ஆத்தாடி ஆத்தா | நவராத்திரி கவிதைகள் 2019


நவராத்திரி முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடல் நிகழும் பேற்றினைப் பராசக்தி கொடுக்கிறாள். அவள்தான் பாட்டுக்கு இறைவி ஆயிற்றே! இதோ 2019 ஆம் ஆண்டின் முதல் பாடல்... 

ஆத்தாடி நம்மவூரு ஆத்தா! என்ன 
ஆளில்லா நேரத்துல பார்த்தா! ஒரு 
அன்பால பாடச்சொல்லி கேட்டா! அதுல 
அடிக்கு அடி மடியில் தாளம் போட்டா! 

ஆமாண்டா ஆத்தா! தாளம் போட்டா! 

காத்தாடி வுட்டுக்கிட்டா காலமெல்லாம் சிரிச்சிக்கிட்டா 
கண்ணசரும் நேரத்துல நெஞ்சுக்குள்ள ஒளிஞ்சிகிட்டா 
பார்த்துத் தேணருறெண்டா பக்கம் பக்கமா பதறுறெண்டா! 
பாட்டுக்குள்ள ஒளிஞ்சு சிரிக்கும் பராசத்திய தேடுறெண்டா! 

முழுசா அவனெனப்பு முதுகுதண்டுல குறுகுறுப்பு 
மொத்தமா ராத்திரியில பத்துதரம் கண்விழிப்பு 
அழகா நின்னவடா! அசடுபோல சிரிச்சவடா! 
அடிக்கடி சிரிப்புச் சத்தம்! மொகத்த மட்டும் காணலடா! 

ஆமாண்டா ஆத்தா! தாளம் போட்டா!

தோளுல ஊஞ்சகட்டி தூளியாட்டி சிரிச்சவடா 
தொட்டுத்தொட்டு அகல்வெளக்க பத்திரமா பார்த்தவடா! 
காளி மாரியின்னு பாட்டுப்பாட குதிச்சவடா 
கண்ணுல சிக்காதத்தான் தேடவுட்டு ஒளிஞ்சவடா! 

உள்பக்கம் திரும்பிக்கிட ஒருபயலும் நெனப்பதில்ல 
ஒடனே நெனச்சாலும் திரும்பிப் பார்க்க தெரியவில்ல 
துள்ளுற காட்டெலிய தூக்கியொரு வளையில்வெச்சா 
தூணுக்குப் பின்னால அவ உடுக்குசத்தம் ஒலிக்குமடா! 

ஆமாண்டா ஆத்தா! தாளம் போட்டா!!

-விவேக்பாரதி
28.09.2019

Comments

Popular Posts