓரிடத்தில் உட்கார வைக்கும் அமரக்காட்சி இது. 

சந்தம், சொல்லும் உவமைகள், அவற்றைக் கையாளும் விதம் என்று மனத்தில் ஆழமாகப் பதியக்கூடிய அமரக்கவிதையைப் படைத்திருக்கிறார் திரிகூட ராசப்ப கவிராயர். தொடக்கம் முதல் நிறைவு வரை விரசம் தெரியாத அற்புதமாய் கவிராயர் படைத்திருக்கும் பாத்திரப் புனைவும், அதனை அழகுற மொழிந்திருக்கும் கேசாதிபாத வருணனை அழகும் படித்துப் படித்து சுகம் கொள்ளத் தக்கது.

-விவேக்பாரதி
16-06-2021

Comments

Popular Posts