வைரமுத்துவும் பழைய கள்ளும்


வைரமுத்து ஆதரவாளர்கள் கொந்தளிக்க வேண்டா. நாட்படு தேறலுக்கு அதுதான் அர்த்தம். 

இணையத்தில் எங்கு தேடினாலும் வைரமுத்துவின் நாட்படு தேறல் பிரபலமாகி விட்டது. பல நாட்கள் கழித்து கொடுக்கப்பட்ட கள் என்பதே அந்த இலக்கியச் சொல்லின் அர்த்தம். அதியனின் மகன், ஔவைக்கு அத்தகைய கள்ளைக் கொடுத்தும், புது ஆடைகளைக் கொடுத்தும் வரவேற்றானாம். ஔவை தனது பாட்டில் பதிவு செய்திருக்கும் டைரிக்குறிப்புதான் இந்தச் சொல்லுக்கான மூலம். 

இதைத் தெரிந்துதான் நம் கவிப்பேரரசு கையாண்டிருக்க வேண்டும். ஆரம்பத்திலிருந்தே மிக உயர்ந்த இலக்கியச் சொற்றொடர்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முதன்மையாக விளங்கும் வைரமுத்து, இங்கும் அப்பணியில் சரியாக செய்திருக்கிறார், நாட்படு தேறல் இசைப்பாடல் தொகுப்பில் இரண்டு பாடல்கள் வெளியாகிவிட்டன. இரண்டையும் கேட்டு மீண்டும் ஒருமுறை தொகுப்பின் தலைப்பைப் பார்த்தேன். ஆம், நாட்படு தேறலேதான்.

காலத்தில் கொள்ளை போகும் கலைஞர்களில் கவிஞர்கள் முதல் இரை. அப்படிப் போகாமல் தங்களைக் காத்துக்கொள்ள பல பிரம்ம பிரயத்தனங்களைக் கவிஞர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதில் வெற்றி கண்டவர் கவிஞர் வாலி. சினிமாப் பாடல்களில் அப்டேட்டான போக்கு, கவிதையில், தனக்கே உண்டான புதிய பாணி, ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களைப் புதுக்கவிதையில் செய்தமை இப்படி அவருடைய பங்கை இறுதிவரை நிறுவியவர் வாலி. அவர் வரிசையில் வந்த வைரமுத்துவும் அதற்குத்தான் முண்டி அடித்துக் கொண்டிருக்கிறார். அந்த “இமாலய சாகச’ முயற்சிதான் இந்த நாட்படு தேறல். 

அண்மையில் பேசிய பாடலாசிரியர் நண்பர் ஒருவர் சொன்ன வாசகம். ‘வெறும் கவிஞனால இன்டஸ்ட்ரிக்குள்ள இருக்க முடியாது பாஸ். இங்க அதைத் தாண்டி வேற ஒன்னு வேணும்’. இதனை நானும் சிந்தித்தேன், இப்போதிருக்கும் பாடல்களுக்கு கவிஞனா தேவை? முன்னரே கணினியில் வடிவமைக்கப்பட்ட இசைக்கு, சப்தம் போக மிச்ச இடங்களில் வார்த்தைகளைக் கோக்கும் பாடலாசிரியன் போதும். அதுதான் தேவையும். அவனுக்கே சங்கத் தமிழைவிட சென்னைத் தமிழ் தெரிந்திருந்து, கலோக்கியலாக எதை வேண்டுமானாலும் சொல்லி விடலாம் என்ற எண்ணம் இருந்தால் அவனது பாடல்கள் யூடியூபை கொள்ளை கொண்டு, குழந்தைகளை அர்த்தம் புரியாமல் ஆட வைக்கும். ஆனால், இந்தக் கூட்டத்தில் முடிசூடா மன்னனாக வீற்றிருக்கும் கவிப்பேரரசு நல்ல கவிஞர். அது அவருடைய பாடல்களில் வெளிப்பட்டிருக்கிறது. 

நாக்குச் செவந்தவரே என்கிற முதல் பாடலின் கதைகளம் மிகவும் பாராட்டத் தக்கது. வார்த்தைகள் பழையதானாலும் அதில் சொல்லப் பட்டிருக்கும் வாழ்க்கை புதிது. மாதவி மனநிலையில் மறைவில் உள்ள பல பெண்களது எண்ணக் குமுறல் எழுத்தாகியிருக்கிறது. ஆனால், அது வரியாகப் படிக்கும்போதுதான் தெரிகிறதேயொழிய, பாடலாகப் பார்க்கும்போது இப்போது வெளியாகும் பேன்சி திரைப்பாடல்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் அப்படியேதான் இருக்கிறது. தனது கனவுத் திட்டத்தின் காட்சி வடிவத்தை வைரமுத்து இன்னும் கொஞ்சம் மெருகேற்ற கவனம் செலுத்தியிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. 

இந்த இரவு தீர்வதற்குள், சரியான விகிதத்தில் கவிதையும் பாட்டும் கலந்து கொடுத்திருக்கும் கலவை. இதில் தெரியும் உழைப்பு முன்னதில் இல்லாமல் ஒரே சத்தமாக இருந்தது என் போன்ற விஷயமறிந்த ரசிகர்களை கொஞ்சம் முகம் சுளிக்க வைத்திருக்கும். 

எது எப்படியோ, அடுத்த 98 பாடல்களையும் வெளியிட்டு, வைரமுத்து தனக்கு இன்னொரு பீலியை கிரீடத்தில் சூட்டிக் கொள்ளப் போகிறார். அது புது முகங்களுக்கும், தனியிசை கலைஞர்களுக்கும் அவர் வழங்கும் அங்கீகாரம். அதற்காக “வாழிய நாட்படு தேறல்”

கொசுறு : இந்தத் தொகுப்புக்கு வைரமுத்து வழங்கியிருக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து எல்லாவற்றினின்ற்ம் புதிது என்ற அடைமொழியில் கொடுக்கப்பட்டுள்ளது. எனில் உண்மையில், ஒரு கவிதையை இப்படி காணொலி ஆக்கலாம் என்ற எண்ணத்தைத் தவிர அதில் புதிதை நானும் ஒவ்வொரு முறையும் தேடுகிறேன். 

தேடிக் கிடைப்பதில்லை என்று 
தெரிந்த ஒரு பொருளை 
தேடிப் பார்ப்பதென்று மெய்த்
தேடல் தொடங்கியதே - வைரமுத்து 

-விவேக்பாரதி 
27.04.2021


Comments

  1. அருமையான கருத்து... ஆழ்ந்த புரிதல் நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே

      Delete

Post a Comment

Popular Posts