யோகமா தேவி சகவாசம்

எனது யோகமா தேவியான குரு சௌமியா அக்காவுக்கு சமர்ப்பணம் 

உடலா? சீச்சீ ஒருநாள் சரியாகும் 
உடனே உருகுலைந்(து) உளையும் இதையா 
பேணுவது காப்பது பெரிதாய் அழகூட்டிக்
காணுவது? போடா கயமை எனநினைத்தேன்!

உள்ளிருக்கும் ஆத்மாவை ஒளிர்த்தும் பயணத்தில் 
முள்ளிருந்தும் மலர்போல முழுதும் உதவுவது 
காயம் எனும்கருத்தை கற்றும் பறக்கவிட்டேன்! 
மாயப் பழவிருட்டில் மங்கிக் கிடந்திருந்தேன்!

நாளாக நாளாக நான்மெலிந்து போகையிலும், 
தோளான தோள்கள் சோம்பல் சுமக்கையிலும், 
வயதேறும் மாற்றமென வாக்கியங்கள் பேசி 
சுயம்தேறும் எண்ணமொரு சற்றும் இழந்திருந்தேன்!

படுத்தால், இரவைப் பகல்போல் நகர்த்துதல்!
கொடுக்கும் காலையில் கொள்ளைத் துயிலிருத்தல்! 
என்றெல்லாம் எண்ணி எழும்பா துழன்றிருந்தேன், 
நின்றால் கூண்வீழ நிமிர்தல் மறந்திருந்தேன்!

அப்படியே சென்ற அடியனேன் என்வாழ்வில் 
எப்படியோ ஓர்கணத்தில் ஏறிவரும் மின்னலென 
ஆதி அறியாமல் ஆர்ப்பரிக்கும் உணர்ச்சியென 
சேதி விளம்பவரும் செல்லுலார் ஞிமிறெலன 
யோகமா தேவி உள்ளம் தொடவந்தாள், 

தாகமோ எனநினைத்துத் தமிழ்தண் ணீர்கொடுத்தேன் 
தயவுதா னோவென்று தம்பி நிலைகொடுத்தேன் 
அயர்வுக்குத் தோள்கொடுத்தேன் ஆச்சர்யம் பலகொடுத்தேன் 
ஆனபோ தும்வந்த அழகி எனிலேதோ 
ஞானம் புகுத்தும் நலம்தேடிப் பின்தொடர்ந்தாள்! 

கண்டுகொள்ள வில்லைநான் காலத்தின் ஓட்டத்தில் 
துண்டுகளாய் தூள்தூளாய் துவண்டு போயிருந்தேன்!
என்ற போதும் அவள்நெருங்க விடவில்லை 
ஒன்றுவது நிச்சயமென்(று) அவளும் தனித்திருந்தாள்! 

அப்போது தானுலகில் அசுரன் ஒருவன் 
தப்பாமல் யாவரையும் தனக்கே இரையாக்கி 
கோடானு கோடி கொன்று குவிக்க 
ஓடாமல் ஓடி ஒளிந்தோம் மக்களெலாம்! 

தனியான அவ்வேளை தடைப்பட்ட என்னோட்டம் 
மனதோடு நிற்காத மாயக் கேள்விகள்!
அழுத்தம் எனைவிழுங்க ஆதர்ச நாள்தேடி 
பழுத்த வாய்திறந்து பார்த்திருக்கும் அனுபவங்கள்! 

துணையாரும் இல்லாத துன்ப நாழிகையில் 
அணையாத சுடரை அகத்தில் தரவந்தாள்! 
மின்னோர் ஆயிரம் மீட்டிக் கொண்டுவந்தாள், 
பொன்னார் மேனி புளகம் பெறவந்தாள், 
கண்ணே என்று கையணைத்துக் காப்பாற்றக் 
கண்ணன் வடிவாய்க் காளியாய் அவள்வந்தாள்!
உன்சங்க டம்தீர்க்க உடல்பேண் எனச்சொல்லி 
தென்சங்கத் தமிழாய் தேனாய் உள்வந்தாள்! 

உடல்பேணல் எப்படி உள்ளம் சரியாக்கும்?
விடையற்ற கேள்விகள் வீசினேன் அவளிடம், 
யாவும் கேட்ட ஆரணங்கு, மௌனத்தால் 
தேவை தீரும் திறத்தில் பதில்தந்தாள்!

கைகல் வளையென்றாள்! கடுகி நடவென்றாள்! 
சாகா அமரநிலை சத்தியம் எனச்சொன்னாள்! 
மூச்சை உணரென்றாள், முன்பின்னால் பாரென்றாள், 
ஆச்சர்யம் ஆச்சர்யம் உடல்தான் அறியென்றாள்! 
ரப்பர் போல்வளைந்தாள் இரவிலும் ஒளிபார்த்து 
அப்பப்பா நெஞ்சுக்குள் ஆனந்தக் களிதந்தாள் 
தியானம், யோகம், தைரியம், நோயின்மை 
வியாபித்துத் தந்தாள் விதையாய் உள்சென்று
விருட்சமாய் ஆகியென் விந்தை மிகுமுடலை 
அருச்சனைப் பொருளாக அவளே தயார்செய்தாள் 

என்கற்றேன் அவளிடத்தில் இங்கே பாருங்கள் 
ஒன்று கற்றாலும்நான் உயிர்வாழும் வழிகற்றேன்! 

காலைச் சூரியனைக் கைதொழும் வித்தையைநான் 
பாலை இடைபாயும் பாலாறாய்த் தான்கற்றேன் 

ஏழில் பெரியமுள் எழுந்து நின்றவுடன் 
வாழும் தரைமேல் வழுவாதோர் பாயிட்டு 
நின்ற நொடிமுள் நிலைபோல் நேர்நின்று 
வென்றி சேரிரு வேய்ந்தோள் தமைஉயர்த்தி 

நேரே கும்பிட்டு நெஞ்சு மேல்பார்க்க 
சீராய்ப் பின்பக்கம் சின்ன தலைசாய்த்து, 
முன்னால் குனிந்து முட்டி மடக்காமல் 
பின்னால் இடதுகால் பிழையின்றி யேநிறுத்தி  
அடுத்த காலையும் அதுபோல் பின்நீட்டி 
தடுத்துநம் உடலை சரிநேர் கோடாக்கி 

நெஞ்சம் நிமிர்த்தி நேரே முகம்பார்த்து 
கொஞ்சம் உயர்ந்து கோலம் வளைவாக்கி 
தலையும் காலிடுக்கும் சமன்செய் நிலையாக்கி 
முன்போல் கால்கள் வலமிரண்டாய் மேல்தூக்கி 
மின்போல் மீண்டும் நேர்நிலைக்கே வந்து

கும்பிடுங் கைகள் குறித்த இவைதொடர 
நம்பலம் அறிந்து நாளோர் சுற்றுயர்த்திக் 
காலைச் சூரியனைக் கைதொழும் வித்தையைநான் 
பாலை இடைபாயும் பாலாறாய்க் கற்றேனே!! 

-விவேக்பாரதி
21.06.2021

Comments

Popular Posts