பல்லவி தொலைந்த பயணம்


சத்தம் போடும் ரயில்தான் காதில் 
ரகசியக் கவிதை சொல்கிறது 
யுத்தம் மூளும் நெஞ்சினில் சின்ன 
ஊசி முனைநீர் பெய்கிறது! 

வேகம் காட்டும் ரயிலின் இரவில் 
வேய்ங்குழல் கீதம் கேட்கிறது 
தாகத்தோடு மீட்டுவதாரோ?
தரிசனம் இன்றித் தீர்கிறது! 

பின்னால் செல்லும் காட்சிகள் கூட 
பிரிக்க முடியா நினைவுகளை 
முன்னால் காட்டி இம்சை செய்ய 
முத்துத் தூறல் இதம்சேர்க்க 

ஓடும் நெஞ்சம் இளைபாறத்தான் 
ஒதுங்கும் பயணம் கிடைத்துளது 
பாடியா இதனைத் தீர்ப்பதென் றுள்ளம் 
படுக்கை தேடி விழுகிறது! - வந்த 
பல்லவி மறந்து தொலைகிறது!!

விவேக்பாரதி
17-04-2021

Comments

Popular Posts