எண்சாண்

சத்யலோகம். அற்புதமான தாமரைகளால் நிறைந்திருந்தது. வெள்ளைத் தாமரைகள் எங்கும் பூத்துக் குலுங்கின. மேகங்களும் தாமரைகளுமாய் நிறைந்திருந்த சத்ய லோகத்தில், உயர் பீடம் ஒன்றில் படைப்புகளை சிருஷ்டிக்கும் அந்த லோகத்தின் அதிபதி பிரம்மதேவன், ஒரு வெண்டாமரையில் அமர்ந்து தியானத்தில் லயித்திருந்தான்.

பிரம்மனுக்கு அருகில் கலைவாணி வீணையுடன் அமர்ந்திருந்தாள். அவள் தன் வீணையின்மேல் கை வைத்துத், தன் தாமரையிலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பூநாகத்திடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். அவர்கள் பேசும் சாயல், ஏதோ இருவருக்கும் பெரும் வாக்குவாதம் நிகழ்வது போலத் தோன்றியது.

வாணி எதையோ சொல்ல, அதற்கு நாகம் மறுத்துத் தலையாட்ட, மறுபடியும் நாகம் ஒன்று சொல்ல, அதற்கு வாணி தலையாட்ட என்று வாக்குவாதம் தொடர்ந்தது.

இவற்றையெல்லாம் பார்த்துக் குழம்பிப் போன நாரதன், புதிர் தாங்காமல் சத்ய லோகத்துக்குள் சத்தத்துடன் நுழைந்தான்.

“தாயே கலைவாணி! நமஸ்காரம்”

“அட! வா நாரதா! நமஸ்காரம்”

“ஏதோ காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது போலும்…”

கெட்டு மெல்லக் கண் விழித்தான் பிரம்மன்.

“தந்தையாருக்கு நமஸ்காரம்”

நாரதன் வணக்கத்தைத் தலையசைத்து ஏற்றார். கலைவாணியின்பால் முகம் திருப்பி,

“என்ன வாக்குவாதம்?” என்றார்.

“சகல கலைகளுக்கும் தெய்வமான கலைவாணியிடம் நான் எப்படி வாதாட முடியும்? ஒரு புதிர் போட்டேன் அவ்வளவுதான்” என்று ஏளனத்துடன் சொன்ன பூநாகம்,

“உலகில் சிறிய அரசாங்கம்! ஓயா துழைத்தல் சிறப்பாகும்!

சொன்னால் நீ தான் அறிவாளி! சொல்லா விட்டால் வெறும் காலி!”

என்று புதிரைப் போட்டுவிட்டுத் தாமரைக்குள் சென்று ஒளிந்து கொண்டது.

இதைக் கேட்டதும் பிரம்மனுக்குச் சிரிப்பு வந்தது. அது விடையை அறிந்த சிரிப்பாக நாரதனுக்கும், தன் நிலை கண்ட நக்கல் சிரிப்பாக வாணிக்கும் தோன்றியது.

“ஐயனே! வீண் பரிகாசம் வெண்டா”

“தேவி! இதற்கு விடை நீ சொல்லத் தேவையில்லை! உன் தந்தியே சொல்லுமே”

“என் வீணையின் தந்தியா?”

“ஆம் தேவி! மறந்து போனாயா? உன் வீணையின் தந்தி ஒன்று நீ தந்த வரத்தால் பூலோகத்தில் மனிதனாகப் பிறந்ததே! அவன் இந்தப் புதிருக்கு விடை சொல்வான்” என்று நினைவூட்ட,  

“ஐயனே! எனக்கே தெரியாதபோது வீணையின் தந்தி எப்படி இதற்கான விடையைச் சொல்ல முடியும்?” என்று குழப்பமாக வாணி கேட்கையில்  

“தெய்வ ரகசியம் தெய்வங்களுக்கும் பொருந்தும் வாணி!” என்று மீண்டும் ஆழ் தியானத்தில் ஆழ்ந்தான்.

வாணி ஒன்றும் புரியாமல் கைகளைப் பிசைந்தபடியே நாரதனைப் பார்த்தாள். தாயின் கண்பார்வைக் குறிப்பு உணர்ந்த நாரதன் பூலோகத்தில் குளிர் தென்றல் தொட்டணைக்கும் கொங்கு மண்டலத்துக்குச் சென்றான்.

அந்நாட்டை, பராக்ரம சேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். கவிதையில் மிகுந்த நாட்டம் கொண்ட அவ்வரசன், நாட்டில் உள்ள புலவர்கள் நலம் வாழ  பெருந்தொண்டு புரிந்து வந்தான்.

நெடுங்காலமாகத் தனக்கு எதிரியாக இருந்த அண்டை நாட்டைப் போரிட்டு வென்ற களிப்பில் தன் நகருக்குத் திரும்பிக் கொண்டிருந்த பராக்ரமனை நாரதன் சந்தித்தான்.

“பராக்ரம சேனனுக்கு ஆசீர்வாதங்கள்”

“வணங்குகிறேன் ரிஷியே!”

“உன் எதிரி நாட்டை வென்ற களிப்பு முகத்தில் தெரிகிறதே பராக்ரமா!”

“எல்லாம் தெய்வங்களின் அனுக்ரஹம் தானே நாரதரே! ஆனாலும் என் பலம் அத்துடன் இணைந்து பெரும் ராஜாங்கத்தை நிறுவ வைத்துவிட்டது. இந்தப் பூலோகத்திலேயே இப்போது என்னுடைய ராஜ்ஜியம் தானே பெரியது! சிறந்தது!”  என்று கர்வத்தில் எக்களித்தான் பராக்ரம சேனன்.

கேட்டதும் சின்ன ஏளனப் புன்னகையுடன், “பெரியது என்று பரப்பளவால் சொல்லலாம்! ஆனால் சிறந்தது என்பதை அவ்வளவு எளிதில் நிறுவிவிட முடியாது” என்று தன் கலகத்தைத் தொடக்கினான் நாரதன்.

”என்ன நாரதரே! அப்போது என் வெற்றி வீணா?” என்று சினந்தான் மன்னன்.

“நான் எங்கப்பா அப்படிச் சொன்னேன்?”

”எப்படி என் அரசை விடச் சிறந்த அரசு ஒன்று இருக்க முடியும்?”

“பராக்ரமா! உன் வெற்றி அறிந்து உன்னை வாழ்த்த வந்துகொண்டிருந்தேன். உன்னுடைய அரசே பெரியது, சிறந்தது என்றெல்லாம் எண்ணிக் கொண்டு நான் வரும்போது, வழியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.  அவர்களில் ஒருவன் ஒரு புதிரைப் போட்டான்” என்று சொல்லி,

“உலகில் சிறிய அரசாங்கம்! ஓயா துழைத்தல் சிறப்பாகும்!

சொன்னால் நீ தான் அறிவாளி! சொல்லா விட்டால் வெறும் காலி!”

என்று நாகம் சொன்ன புதிரைச் சொன்னான். இது பராக்ரமனுக்குக் கோபத்தைக் கிளப்பியது.

“என்னுடையதே சிறந்த அரசு! இதைக் கற்றறிந்த புலவர்கள் வாயால் சொல்ல வைக்கிறேன்! அப்போது இந்தச் சொலவடை உடைந்து போகும் அல்லவா” என்று கேட்டான்.

“அதெப்படி முடியும்? இதற்கான விடை, புதிர் போட்ட அந்தப் பையனுக்குத் தெரியுமே! மன்னா! இப்புதிருக்கு விடை காண்பதுதான் ஒரே வழி” என்று ஆலோசனை வழங்கினான் நாரதன்.

பராக்ரமன் மறுநாள் காலை அரசவையை அடைந்தான்.

அவசர அவசரமாகத் தன் நாட்டின் அத்தனைப் புலவர்களையும் தான் அழைத்ததாக ஓலை அனுப்பினான்.

புலவர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர். அரசவையின் ஒரு புறத்தில் குவியல் குவியலாக விலை உயர்ந்த மாணிக்கக் கற்கள் இருந்தன. இன்னொரு பக்கம் கூர்மையான மிகப்பெரிய வாள் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

புலவர்களுக்கு ஆச்சர்யமும் பயமும் கலந்து சூல் கொண்டது.

மன்னன் பேசத் தொடங்கினான்,

“அரும் புலமை வாய்ந்த பெரியோர்களே! புலவர்களே! எதிரி நாட்டை நாம் வென்ற வெற்றிக் களிப்பினை நீங்கள் ஊர் முழுக்கப் பாடிக் கொண்டே வந்ததாகச் செய்திகள் கேள்விப்பட்டேன்!

அதிலெல்லாம் எனக்கு இப்போது மகிழ்ச்சி இல்லை. இதோ, வீதியில் விளையாடும் ஒரு சின்னஞ்சிறுவன் என் அரசாங்கத்தை இழிவாக்கும் விதமாக ஒரு புதிரை இட்டிருக்கிறான். இதற்கான விடையை நீங்கள் சொன்னால்தான் நான் என் பூர்வ பகையை வென்ற ஆனந்தம் எனக்குக் கிடைக்கும்.

பேரறிவாளர்களே! உங்களை நான் முழுவதுமாக நம்புகிறேன்! ஒருவேளை உங்களில் ஒருவர் பொருளைச் சொல்லிவிட்டால், உங்கள் அனைவருக்கும் இந்த ரத்தினப் பொக்கிஷங்கள் உண்டு. ஆனால், ஒருவர் சொல்லாவிட்டாலும்,  அனைவரது தலைகளும் இந்தப் பக்கம் இருக்கும் வாளுக்கு இரையாகும்!

நினைவிருக்கட்டும்! நாளை காலை வரை உங்களுக்குக் கெடு! இதோ புதிர்,

“உலகில் சிறிய அரசாங்கம்! ஓயா துழைத்தல் சிறப்பாகும்!

சொன்னால் நீ தான் அறிவாளி! சொல்லா விட்டால் வெறும் காலி!”

நீங்கள் புறப்படலாம்!” என்று ஆணையிட்டான்.

”இதென்ன விபரீதமான ஆணையாக இருக்கிறதே! சின்னக் குழந்தை ஏதோ பிதற்றியிருப்பதற்கு நாம் பதில் சொல்வதா?” என்று ஒருவருக்கொருவர் சலசலத்துக் கொண்டே வீடுகளுக்குத் திரும்பினர்.

அந்தப் புலவர் குழுவிலேயே வெங்கடேச நம்பி மிகவும் இளையவன். இவனே வாணியின் அருளால் மனிதப் பிறவி எய்திய அவளுடைய வீணையின் தந்தி. இளம் வயதிலேயே இசை மற்றும் கவிதையில் மிகுந்த புலமை கொண்டிருந்தான்.

ஆழ்ந்த யோசனையுடன் வீடு வந்த நம்பியை அவன் மனைவி வரவேற்றாள். அரசவையில் தங்களுக்கு அரசரால் விதிக்கப்பட்ட கட்டளையைப் பற்றி கேட்டுக் கலங்கினாள். புதிர், விடை, தர்க்கம் அனைத்துக்கும் தெய்வமான கலைவாணியைப் பிரார்த்திக்கும்படி அவன் மனைவி அவனுக்கு அறிவுரை வழங்கினாள்.

புதிருக்கான விடையைக் குறித்து நிறைய சிந்தித்து இரவு தூக்கத்தைத் தொலைத்தான். தன் குடிலின் வெளியில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கிடந்தபடி முழுநிலவைக் கண்டு சிலாகித்தான். இச்சிறு வயதில் தனக்குப் புலமையையும், அதனால் உயர்ந்த வாழ்க்கையையும், இப்போது இப்படியொரு சிக்கலையும் கொடுத்திருக்கும் கலைவாணியின் அருட்குணத்தை எண்ணி வியந்தான்.

அப்படியே ஒரு கவிதையைப் புனைந்தான். தன்னுடைய ஆற்றாமையின் வெளிப்பாடாக அதனைப் பாடி முடித்து, அந்தக் களைப்பில் கண் மயங்கித் துயின்று போனான்.

சத்யலோகத்தில், கலைவாணி முகத்தில் மலர்ச்சி. தாமரைப் பூவுக்குள் மறைந்திருந்த நாகம், நம்பி பாடிய பாடலைக் கேட்டு வெளியில் வந்தது.

“தேவி! தங்களைச் சோதிக்க நினைத்தேன்! ஆனால் தாங்கள் உங்கள் பக்தன் மூலம் எனக்குச் சரியான பாடத்தைப் புகட்டினீர்கள்! என்னை மன்னியுங்கள்” என்று சொல்லிச் சரணமிட்டு ஒளிந்து கொண்டது.

பிரம்ம தேவன் மென்மையாகப் புன்னகைக்க, கலைவாணி அதனை ஆமோதித்து மேலும் பூரிப்படைந்தாள். மன்னன் மனத்தில் ஏற்பட்ட கலக்கத்தை நீக்கச் சொல்லி பிரம்மனை வாணி கேட்டதற்கு, “அதுவும் நம்பியாலேயே தீரும்” என்று சொல்லிவிட்டார். கலைவாணிக்குத் தன் பக்தன் மேல் நம்பிக்கை இருந்தாலும், அவன் பாடலின் பொருள் மன்னனுக்கு விளங்க வேண்டுமே என்கிற கலக்கம் பிடித்தது.

பூலோகத்தில் விடிந்துவிட்டது. புலவர்கள் வீட்டுக்கு மன்னனின் சேவகர்கள் வந்து அரசவைக்குப் புலவர்களை அழைத்துக்கொண்டு போனார்கள். தன்னிடம் பதில் இல்லாததால் வெறும் கையனாக நம்பியும் அரசவைக்குச் சென்றான்.

தலைமைப் புலவர் உட்பட யாரும் சரியான விடையைக் கொண்டு வரவில்லை. சிலர் ஒப்புக்கு விடை சொல்ல நினைத்தனர். அதுவும் மன்னனுக்குச் சமாதானம் ஆகவில்லை. ஒவ்வொரு புலவராக மேடை ஏறித் தங்கள் பதில்களைச் சொல்லிக் கொண்டிருக்கத் தன்னிடம் எந்தப் பதிலும் இல்லாத நிலையால் நம்பி நெஞ்சம் பதறியது. வியர்வை வழிந்தது. உடல் உதறல் எடுத்தது.

அச்சமயம், நம்பியின் மகன் மாதவன் அரசவைக்கு ஓடி வந்தான். மன்னர் முன்னிலையில் அவனைக் காவலாட்கள் கொண்டு நிறுத்தினர். அவையில் இருந்த தன் தந்தையைக் கட்டிக் கொண்ட மகன்,

“அப்பா! நீங்கள் பதில் எழுதிய ஓலையை அகத்திலேயே வைத்து வந்துவிட்டீர்! அம்மா தரச்சொன்னாரப்பா” என்றது மழலை மொழியில்.

இதைக் கேட்ட மன்னனுக்குக் குதூகலம். உடனே வெங்கடேச நம்பியை மேடை ஏறித் தன் பதிலை வாசித்துக் காட்டக் கட்டளையிட்டான்.

அது முந்தைய இரவு நம்பி வாணிக்கு எழுதி வைத்துப் படுத்த ஆற்றாமைக் கவிதை. அதை எடுத்து வாசித்தான்.

”காதளவு அமையும் காக்காய் மீசையும்”

முதல்வரியை வாசித்ததும் மன்னன் முரைத்தான். நம்பி நடுங்கியபடியே தொடர்ந்தான்.

”மாதுளைக் கொங்கை மார்புக ளுரசுங்

கருவுரு வத்தான் காவல னென்கோ!”

அடுத்த இரண்டு வரிகளைக் கேட்டதும் மன்னன் கணைத்தான்.  

”அறிவி லாதவன் அரைந்தனன் முரசம்!

சிறுவுரு வத்தான் சிறப்புக ளெய்தி

உறுமர சாங்கம் உரைகெனச் சொன்னான்!

மொழியா புலவர் முழுதலை கொய்ய

வழிசெய் குவனாய் வஞ்சின முற்றே!”

என்று நம்பி படிக்க,

“விடையைச் சீக்கிரம் சொல்வாய் புலவனே” என்று சத்தமிட்டான் மன்னன்.  

நம்பி விரைவாய்த் தொடர்ந்தான்,

”யானெவண் செய்கோ யாழுடை மாதே

யானெவண் விடையை பகர்வன்! சொன்மின்!

தென்கரை ஆளும் தேசுடை யவனே

என்குறை கேளாய் வறுமைக் கரையாம்!

மீன்கொடி கொண்டான்! மிளிர்விலன் யானே!

வான்குடை கொண்டான்! வானமெ னக்கே!

அஞ்சா வரசன் அமைச்சருங் கோடி

எஞ்சாண் அரசன் எலும்பே சேவகர்

ஒன்பது துவாரம் உடலின மைச்சாம்!

என்நிலை கண்டாய் எழில்கலை வாணி

உண்மை பதிலை உரைத்திடு நீயே!!”

என்று அவன் வேகமாகப் பாடி முடித்ததும். மன்னன் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி. தன் குழப்பத்தைத் தெளிய வைத்த புலவனின் தோள்களைக் குலுக்கி வாழ்த்தினான்.

அப்போது அங்கு நுழைந்தான் நாரதன்.

“என்னப்பா பராக்ரமா! நான் சொன்னது சரிதானே!”

“சரிதான் முனிவரே சரிதான்! எங்கள் நாட்டு இளம் புலவன் அதற்கான விடையைக் கூறிவிட்டான் பார்த்தீர்களா!”

“சரி! சரி! அவனது விடை உனக்கு மட்டும் புரிந்தால் போதுமா? ஊர் மக்கள் அறிய இந்நிகழ்ச்சியை நீ ஓர் கல்வெட்டில் பொறிக்க வேண்டாவா?”

“சரியாகச் சொன்னீர்கள் நாரதரே! யாரங்கே இங்கிருக்கும் மாணிக்கக் குவியல்களை அனைத்துப் புலவர்களுக்கும் கொடுங்கள். வெங்கடேச நம்பி பாடலையும் இந்நிகழ்வினையும் கல்வெட்டில் பதியுங்கள். அது நம் தமிழ்ச்சங்க வளாகத்தில் நாட்டப்படட்டும். நாரத மகாமுனிவர் அதைத் திறந்து வைப்பார்”

என்று சந்தோஷமாக ஆணையிட்டான்.

தமிழ்ச்சங்க வளாகத்தில் கம்பீரமாக இந்நிகழ்ச்சி பதிக்கப்பட்ட கல்வெட்டு எழுப்பப் பட்டது, அதில்,

“காது வரைக்கும் காக்கை பறப்பது போன்று மீசையினை உடைய, பெண்களின் மாதுளைப் பழம் போன்ற கொங்கைகளை உரசி விளையாடும் கருப்பு நிறத்து அரசன்! எங்களுடைய காவலன்! அறிவில் சூரியனுக்கு நிகரானவன், அறிவு கேட்டத் தனமாக, “உலகில் சிறிய அரசாங்கம் எது?” என்ற கேள்வியை எங்களிடம் கேட்டான். அதற்குப் பதில் சொல்லாதவர்கள் தலை துண்டிக்கப்படும் என்னும் நிபந்தையும் விதித்தான்.

நான் என்ன செய்வேன்! கையில் வீணையைக் கொண்டிருப்பவளே! நான் எப்படி இதற்கான விடையை உரைப்பேன்? அவனோ தெற்குக் கடற்கரை மொத்ததையும் ஆள்பவன். நானோ வறுமையே கரையாகக் கொண்டு வாழ்பவன். அவனுக்கும் மீன் கொடி உண்டு. எனக்கு என்ன கொடி உண்டு? வானம் போன்ற பெருங்குடையை உடையவன் மன்னன், எனக்கு வானம்தான் குடையே!

அவன் அஞ்சாத அரசன். அவனுக்கு அமைச்சரும் கோடிபேர் உண்டு. நான் என்னுடைய எட்டு ஜான் உடலுக்கு மட்டுமே அரசன். எனக்கு என் எலும்புகளே சேவகர்கள். என்னுடைய ஒன்பது துவாரங்களே என் உடலுடைய அமைச்சர்கள். என்னுடைய நிலை உனக்குத் தெரியும்! எனக்கு இதற்கான விடையைக் காட்டி காப்பாற்றுக வாணியே!”

என்ற பொருள் இடம்பெற்றிருந்தது.


Comments

Popular Posts