விவேக்குக்கு இரங்கல் பா


நட்ட மரமும் நகைச்சுவையாய் நீயுலகில் 
விட்ட விதைகளும் விம்மிடவே - எட்டிப்  
புதுலோகம் சென்றாய் புகுந்த இடத்தும் 
விதமாய் அதேசெய் விவேக்! 

இந்திரன் பாவம் இனிமேல் வயிற்றுவலித்
தொந்தரவு சற்றே தொடங்கிடலாம் - வந்த 
இடம்சென்றாய் நீயிங் கிருந்த வரையில் 
தடம்தந்தாய் கண்டோம் சிரித்து! 

சின்னக் கலைவாணா சிந்திக்க வைத்தவுன் 
வன்னக் கருத்துகள் வாழுமையா - உண்மையை 
நெஞ்சகத்தில் வைத்தாய் நிறைவாழ்வு நீபெற்றாய்! 
கொஞ்சும் உனையூர் குளிர்ந்து! 

அடித்தும் அடிவாங்கி ஆவென்று கத்தி 
நடித்தும் நகைச்சுவை நல்க - அடயிங்கே
ஆயிரம்பேர் உள்ளார் அறிவுதரும் ஜோக்செய்நீ
போயினையே எம்மைப் பிரிந்து!

கவிதையும் செய்தாய் கருத்துடன் மேடைச்
செவிதைக்க நல்லுரைகள் செய்தாய் - தவமாய்த் 
தமிழ்மொழியும் காத்தாய் தகுந்தவிடம் மக்கள் 
குமிழிதயம் உன்றன் கொலு! 

ஏவுகணை வீசி இடம்பிடித்த மாமனிதர் 
தாவுகணைச் சொல்லில் தடம்பெற்றாய் - வாழ்விதனை
பின்னோர்க் குதவிடும் பீடு படைத்தாயே 
மன்னவா போய்வா மகிழ்ந்து 

எப்படியி ருந்தாலும் இப்படியி ருந்தாலும் 
தப்படி வைக்காது தாரணியில் - செப்பிய 
பாடங்கள் உன்றன் பெயர்சொல்லும் நீமதித்த 
நாடுன்னைப் பேசும் நயந்து!

விந்தைகள் செய்த விவேக்குனக் கிவ்விவேக் 
வந்தித் திரங்கல் வடித்துவிட்டேன் - சிந்திய 
கண்ணீரின் சூட்டில் கலையாக நீவாழ்வாய் 
மண்ணுனைப் போற்றும் வளர்ந்து! 

விவேக்பாரதி 
17.04.2021

Comments

  1. மொத்தமும் தடுமாறிப்போகிறது...வாழ்க்கை இவ்ளோ தானேனு நினைக்கறப்ப...

    ReplyDelete
    Replies
    1. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை படைத்திவ் வுலகு என்கிறாரே வள்ளுவர். நிதர்சன உண்மைகள் நிஜத்தில் வலிக்கத்தான் செய்யும். கருத்துக்கு நன்றி.

      Delete

Post a Comment

Popular Posts